கும்பகோணம் பள்ளி தீ விபத்து: ”அழுகை சத்தம் இப்போதும் மறையவில்லை” - நினைவு தினத்த...
`தவெக புதிய தொழிற்சங்கம்; நீண்ட கால ரசிகரை தலைவராக்கும் முதல்வர் விஜய்?' - திட்டத்தின் பின்னணி!
திமுக, அதிமுக, கம்யூனிஸ்டுகளை போல தவெகவுக்கும் தொழிற்சங்கத்தை ஆரம்பிக்கும் முடிவில் இருக்கிறார் முதல்வர் விஜய். இந்த தொழிற்சங்கத்தின் தலைவராக தனது நீண்ட நாள் ரசிகர் ஒருவரின் பெயரையும் விஜய் டிக் அடித்து வைத்திருக்கிறாராம்.

2024 பிப்ரவரி 2 ஆம் தேதி தவெக கட்சி தொடங்கப்பட்டது. அந்த ஆண்டு அக்டோபரில் விக்கிரவாண்டியில் முதல் மாநில மாநாடு நடத்தப்பட்டது. அப்போதிருந்தே தவெகவுக்கென தொழிற்சங்கத்தை தொடங்க வேண்டும் என்கிற கோரிக்கை நிர்வாகிகள் மத்தியில் எழுந்திருந்தது.
மற்ற கட்சிகளின் தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் சிலருமே தவெகவை அணுகி பேசியிருந்தனர். ஆனால், கட்சிக்கான நிர்வாகிகளை நியமித்து முடிப்பதற்குள்ளாகவே தேர்தல் நெருங்கிவிட்டதால் தொழிற்சங்கம் ஆரம்பிக்கும் வேலைகளை ஓரமாக வைத்துவிட்டனர். தேர்தலில் வென்று ஆட்சியை பிடித்துவிட்டதால் இப்போது மீண்டும் தொழிற்சங்கம் ஆரம்பிக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது. மேலும், எல்லா துறைகளிலும் திமுக, அதிமுகவின் தொழிற்சங்கத்தினர் நமக்கு நிறைய இடையூறுகளை கொடுக்கின்றனர்.

அவர்களை சமாளிக்க நம்மிடமும் வலுவான தொழிற்சங்கம் வேண்டுமென தலைமையிடம் எடுத்துக் கூறியிருக்கின்றனர். இதைத் தொடர்ந்தே தொழிற்சங்கம் அமைக்கும் பணிகள் வேகமெடுத்திருக்கிறது. இந்நிலையில்தான் தொழிற்சங்கத்தின் தலைவருக்கு அதிக அதிகாரங்களை கொடுத்து அந்த பதவிக்கு கள்ளக்குறிச்சியை சேர்ந்த மாவட்டச் செயலாளர் பரணி பாலாஜியை அமர்த்த முடிவெடுத்திருக்கிறாராம் முதல்வர் விஜய்.
பரணி பாலாஜி 25 ஆண்டுகளுக்கும் மேலாக விஜய்யுடன் பயணித்து வருகிறார். தவெக, மக்கள் இயக்கமாக இருந்த காலக்கட்டத்தில் வடமாவட்டங்களில் 11 தொகுதிகளின் பொறுப்பாளராக இருந்திருக்கிறார். கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்தின் ஆதரவாளராக அறியப்படும் இவர், விக்கிரவாண்டி மாநாட்டை முன்னிறுந்து நடத்தியிருந்தார். அவருக்கு உரிய கௌரவத்தை வழங்க எண்ணி முதல்வர் இந்த முடிவை எடுத்திருப்பதாக கட்சி வட்டாரத்தில் கிசுகிசுக்கின்றனர்.
'வெற்றிப் பேரவை தொழிற்சங்கம்'
'வெற்றிப் பேரவை தொழிற்சங்கம்' என பெயர் வைக்க முடிவெடுத்திருப்பதாக சொல்லப்படும் நிலையில் அண்ணா தொழிற்சங்கத்திலிருந்து விலகி தவெகவில் இணைந்த மூத்த நிர்வாகியான கமலக்கண்ணன் இந்த தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளர் பொறுப்புக்கு டிக் அடிக்கப்பட்டிருப்பதாகவும் பனையூர் வட்டாரத்தில் கிசுகிசுக்கின்றனர்.

'விழுப்புரத்தின் பொறுப்பு அமைச்சர் பொதுச்செயலாளர் ஆனந்த்தான். அவரின் ஆதரவாளர் என்பதாலயே கட்சியின் சக மா.செக்களையும் நிர்வாகிகளையும் மதிக்காமல் 'நிழல் அமைச்சர்' போல செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் பரணி பாலாஜி என்கிறார்கள். அவருக்கு தொழிற்சங்கத்தின் தலைவர் பதவி கொடுக்கப்பட்டால் ஆட்டம் ஓவராக இருக்குமே' என வருந்துகின்றனர் வடமாவட்ட நிர்வாகிகள் சிலர்.!














