மோடியை நேரடி விவாதத்திற்கு அழைக்கும் ராகுல்; "நாடாளுமன்றமே சரியான இடம்" - நிர்மல...
Doctor Vikatan: மழை, குளிர் காற்று... சட்டென சளி பிடிக்காமலிருக்க இந்த உணவுகளைச் சாப்பிடுங்கள்!
Doctor Vikatan: எங்கள் வீட்டில் யாருக்குமே மழையும் குளிரும் ஒத்துக்கொள்வதில்லை. லேசான தூறலோ, குளிர் காற்றோ பட்டாலே உடனே தும்மல், மூக்கடைப்பு, சளி என சைனஸ் தொடர்பான பிரச்னைகள் படுத்த ஆரம்பித்து விடும்.
இந்தப் பிரச்னைகளில் இருந்து விடுபட, எப்படிப்பட்ட உணவுகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்... முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் இருந்தால் சொல்லுங்கள்.
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி

உடலில் கபம் (சளி) அதிகமாகும்போது, முகத்தில் உள்ள காற்றுப் பைகளில் நீர் கோத்துக்கொண்டு தொற்று (Sinus) ஏற்படுகிறது. வெந்நீர் குடிப்பது, நீர்க்கோவை மாத்திரையை உரசிப் பற்றுப் போடுவது போன்றவை உடனடி நிவாரணம் தரும்.
மிளகு, சீரகம், ஓமம் மூன்றையும் தலா ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து சுத்தமான துணியில் கட்டி முடிச்சிட்டு தண்ணீரில் சேர்த்துக் கொதிக்க வைக்க வேண்டும். அதை வடிகட்டி, அந்த நீரை நாள் முழுவதும் குடிநீராகப் பயன்படுத்தலாம்.
தேவைப்பட்டால் சிறிது துளசியையும் சேர்த்துக் கொள்ளலாம். இப்படிச் செய்தால் நெஞ்சில் சளி கட்டியிருந்தால் சரியாகும்.
ஆடாதோடா இலைகள், துளசி இலைகள், தூதுவளை இலைகள், சிறிது திப்பிலி சேர்த்துக் கொதிக்கவைத்த நீரை, கஷாயமாக வாரம் இரண்டு, மூன்று நாள்களுக்கு ஒருவேளை குடிக்கலாம். திப்பிலியை வெறும் கடாயில் லேசாக வறுத்துப் பொடித்துக்கொள்ளவும்.
அதை சிறிதளவு தேனில் குழைத்து தினம் சிறிது சாப்பிடலாம். இதுவும் நெஞ்சு சளியை விரட்டும். சிலருக்கு சளி இருக்காது. ஆனால், அடிவயிற்றிலிருந்து இருமல் மட்டும் தொந்தரவு செய்யும். அவர்கள் அதிமதுரம், சித்தரத்தை சேர்த்த கஷாயம் குடிக்கலாம்.

சளித் தொந்தரவு உள்ளவர்கள், குளிர்ச்சியான, மந்தத்தை ஏற்படுத்துகிற எந்த உணவையும் சாப்பிடக்கூடாது. சளி என்பது நெஞ்சுடன் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. வயிற்றில் மந்தம் உண்டானாலும் சளி வரும். வைரஸ் காய்ச்சல்களால் பாதிக்கப்படுவோருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் வருவதையும், ஒன்றிரண்டு நாள்களில் காய்ச்சல் போனாலும் சளி மட்டும் நீடிப்பதையும் பார்க்கலாம். அதனால்தான் வயிற்றைக் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
சளி அதிகமாக இருக்கும்போது செரிமானம் சரியாக இருக்காது. எனவே, இரவு 7 மணிக்குள் சாப்பிட வேண்டும். பிறகு துளசி, மஞ்சள் தூள் சேர்த்த வெந்நீரைக் குடிக்கலாம். பால் குடித்தே ஆக வேண்டும் என்பவர்கள், மஞ்சள்தூள், மிளகு, திப்பிலித் தூள் சேர்த்துக் கொதிக்கவைத்துக் குடிக்கலாம். ஆனால், மாலையில் குடிப்பதுதான் சிறந்தது.
பால் சேர்க்காத சுக்கு காபி, அதிமதுரம், தேன் கலந்த வெந்நீர் குடிக்கலாம். இரவில் தயிர்சாதம், கீரை போன்றவை கூடாது. குளிர்ச்சியான இடங்களில் வாக்கிங் செல்வது, அமர்ந்திருப்பது போன்றவற்றைத் தவிர்க்கலாம்.
இஞ்சி சேர்த்த டீ, இஞ்சி, கொத்தமல்லி, புதினா சேர்த்தரைத்த துவையல் சாப்பிடலாம். ஓமத்தை வறுத்துப்பொடித்துக் கொள்ளவும். அதை சிறிய துணியில் வைத்துக் கட்டி, அவ்வப்போது மூக்கின் அருகில் வைத்து இழுக்கலாம். இது மூக்கடைப்பை சரிசெய்து, சுவாசத்தை சீராக்கும். பாலில் மிளகுத் தூள் மற்றும் மஞ்சள் தூள் கலந்து குடிக்கலாம்.
நொச்சி, ஆடாதோடை, யூகலிப்டஸ் போன்ற இலைகளைப் போட்டு ஆவி பிடிக்கலாம். (இந்த இலைகளைக் கஷாயமாக உள்ளுக்குக் குடிக்கக் கூடாது). வெற்றிலையில் லேசாக நல்லெண்ணெய் தடவி, மிதமான சூடு செய்து மூக்கின் மேல் பகுதியில் வைக்கலாம்.
இது அதிக சூடாக இல்லாமல் பார்த்துக்கொள்ளவும். துளசி இலையைத் தண்ணீரில் கொதிக்க வைத்துக் குடிக்கலாம். சர்க்கரைநோய் இல்லாதவர்கள் இஞ்சியைக் கொதிக்க வைத்துப் பனங்கற்கண்டு சேர்த்து அருந்தலாம். புதினா இலைகளுடன் மிளகுத் தூள் சேர்த்துக் கொதிக்க வைத்துக் குடிக்கலாம்.

தனியா, சீரகம், மிளகு, பூண்டு ஆகிய நான்கையும் சேர்த்துச் செய்த கஷாயம் சைனஸிற்கு நல்லது. தூதுவளைக் கீரையைச் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கிச் சாப்பிடலாம். பூண்டைப் பாலில் வேகவைத்துச் சாப்பிடலாம். வெந்நீரில் கல் உப்பு மற்றும் மஞ்சள் தூள் கலந்து அடிக்கடி வாய்க் கொப்பளிக்க வேண்டும்.
அதிகாலையில் வெறும் வயிற்றில் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் கொண்டு நல்லெண்ணெய் கொப்பளிப்பது (Oil Pulling) சிறந்தது. மிளகை ஊசியில் குத்தி நெருப்பில் காட்டி வரும் புகையையோ அல்லது மஞ்சள் புகையையோ சுவாசிப்பது (புகை பிடித்தல்) சளியைக் குறைக்க உதவும்.
மழை மற்றும் பனிக்காலத்தில் கூடியவரை வெதுவெதுப்பான நீரையே நாள் முழுவதும் குடிப்பது நல்லது. மிளகு, சீரகம் இரண்டையும் சுத்தமான துணியில் கட்டி, தண்ணீரில் போட்டுக் கொதிக்கவைத்து அந்த நீரை வெதுவெதுப்பாக அவ்வப்போது குடிக்கலாம். எப்போதும் ஃப்ரெஷ்ஷான, சூடான உணவுகளைச் சாப்பிடுவது, குளிர்ச்சியான உணவுகளைத் தவிர்ப்பது போன்றவையும் முக்கியம்.
சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ள பிராணாயாமம் (மூச்சுப்பயிற்சி) முறையைச் சரியாகச் செய்து வரும்போது, தலைபாரம் மற்றும் சைனஸ் தொடர்பான பிரச்னைகள் நீங்கும்.
சித்த மருத்துவர் வரலட்சுமி:
சென்னை, அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவமனையில் பணிபுரிகிறார். இத்துறையில் 26 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.




















