அமெரிக்க மிட் டேர்ம் தேர்தல்: ட்ரம்பிற்கு ஆரம்பத்திலேயே பின்னடைவு; மக்கள் அதிருப...
Special Show: டிக்கெட் விலையை உயர்த்த கோரிக்கை; காலை 6 மணி காட்சிகளுக்கு அனுமதி; யாருக்கு லாபம்?
சிறப்புக்காட்சிகளுக்குத் தமிழக அரசு தற்போது அனுமதி வழங்கியிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு, தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கமும், தயாரிப்பாளர்கள் சங்கமும், திரையரங்க உரிமையாளர்கள் சங்கமும் இணைந்து சிறப்புக்காட்சிகளுக்கு தமிழக அரசிடம் அனுமதி கோரியிருந்தனர். மேலும், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் டிக்கெட் விலை உயர்வு உள்ளிட்ட இன்னும் சில கோரிக்கைகளையும் முன்வைத்திருந்தது.
அதன் முதற்கட்டமாகத் தமிழக அரசு சிறப்புக்காட்சிகளுக்கு அனுமதி அளித்திருக்கிறது. சிறப்புக்காட்சிகளுக்கு அனுமதி வழங்கியிருப்பது, டிக்கெட் விலையை உயர்த்துவதற்கு வைக்கப்பட்ட கோரிக்கை உள்ளிட்டவை எப்படியான மாற்றங்களை உண்டாக்கும், அதனால் ஏற்படும் சாதக, பாதகங்கள் என்னென்ன என்பது குறித்துத் தமிழ் திரைத்துறை வட்டாரத்தினரிடம் பேசி தொகுத்திருக்கிறோம்.

முதலில் பேசிய தயாரிப்பாளரும், நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொருளாளருமான தனஞ்செயன், "முன்னதாக 'வாரிசு', 'துணிவு' திரைப்படங்களின்போது அதிகாலை 5 மணி காட்சிகளின் போது துரதிர்ஷ்டவசமாக ஒரு ரசிகர் உயிரிழந்தார்.
நள்ளிரவு 4 மணிக்கே ரசிகர்கள் கூடுவதாலும், கட்-அவுட்களில் ஏறுவதாலும் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுகிறது என்பதைக் கருத்தில் கொண்டுதான் அரசு 9 மணி காட்சி என்ற கட்டுப்பாட்டைக் கொண்டு வந்தது. 'லியோ' படத்தின் போது தயாரிப்பாளர்கள் நீதிமன்றம் சென்றபோதிலும், அரசின் முடிவைத்தான் நீதிமன்றமும் உறுதி செய்தது.
ஆனால், 9 மணி காட்சி என்பது திரையுலகிற்குச் சில நடைமுறைச் சிக்கல்களை உருவாக்கியது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் வெளிநாடுகளில் காலை 6 மணிக்கே காட்சிகள் தொடங்கப்பட்டுவிடும்.
தமிழ்நாட்டில் 9 மணிக்கு முதல் காட்சி தொடங்குவதற்கு முன்பாகவே, அண்டை மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் படத்தைப் பார்த்தவர்கள் சமூக வலைதளங்களில் விமர்சனங்களைப் பதிவிட்டு, படத்தின் வெற்றியைப் பற்றி ஒரு நரேட்டிவ் உருவாக்கும் சூழல் ஏற்பட்டது.
இதனால் ரசிகர்கள் பலர் அண்டை மாநிலங்களின் எல்லைப் பகுதித் திரையரங்குகளுக்குச் சென்று படம் பார்க்கத் தொடங்கினர். இந்தச் சிக்கல்களைத் தீர்க்கவே நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் என அனைவரும் ஒன்றிணைந்து அரசிடம் கோரிக்கையை முன்வைத்தோம்.
இதன் நன்மைகளைப் பற்றி முதலமைச்சர் மற்றும் செய்தித்துறை அமைச்சரிடம் விவரித்தபோது, அவர்களும் இதிலுள்ள நியாயத்தைப் புரிந்துகொண்டு, இப்போது காலை 6 மணி காட்சிகளுக்கு அனுமதியளித்திருக்கிறார்கள். 6 மணிக்குத்தான் காட்சி என்பதால் ரசிகர்கள் காலை 5.30 மணிக்கு மேல்தான் திரையரங்கிற்கு வருவார்கள்.
இதனால் நள்ளிரவுக் கொண்டாட்டங்களும், அசம்பாவிதங்களும் தவிர்க்கப்பட்டு, போதிய காவல்துறையின் கட்டுப்பாடும் இருக்கும். உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் படம் வெளியாவதால், யாரோ ஒருவர் தவறான நேரேட்டிவை உருவாக்க முடியாது.
பெரிய திரைப்படங்களுக்கு முதல் நாளிலேயே கூடுதல் காட்சிகள் கிடைப்பதால், திரையரங்க உரிமையாளர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் வசூல் அதிகரிக்கும்" எனப் பகிர்ந்துகொண்டார்.

தொடர்ந்து சிறப்புக்காட்சி அனுமதி கொடுத்திருப்பது பற்றியும், டிக்கெட் விலையை அதிகரிக்க முன்வைத்த கோரிக்கை பற்றியும் பேசிய வெற்றி திரையரங்கின் உரிமையாளர் ராகேஷ் கெளதமன், "கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட பழைய அரசாணையில், ஒரு நாளைக்கு 4 காட்சிகள் மட்டுமே திரையிட முடியும் என்ற கட்டுப்பாடு இருந்தது.
அன்றைய காலகட்டத்தில் படங்கள் 3 மணி நேரமாக இருந்ததாலும், மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும் அந்த விதிமுறை உருவாக்கப்பட்டது. ஆனால், இன்றைய சூழலில் பெரும்பாலான படங்கள் 2 மணி நேரமாகவோ அல்லது ஆங்கிலப் படங்கள் ஒன்றரை மணி நேரமாகவோ சுருங்கிவிட்டன.
மேலும், இன்றைய ரசிகர்கள் ஒரு திரைப்படத்தை முதல் 3 நாட்களிலேயே பார்த்துவிட வேண்டும் என நினைக்கிறார்கள். 100 நாட்கள் ஓடிய காலமெல்லாம் மாறி, இப்போது பெரிய வெற்றியைப் பெறும் படங்களே 2 அல்லது 3 வாரங்கள் மட்டுமே தியேட்டரில் ஓடுகின்றன.
நாங்கள் கோரியபடி காலை 6 மணி முதல் நள்ளிரவு 2.30 மணி வரை 6 காட்சிகளுக்கு அனுமதி கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இதைத் தாண்டி இன்னும் சில கோரிக்கைகளையும் தமிழக அரசிடம் முன்வைத்திருக்கிறோம்.
அந்த காலத்தில் ஃபிலிம் ரோல்களை மாற்றுவதற்கு ஒவ்வொரு திரையிலும் ஆப்பரேட்டர்கள் தேவைப்பட்டனர். ஆனால் இன்று எல்லாமே டிஜிட்டல் மற்றும் ஆட்டோமேஷன் ஆகிவிட்டது.

செல்போன் மூலமாகவே அதனைக் கவனித்துக்கொள்ளும் அளவிற்குத் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. எனவே, இந்த விதிகளையும் மாற்றக் கோரியிருந்தோம்" என்றவர், "உலகிலேயே மிகவும் குறைந்த டிக்கெட் விலையில் சிறந்த தியேட்டர் அனுபவத்தைக் கொடுப்பது தமிழ்நாடுதான்.
ஐமேக்ஸ் தவிர்த்து, சிறந்த தொழில்நுட்பங்கள் கொண்ட சிங்கிள் ஸ்கிரீன் மற்றும் மல்டிப்ளெக்ஸ் தியேட்டர்கள் இங்குதான் உள்ளன. வருடந்தோறும் மின்கட்டணம், ஊழியர்களின் சம்பளம், பராமரிப்புச் செலவுகள் என எல்லாமே உயர்ந்துவிட்டன.
கடந்த 5 ஆண்டுகளாக எங்கள் டிக்கெட் விலை மாறவே இல்லை. ஒரு படத்தை ஓடிடியில் பார்க்க வேண்டுமா அல்லது தியேட்டரில் பார்க்க வேண்டுமா என்பதை ரசிகர்களே தீர்மானித்துவிடுகிறார்கள்.
தியேட்டரில் வெளியாகி 4 வாரங்களிலேயே படம் ஓடிடி தளத்திற்கு வந்துவிடுவதால், ரசிகர்கள் 'இன்னும் ஒரு வாரத்தில் ஓடிடிக்கு வந்துடுமே, தியேட்டருக்கு ஏன் போக வேண்டும்' என யோசிக்கத் தொடங்குகிறார்கள்.
தியேட்டர்களுக்கு 3-வது வாரத்தில்தான் 50-50% வருவாய் பங்கு கிடைக்கிறது. அந்த நேரத்தில் ஓடிடியில் படம் வெளியாகிவிடுவதால் திரையரங்குகளுக்குப் பெரிய வருவாய் இழப்பு ஏற்படுகிறது. ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டில் 8 வார ஓடிடி ரிலீஸ் முறையைப் பின்பற்றுகிறார்கள்.
திரையரங்க டிக்கெட் விலையை உயர்த்துவதால், ஓடிடியில் பார்த்துக்கொள்ளலாம் என யோசித்து தியேட்டருக்கு வராமல் இருக்கமாட்டார்கள். இரண்டிற்கும் வெவ்வேறு ஆடியன்ஸ் இருப்பதால் டிக்கெட் விலை அதிகரிப்பதால் திரையரங்கிற்கு வரும் மக்களின் எண்ணிக்கை குறையாது" எனப் பேசினார்.

இது பற்றிய தன்னுடைய பார்வையைப் பகிர்ந்துகொண்ட சினிமா ஆர்வலரும், இயக்குநருமான கேபிள் ஷங்கர், "காலை சிறப்புக்காட்சிக்கு அனுமதி கொடுத்திருக்கிறார்கள் என்பதால் தமிழ் சினிமா உடனடியாக உயர்ந்துவிடும் என்றெல்லாம் சொல்ல முடியாது.
இது முழுக்க முழுக்கப் பெரிய படங்களுக்கும், அந்தப் பெரிய படங்களை எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் மட்டுமே பயனளிக்கக்கூடிய ஒரு விஷயம். இது பெரிய படங்களின் வியாபாரத்திற்காக மட்டுமே செய்யப்பட்ட ஒரு விஷயம்.
இதனால் ஒட்டுமொத்தத் தமிழ் சினிமாவுக்கோ எந்தப் பெரிய மாற்றமும் வந்துவிடப் போவதில்லை" என்றவர், "ரூ. 250-க்கு மேல் டிக்கெட் விலையைக் கொண்டு செல்வது மிகவும் அதிகம். மேலும், இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை தானாகவே கட்டணத்தை உயர்த்திக்கொள்ள அனுமதி கேட்பதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
டிக்கெட் கட்டணத்தை ரூ.250-ஆக உயர்த்தும்போது, 'இவ்வளவு காசு கொடுத்து இந்தப் படத்தைப் பார்க்க வேண்டுமா?' என யோசித்து, மக்கள் தியேட்டருக்கு வருவதைக் குறைத்துக்கொள்ள நிச்சயமாக வாய்ப்புள்ளது" எனப் பகிர்ந்துகொண்டார்.
அனைவரும் எவ்வித வேறுபாட்டையும் பார்க்காமல் நேரத்தை செலவழிக்கும் ஒரே இடம் திரையரங்கம்தான். அனைவருக்குமானதாக டிக்கெட் விலை நியாயமாகவும், அந்தத் திரையரங்கிற்கு வரும் மக்களின் பாதுகாப்புமே மிகவும் முக்கியம். அதற்கேற்ப டிக்கெட் விலை நிர்ணயமும், சிறப்பு காட்சிகளுக்கான திட்டமிடல்களும் அமைய வேண்டும்!


















