Bigg Boss Tamil: "வேறு யாரையோ காப்பாத்த அப்படிப் பண்ணியிருக்கலாம்!" - வெளியேறினா...
Doctor Vikatan: டெங்கு காய்ச்சல்... மீண்டு வரும் நிலையிலும் பிரச்னைகள் தொடர்வது ஏன்?
Doctor Vikatan: டெங்கு காய்ச்சல் பரவிக் கொண்டிருக்கும் நிலையில் அதிலிருந்து மீள்வதே பெரும் சவாலாக இருக்கிறது. இந்நிலையில், சிலர், நோயிலிருந்து குணமான பிறகும் அதன் பின் விளைவுகளில் இருந்து முழுமையாக மீள முடியவில்லை என்கிறார்களே... அது உண்மையா? டெங்கு காய்ச்சல் குறைந்தாலும் மற்ற பின் விளைவுகள் தொடருமா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் குமாரசாமி

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களில் சுமார் 2 சதவிகித மக்களுக்கு ‘டெங்கு அதிர்ச்சி நோய்க்குறி’ (Dengue Shock Syndrome - DSS) எனும் ஆபத்தான பின்விளைவு ஏற்பட வாய்ப்புள்ளது. இது டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருக்கும்போதோ, நோயாளி குணமடைந்து வரும் நேரத்திலோ அல்லது முழுமையாகக் குணமடைந்த பிறகோகூட ஏற்படலாம்.
இது சில சமயங்களில் உயிருக்கே ஆபத்தாக (Life-threatening) முடியக்கூடிய ஒரு நிலையாக மாறலாம். டெங்கு வைரஸ் தொற்றின் தீவிர பின்விளைவாகவே இது ஏற்படுகிறது. இதன் காரணமாக நோயாளியின் ரத்த அழுத்தம் (BP) திடீரென குறையும். இதனால் உடலின் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு (Circulatory failure), இதயச் செயலிழப்பும் (Cardiac failure) ஏற்படக்கூடும்.
உடலுக்குள் செல்லும் டெங்கு வைரஸிற்கு எதிராக நமது நோய் எதிர்ப்பு மண்டலம் (Immune system) அளவுக்கு அதிகமாக எதிர்வினையாற்றுகிறது. இதனால் ‘சைட்டோகைன்கள்’ (Cytokines) மற்றும் சில வேதியல் சிக்னல்கள் (Chemical signals) தூண்டப்படுகின்றன. இதன் விளைவாக, ரத்தக் குழாய்களில் மிகச்சிறிய துளைகள் ஏற்பட்டு, அவற்றில் உள்ள திரவம் (Plasma) வெளியே கசியத் தொடங்குகிறது.
இந்தத் திரவம் நுரையீரல் அல்லது வயிற்றுப் பகுதியில் சென்று தேங்கக்கூடும் (Plasma leakage). இதனால் ரத்த அழுத்தம் பெருமளவு குறைந்து, நோயாளி அதிர்ச்சி (Shock) நிலைக்குச் செல்கிறார்.

இந்நிலை சிலருக்குத் தொற்றின் ஆரம்பகட்டத்திலேயே தோன்றலாம். ஆனால், பொதுவாக, காய்ச்சல் கண்டறியப்பட்டு ஐந்து முதல் ஆறு நாள்களுக்குப் பிறகே இந்நிலை ஏற்படும்.
'டெங்கு ஷாக் சிண்ட்ரோம்' அறிகுறி தென்பட்டால், நோயாளியை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும். பெரும்பாலான நேரங்களில் இவர்களைத் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) வைத்தே பராமரிக்க வேண்டும். நரம்பு வழியே (IV) திரவங்கள் செலுத்துதல், ஆக்ஸிஜன் சிகிச்சை (Oxygen therapy) மற்றும் தேவைப்பட்டால் ரத்தம் செலுத்துதல் போன்ற தீவிர பராமரிப்புகள் வழங்கப்பட வேண்டும். ரத்தத் தட்டணுக்களின் (Platelets) எண்ணிக்கை குறையும் பட்சத்தில், ரத்தத் தட்டுக்கள் தனியாகச் செலுத்தப்படும்.
டாக்டர் குமாரசாமி:
சென்னை, விஹெச்எஸ் மருத்துவமனையில் தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவராக இருக்கிறார்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


















