"சின்னப் படங்கள் வரக்கூடாதா?"- ஜெயிலர்-2 ரிலீஸ்; கலங்கிய 'டிரோன்ஸ்' தயாரிப்பாளர்
Extremely Heavy Rain: ஒரே இரவில் கொட்டித் தீர்த்த மழை - உருக்குலைந்த குன்னூர் மலைப்பாதை!
நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், நேற்று மாலை முதல் மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை பொழியத் தொடங்கியுள்ளது. குறிப்பாக குன்னூர், கோத்தகிரி, ஊட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நள்ளிரவில் இடைவிடாது கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. குறைந்த நேரத்தில் பெய்த மிக அதிக கனமழையால் நீரோடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியுள்ளது.

காட்டாற்று வெள்ளம் போல் தாழ்வான பகுதிகளில் ஆர்ப்பரித்ததால் குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையின் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. பர்லியார் அருகில் ஏற்பட்ட நிலச்சரிவில் அரசு பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் சிக்கியுள்ளன. பல இடங்களிலும் மரங்கள் சாலையின் குறுக்கே வேருடன் சாய்துள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மண்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நீலகிரி மாவட்டத்தில் பல பகுதிகளிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில்,கொடநாடு உள்ளிட்ட சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டுள்ளன.
எதிர்பார்த்த அளவை விட அதிகமாக மழை பெய்து வருவதால் ஊட்டிக்கு சுற்றுலா செல்வதைத் இரண்டு தினங்களுக்கு தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மாவட்டம் முழுவதும் 20- ற்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. 18 மரங்கள் விழுந்துள்ளன. 5 குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன. வாகனங்களில் சிக்கியுள்ளவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை. குன்னூர், கோத்தகிரி, குந்தா ஆகிய மலைப்பாதைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மலை ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக பார்லிரில் 250 மில்லி மீட்டர் மழையும் கீழ் கோத்தரியில் 200 மில்லி மீட்டர் மழையும் எடப்பள்ளி 161 மில்லி மீட்டர் மழை என மொத்தமாக மாவட்டத்தில் ஒரே இரவில் 2152.6மில்லி மீட்டர் மழை பெய்துள்ளாதால் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர் கமலி ஆகியோர் மீட்பு பணிகளை பார்வையிட்டு வருகின்றனர்.


















