"சின்னப் படங்கள் வரக்கூடாதா?"- ஜெயிலர்-2 ரிலீஸ்; கலங்கிய 'டிரோன்ஸ்' தயாரிப்பாளர்
காரைக்குடி: காதலனின் நண்பனுடன் வெளியேறிய காதலி - கொலையில் முடிந்த முக்கோணக் காதல் கதை
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள சாலிகிராமத்தைச் சேர்ந்தவர் சின்னராஜ் (32). இவர் காரைக்குடி அருகே ஓ.சிறுவயல் சாலையில் உள்ள உணவகத்தில் பணிபுரிந்து வந்தார். இவரும், அதே பகுதியைச் சேர்ந்த வெண்ணிலா என்ற பெண்ணும் திருமணமாகாமலேயே ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.
சிறைச் சாலை நட்பு... சிதைந்த வாழ்க்கை!
சின்னராஜ் மற்றும் வெண்ணிலா மீதான கஞ்சா வழக்குகள் நிலுவையில் இருக்க, ஒரு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார் சின்னராஜ். அந்தச் சிறைவாசத்தின் போதுதான், ராமேஸ்வரம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த நம்பு முனீஸ்வரனுடன் இவருக்கு நட்பு மலர்ந்துள்ளது. சிறை தண்டனை முடிவிட்டு வெளியே வந்த பின்னரும் இந்த நட்பு தொடர்ந்திருக்கிறது.
வெளியில் உணவகத்தில் வேலை பார்த்து வந்த சின்னராஜ், தன் நண்பன் நம்பு முனீஸ்வரனை ஒருநாள் வீட்டுக்கு அழைத்து வந்து வெண்ணிலாவுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். ஆனால், அந்த அறிமுகம் ஒரு கொடூர விபரீதத்திற்கு வழிவகுக்கும் என்பதை சின்னராஜ் ஆரம்பத்தில் அறியவில்லை. நம்பு முனீஸ்வரனுக்கும் வெண்ணிலாவுக்கும் இடையே இருந்த பழக்கம் நாளடைவில் எல்லை மீறிச் சென்றுள்ளது.
வெடித்த கோபம்... ஓடிப்போன ஜோடி!
தன் வீட்டிலேயே நண்பனும் காதலியும் நெருங்கிப் பழகுவதை அறிந்து அதிர்ந்துபோன சின்னராஜ், கடும் கோபத்தில் இருவரிடமும் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். இந்தத் தினசரித் தொல்லையால் வெறுத்துப்போன வெண்ணிலா, சின்னராஜை விட்டுவிட்டு நம்பு முனீஸ்வரனுடன் கைகோர்த்து ஓட்டம் பிடித்தார். இருவரும் தேவகோட்டையில் ஒரு வாடகை வீட்டில் குடித்தனம் நடத்தி வந்தனர்.
தன்னுடன் வாழ்ந்தவள் தன் கண்முன்னே நண்பனுடன் கைகோர்த்துச் சென்றதை ஏற்றுக்கொள்ள முடியாத சின்னராஜ், ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்றார். ஒவ்வொரு இரவும் குடித்துவிட்டு அந்த செல்போன் எண்ணிற்குத் தொடர்பு கொண்டு தகராறு செய்வதையே வாடிக்கையாகக் கொண்டிருந்தார். "உங்க ரெண்டு பேரையும் உயிரோட விடமாட்டேன், சீக்கிரமே தீர்த்துக்கட்டுறேன்" என்று தொடர்ந்து மிரட்டல்களையும் விடுத்து வந்துள்ளார்.
நள்ளிரவில் ஸ்கெட்ச்!
தொலைபேசியில் விடுத்த மிரட்டல்களால் ஆத்திரமடைந்த நம்பு முனீஸ்வரன், சின்னராஜை எப்படியாவது தீர்த்துக்கட்ட வேண்டும் என்று திட்டமிட்டார்.
இதற்காக நள்ளிரவு தனது நண்பன் ராமசாமியுடன் சேர்ந்து, மதுபோதையில் டூவீலரில் காரைக்குடிக்கு வந்து இறங்கினர். உணவகத்தில் வேலையை முடித்துவிட்டு, அப்போதும் மதுபோதையில் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் நின்றுகொண்டிருந்த சின்னராஜைக் கண்ட அந்த கும்பல், அவரை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டது.
நிலைமை முற்றியதும், தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள் மற்றும் கூர்மையான கத்தியை வெளியில் எடுத்த இருவரும், சின்னராஜை அங்கு வைத்து சரமாரியாக வெட்டிச் சாய்த்தனர். ரத்த வெள்ளத்தில் பலத்த காயங்களுடன் கிடந்த சின்னராஜ் குறித்து தகவலறிந்த குன்றக்குடி போலீசார் விரைந்து வந்தனர்.
வழியில் பறிபோன உயிர்!
சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் குன்றக்குடி போலீசார், உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த சின்னராஜை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக காரைக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே சின்னராஜின் உயிர் பிரிந்தது.
போலீசாரின் அதிரடி வேட்டை!
இந்தச் கொலைச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் குன்றக்குடி போலீசார், நம்பு முனீஸ்வரர் மற்றும் அவரது நண்பர் ராமசாமி ஆகியோரை கைது செய்துள்ளனர். மேலும், சின்னராஜின் மனைவி வெண்ணிலாவுக்கும் இந்தக் கொலையில் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே பரப்பரப்பான சூழலில், சிவகங்கை மாவட்டத்தில் நண்பனே காதலியைத் தூக்கிச் சென்ற விவகாரத்தில் அரங்கேறியுள்ள இந்தத் துணிகரக் கொலை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.



















