Gym Guys! Half Boil, பச்சை முட்டை சாப்பிடாதீங்க; 'இந்த' முறையில் சாப்பிடுவது தான...
Gym Guys! Half Boil, பச்சை முட்டை சாப்பிடாதீங்க; 'இந்த' முறையில் சாப்பிடுவது தான் Right!
ஜிம்முக்குச் செல்பவர்கள், தசைகளை வலுப்படுத்த விரும்புபவர்கள் பலரும் பச்சை முட்டையையும், ஹாஃப் பாயிலையும் புரதத்துக்காகத் தேர்வு செய்கிறார்கள்.
ஆனால், ஹாஃப்பாயில் முட்டையில்தான் சத்து அதிகமா? முழுமையாக வேகவைத்த முட்டையைச் சாப்பிட்டால் அதே பலன் கிடைக்காதா? பச்சை முட்டை சாப்பிடுவதால் ஆபத்து இருக்கிறதா? இதுகுறித்து விளக்குகிறார் டயட்டீசியன் காமேஸ்வரி.
“முட்டை உயர்தரப் புரதம், வைட்டமின் பி12, கோலின் போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்த சிறந்த உணவு என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், அதன் முழுச் சத்தையும் பெற ஹாஃப் பாயில் சாப்பிட வேண்டிய அவசியமில்லை.”

செரிமானத் திறன் யாருக்கு அதிகம்?
“பச்சை அல்லது ஹாஃப்பாயில் முட்டையை விட நன்றாகச் சமைத்த முட்டையிலிருந்துதான் நமது உடல் புரதத்தை அதிக அளவில் உறிஞ்சுகிறது.
The Journal of Nutrition இதழில் வெளியான மனித ஆய்வில், சமைத்த முட்டைப் புரதத்தின் செரிமானத் திறன் சுமார் 91% ஆகவும், பச்சை முட்டையின் செரிமானத் திறன் வெறும் 51% ஆகவும் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
அதேபோல், இந்தியர்களிடம் நடத்தப்பட்ட ஆய்விலும், வேகவைத்த முழு முட்டையின் அமினோ அமில செரிமானத் திறன் 89.4% ஆக இருந்ததாக உறுதியாகியுள்ளது.
பச்சை முட்டையின் வெள்ளைக் கருவில் உள்ள ‘அவிடின்’ (Avidin) என்ற பொருள், உடலில் பயோட்டின் (Biotin) சத்து உறிஞ்சப்படுவதைத் தடுத்துவிடும். முட்டையை வேகவைக்கும்போது இது செயலிழந்துவிடுகிறது.
எனவே, உடலமைப்பை மேம்படுத்த நினைப்பவர்கள் நன்றாக வேகவைத்துச் சாப்பிடுவது நல்லது."
ஒளிந்திருக்கும் பாக்டீரியா ஆபத்து!
ஹாஃப் பாயிலில் இருக்கும் ஆபத்து குறித்துப் பேசும்போது, “முட்டையின் வெள்ளைக்கருவோ, மஞ்சள்கருவோ முழுமையாக வேகாமல் இருந்தால், அதில் Salmonella (சால்மோனெல்லா) போன்ற நோய்க்கிருமிகள் உயிருடன் இருக்கக்கூடும்.

முட்டை பார்ப்பதற்குச் சுத்தமாகத் தெரிவதால் மட்டுமே அது பாதுகாப்பானது என்று கூற முடியாது. இந்தக் கிருமியால் கடுமையான வயிற்றுப்போக்கு, காய்ச்சல், வாந்தி மற்றும் வயிற்றுவலி ஏற்படலாம்.
குறிப்பாக, ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்கள் ஹாஃப் பாயில் சாப்பிடுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.”
பாதுகாப்பான வழி எது?
முட்டையின் வெள்ளைக்கரு, மஞ்சள்கரு இரண்டுமே நன்றாக வேகும் வரை சமைத்துச் சாப்பிடுவதுதான் பாதுகாப்பானது. முட்டையின் உள் வெப்பநிலை 71°C-ஐ எட்டும் வரை சமைக்க வேண்டும்.
ஹாஃப்பாயில் முட்டையைச் சாப்பிட விரும்பினால், பேஸ்டுரைஸ் செய்யப்பட்ட முட்டைகளைத் தேர்வு செய்வது நல்லது. முட்டையின் முழுமையான சத்துகளைப் பெற ஹாஃப் பாயிலோ அல்லது பச்சை முட்டையோ சாப்பிட வேண்டிய அவசியமில்லை.
இரண்டு பகுதிகளும் நன்றாக வேகும் வரை சமைத்து, பாதுகாப்பான முறையில் உண்பதுதான் உடலுக்கும் ஆரோக்கியத்திற்கும் மிகவும் சிறப்பான தேர்வாகும்.
















