செய்திகள் :

Hockey Junior World Cup : மதுரையில் இளையோர் உலகக் கோப்பை - முதல் போட்டியில் அசால்ட் செய்த ஜெர்மனி!

post image

மதுரை, தமிழ்நாடு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 14-வது சர்வதேச ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஜெர்மனி அணி மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

இந்த போட்டியை, இந்திய ஹாக்கி பொதுச் செயலாளர் போலா நாத் சிங் தொடங்கிவைத்தார். தமிழக வணிக வரி, பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி வீரர்களை கை குலுக்கி வரவேற்றார்.

இரண்டு நாட்டு தேசிய கீதத்துடன் விறுவிறுப்பாக தொடங்கிய போட்டியில் முதல் கால் பாதியின் முடிவில் ஜெர்மனி 0 தென் ஆப்பிரிக்கா 0 என இரு அணிகளும் கோல் அடிக்காமல் சமநிலையில் இருந்தனர்.

ஆனால் இரண்டாம் கால் பாதி தொடங்கிய சற்று நேரத்தில் முதல் கோலை அடித்து அசத்தியது ஜெர்மனி அணி. பின்பு சற்று தொய்வாக சென்று கொண்டிருந்த போட்டியில், பெனால்டி கார்னரை வழங்கியது தென் ஆப்பிரிக்கா அணி. இதை பயன்படுத்தி தன்னுடைய இரண்டாம் கோலை அடித்து முன்னிலையை தக்கவைத்தது, ஜெர்மனி அணி.

இரண்டாம் பாதி தொடங்கி சற்று நேரத்தில், போட்டியின் நான்காவது பெனால்டி கார்னரை பயன்படுத்தி ஜெர்மனி அணியின் கேப்டன், கிராண்டர் பால் அணிக்காக மூன்றாவது கோலை அடித்தார்.

தென் ஆப்பிரிக்கா அணி ஒரு கோலாவது அடித்தே தீர வேண்டும் என்ற பதட்டம் இருந்த நிலையில், ஜெர்மனி அணி தன்னுடைய நான்காவது கோலை அடித்து ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தது.

போட்டியின் இறுதியில் நடப்பு சாம்பியனான ஜெர்மனி அணி 4-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தியது.