சென்னையில் விடாது மழை பெய்வது ஏன்? சென்னை, திருவண்ணாமலைக்கு `ஆரஞ்சு' அலர்ட்!
Hockey Men's Junior WC: சுவிட்சர்லாந்தை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய இந்தியா; மற்ற 7 அணிகள் எவை?
ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை நவம்பர் 28-ம் தேதி முதல் தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது.
மதுரை மற்றும் சென்னையில் நடைபெறும் இத்தொடரில் பங்கேற்றுள்ள 24 அணிகள் மொத்தம் 6 குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
இதில், `பி' குழுவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் இரு லீக் போட்டிகளில் சிலி அணியை 7 - 0 எனவும், ஓமன் அணியை 14 - 0 எனவும் வீழ்த்தியது.

இந்த நிலையில், லீக் சுற்றின் கடைசி போட்டியாகவும், தனது கடைசி லீக் போட்டியாகவும் மதுரையில் சுவிட்சர்லாந்து அணியை இந்தியா எதிர்கொண்டது.
இந்திய அணியைப் போலவே தனது முதல் இரு லீக் போட்டிகளை வென்ற சுவிட்சர்லாந்து அணி இந்த ஆட்டத்தில் இந்தியாவிடம் தடுமாறியது.
ஆட்டத்தின் முதற்பாதியில் 4 - 0 என முன்னிலை பெற்ற இந்திய அணி இரண்டாம் பாதியிலும் எதிரணியை கோல் அடிக்க விடாமல் தடுத்ததோடு கூடுதலாக ஒரு கோல் அடித்து 5 - 0 என வென்றது.
தொடர்ச்சியாக மூன்று வெற்றிகள் மூலம் `பி' குழுவில் முதலிடத்துக்கு முன்னேறியது இந்தியா.

நேற்று நடைபெற்ற மற்ற போட்டிகளில், கொரியாவை 3 - 1 என ஆஸ்திரேலியாவும், மலேசியாவை 3 -1 என இங்கிலாந்தும், வங்காளதேசத்தை 3 - 2 என பிரான்ஸும், ஆஸ்திரியாவை 11 - 0 என நெதர்லாந்தும், ஓமனை 2 - 0 என சிலியும், எகிப்தை 10 - 0 பெல்ஜியமும், நமீபியாவை 13 - 0 ஸ்பெயினும் வென்றன.
லீக் போட்டிகள் 6 குழுவிலும் முதலிடம் பிடித்த 6 அணிகள் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறும்.
அதன்படி, `ஏ' குழுவில் முதலிடம் பிடித்த ஜெர்மனி, `பி' குழுவில் முதலிடம் பிடித்த இந்தியா, `சி' குழுவில் முதலிடம் பிடித்த அர்ஜென்டினா, `டி' குழுவில் முதலிடம் பிடித்த ஸ்பெயின், `இ' குழுவில் முதலிடம் பிடித்த நெதர்லாந்து, `எஃப்' குழுவில் முதலிடம் பிடித்த பிரான்ஸ் ஆகிய 6 அணிகள் காலிறுத்திச் சுற்றுக்கு முன்னேறியிருக்கின்றன.
மேலும், காலிறுதிச் சுற்றுக்கு காலியாக இருக்கும் 2 இடங்களுக்கு ஒவ்வொரு குழுவிலும் இரண்டாமிடம் பிடித்த அணிகளில் டாப் 2 இரண்டு அணிகள் முன்னேறும்.
அதன்படி, `சி' குழுவில் இரண்டாமிடம் பிடித்த நியூசிலாந்தும், `டி' குழுவில் இரண்டாமிடம் பிடித்த பெல்ஜியமும் காலிறுதிக்கு முன்னேறியிருக்கின்றன.
இந்த இரு அணிகளுக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடம் பிடித்த மற்ற நான்கு அணிகளும், ஒவ்வொரு குழுவிலும் மூன்றாமிடம் பிடித்த 6 அணிகளில் டாப் 4 அணிகளும் 9 முதல் 16-ம் இடத்துக்கான போட்டியில் மோதும்.

மீதமிருக்கும் 8 அணிகள் 17 முதல் 24-ம் இடத்துக்கான போட்டியில் மோதும். நாளை மறுநாள் (டிசம்பர் 5) சென்னையில் காலிறுதிப் போட்டிகள் நடைபெறவிருக்கின்றன.
இதில், இந்தியா தனது காலிறுதிப் போட்டியில் பெல்ஜியம் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி இரவு 8 மணிக்கு தொடங்கும்.
இப்போட்டிக்கு முன்பாக ஸ்பெயின் vs நியூசிலாந்து, பிரான்ஸ் vs ஜெர்மனி, நெதர்லாந்து vs அர்ஜென்டினா என 3 காலிறுதிப் போட்டிகள் நடைபெறும்.

















