`ஊர் திருச்சி; 4 மாநிலங்களுக்கு பொறுப்பு' - காங்கிரஸ் ராஜ்ய சபா வேட்பாளர் கிறிஸ்...
பீகார்: 'அரசியல் வாழ்க்கையை தொடங்கியதில் இருந்தே ஒரு ஆசை!' - பதவி விலகுவதாக அறிவித்த நிதிஷ் குமார்
'முதல்வர் பதவியில் இருந்து விலகுகிறேன்' என்று நிதிஷ் குமார் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.
பீகார் மாநிலத்தில் கடந்த ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஜே.டி.யு கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி போட்டியிட்டு வெற்றி பெற்று 10-வது முறையாக முதல்வர் பதவியேற்றார்.
75 வயதான நிதிஷ் குமார், 10 முறை முதலமைச்சராகப் பதவியேற்று சாதனைப் படைத்திருக்கும் நிலையில்தான், அவர் முதல்வர் பதவியை துறந்துவிட்டு மாநிலங்களவை உறுப்பினராக முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் தான் முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக நிதிஷ் குமார் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "முதல்வர் பதவியில் இருந்து விலகுகிறேன். கடந்த இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக நீங்கள் தொடர்ந்து என்மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் ஆதரவும் எனக்குப் பெரிய பலமாக இருந்து வருகிறது.
அதனை அடிப்படையாகக் கொண்டு நாங்கள் பீகாருக்கும், அங்கு வாழும் உங்கள் அனைவருக்கும் முழு நம்பிக்கையுடனும் நேர்மையுடனும் சேவை செய்து வந்துள்ளோம்.
உங்கள் நம்பிக்கையும் ஆதரவும் தான் இன்று பீகார் வளர்ச்சி அடைவதற்கு காரணமாக இருந்தது. இதற்காக நான் பல முறை உங்களிடம் நன்றியைத் தெரிவித்துள்ளேன்.
என் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய காலத்திலிருந்தே பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினராக இருக்க வேண்டும் என்ற ஒரு விருப்பம் எனக்கு இருந்தது. அதன்படி இந்த முறை நடைபெறும் தேர்தலில் ராஜ்யசபா உறுப்பினராக ஆக விரும்புகிறேன்.

உங்களுடன் எனக்கு இருக்கும் இந்த உறவு இனி வரும் காலங்களிலும் தொடரும் என்பதை நான் முழு நேர்மையுடன் உறுதி அளிக்கிறேன்.
மேலும் உங்களுடன் சேர்ந்து ஒரு வளர்ந்த பீகாரை உருவாக்கும் எங்கள் உறுதி மாறாமல் தொடரும். உருவாகும் புதிய அரசாங்கத்துக்கு என் முழு ஆதரவும் வழிகாட்டுதலும் இருக்கும்" என்று பதிவிட்டிருக்கிறார்.















