நிழலாய் நின்ற நினைவுகள்: பல்லடம் இலட்சுமி மில் பள்ளியின் பொற்காலம்
``IAS பணி என்பது அரசாங்கத்திற்கு அறிவுரை சொல்லும் இடம்’’ | நீங்களும் ஆகலாம் IAS
ஆனந்த விகடன் மற்றும் கிங்மேக்கர்ஸ் IAS அகடமி இணைந்து நடத்திய 'நீங்களும் ஆகலாம் IAS' என்ற UPSC/TNPSC வழிகாட்டி நிகழ்ச்சி ஏப்ரல் 5 அன்று கோவை அவிநாசி சாலையில் உள்ள SITRA ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. 500க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற இந்நிகழ்வில் UPSC/TNPSC ஆகிய தேர்வுகளுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஆனந்த விகடனின் மேலாளரான திரு ரங்கராஜ் அவர்கள் வரவேற்புரை வழங்க நிகழ்ச்சி தொடங்கியது.
முதலில் பேசிய டாக்டர்.செ.சைலேந்திரபாபு, " நம் வாழ்க்கையின் நோக்கம், நம்மிடம் உள்ள திறமையை நாம் இறப்பதற்குள் முழுமையாக பயன்படுத்திவிட வேண்டும் என்பதாகவே இருக்க வேண்டும். சமூகத்திற்கு நல்லது செய்ய வேண்டுமென நினைப்பவர்களுக்கு ஐ.ஏ.எஸ் பணி ஒரு சிறந்த மேடையாக அமையும்.
நீங்கள் சிவில் சர்வென்ட் ஆகும்போது இந்த சமூகத்திற்கு தாயும் தந்தையுமாக நீங்கள் இருப்பீர்கள். இது உங்களுக்கு மட்டும் கிடைக்கும் பெருமை அல்ல. உங்கள் தாய்க்கும் தந்தைக்கும் நீங்கள் பெற்றுத்தரும் மரியாதையாகவும் இருக்கும். சிறுவயதிலேயே உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் ஏற்படுத்தித் தரும். அரசாங்கத்திற்கு அறிவுரை சொல்லும் இடத்தில் இருப்பீர்கள். இதற்கான தகுதிகளை முறையாக வளர்த்துக் கொள்ள வேண்டும்" என்று மாணவர்களுக்கு ஊக்கமளித்தார்.
தொகுப்பாளர் `நீயா நானா’ கோபிநாத், "பொறுப்பில் இருந்து வருவதுதான் அதிகாரம். நீங்கள் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக ஆக வேண்டும் என்றால் முதலில் பொறுப்பான மனிதனாக மாறுங்கள். ஒரு விஷயத்தை தெரிந்து கொள்வது வேறு புரிந்து கொள்வது வேறு. தெரிந்து கொண்டால் பிரிலிம்ஸ் க்ளியர் செய்யலாம், புரிந்து கொண்டால் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆகலாம். பல விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பதை விட ஒரு விஷயத்தை ஆழமாக புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்து படியுங்கள். ஆஸ்பிரன்ட் (Aspirant) என்று பெருமைக்காக சொல்லாமல் ஆம்பிஷியஸ்(Ambitious) ஆக இருந்து நினைத்ததை சாதிக்க வேண்டும். ஃபேக் ப்ரொடக்டிவிட்டியில் (Fake productivity) நேரத்தை வீணடிக்காமல் உண்மையிலேயே நமக்கு தேவையான விஷயங்களை பயிற்சி செய்ய வேண்டும்." என்றார்.
சிவில் சர்வீஸ் தேர்வு பயிற்சியாளரான ஆதில் பெய்க் மூன்று முக்கியமான உத்திகளை பற்றிப் பேசியபோது, "முதலாவதாக நம்மால் முடியுமா என்று சுய சந்தேகம் இருக்கக் கூடாது. நம் பயணத்தை நாம் நம்ப வேண்டும். இரண்டாவதாக நமக்கு குரூப் தேர்வுகள் போதும், யு.பி.எஸ்.சி தேர்வு வராது என்று நாமே நம்மை லிமிட் செய்து கொள்ளக்கூடாது. மூன்றாவதாக, யு.பி.எஸ்.சி. தேர்வுக்கு முக்கியமானது புரிதல்தான். எவ்வளவு நேரம் படிக்கிறோம் என்பதை விட எவ்வாறு படிக்கிறோம் என்பதே முக்கியம்." என்றார்.
கிங்மேக்கர்ஸ் IAS அகடமியின் இயக்குநர் சத்யஸ்ரீ பூமிநாதன் யு.பி.எஸ்.சி. தேர்வின் வகைகள் மற்றும் பாடத்திட்டம், கவனம் செலுத்த வேண்டிய பகுதிகள், மதிப்பெண்களின் விவரங்கள் ஆகியவற்றைப் பற்றி மாணவர்களுக்கு விரிவாக விளக்கம் அளித்தார். குரூப் 2 தேர்வில் பிரிலிம்ஸ் க்ளியர் செய்திருந்த இரண்டு நபர்களுக்கு மெயின்ஸ் தேர்வுக்கான பயிற்சி இலவசமாக வழங்கப்படும் என்று பூமிநாதன் அறிவித்தார். நிகழ்ச்சியில் பங்கு பெற்ற அனைவருக்கும் கிங்மேக்கர்ஸ் அகடமியில் சேர்ந்து பயில ஸ்காலர்ஷிப் கூப்பன் வழங்கப்பட்டது.
எளிய மாணவனும் தகுந்த பயிற்சி இருந்தால் சாதிக்க முடியும் என்று நம்பிக்கையூட்டும் வகையில் இருந்த இந்த நிகழ்ச்சி சிறப்புடன் நிறைவு பெற்றது.












