'லண்டன், ஆந்திரா போல உள்ளூர் மளிகைக் கடைக்கும் ஒரு எட்டு போங்க.!'- முதல்வரை விமர...
IDBI வங்கி பங்குகளை வாங்கப் போகும் கனட நிறுவனம்! மத்திய அரசின் கையைவிட்டு செல்கிறதா? Full Report
ஐ.டி.பி.ஐ வங்கியின் 60.72 சதவிகிதப் பங்குகளை வாங்கப் போகிறது கனடா நிறுவனம் ஒன்று.
இந்த 60.72 சதவிகிதப் பங்கு என்பது மத்திய அரசின் 30.48 சதவிகிதப் பங்கு மற்றும் எல்.ஐ.சி நிறுவனத்தின் 30.24 சதவிகிதப் பங்கு ஆகும். இந்த மொத்தப் பங்குகளின் மதிப்பு ரூ.52,878 கோடி ஆகும்.
யார் வாங்கப் போகிறார்கள்?
தற்போது இந்தப் பங்கை ஃபேர்ஃபாக்ஸ் ஃபைனான்சியல் ஹோல்டிங்ஸ் (Fairfax Financial Holdings) நிறுவனத்தின் தாய் நிறுவனமான கனடா இன்க் நிறுவனம் வாங்கப் போகிறது.
‘நாங்கள் இந்தப் பங்குகளை விற்கிறோம்’ என்கிற ஒப்புதலை நேற்று (அக்டோபர் 14)தான் மத்திய அரசு வழங்கியுள்ளது.

ஏன் இந்த விற்பனை?
கடந்த பல ஆண்டுகளாக, ஐ.டி.பி.ஐ வங்கியின் நிதி நிலைமை சரியில்லை. இதனால், 2017-ம் ஆண்டு இந்த வங்கி ‘உடனடித் திருத்த நடவடிக்கை’ (PCA)-ன் கீழ் கொண்டுவரப்பட்டது.
இதையடுத்து, 2019-ம் ஆண்டு, எல்.ஐ.சி நிறுவனம் ரூ.21,000+ கோடியை இந்த வங்கியில் முதலீடு செய்து பங்குகளை வாங்கியது. இதனால், மத்திய அரசின் பங்குகள் 50 சதவிகிதத்தின் கீழ் சரிந்தது.
ஒரு வங்கியில் மத்திய அரசின் பங்கு 50 சதவிகிதத்திற்கும் குறைவாக இருக்குமானால், அது தனியார் வங்கி வகைப்படுத்தப்படும்.
எல்.ஐ.சியின் என்ட்ரிக்குப் பிறகு, மத்திய அரசின் பங்குகள் 50 சதவிகிதத்திற்கும் கீழ் குறைந்ததால், ஐ.டி.பி.ஐ வங்கியைத் தனியார் வங்கியாக வகைப்படுத்தியது இந்திய ரிசர்வ் வங்கி.
இந்த நடவடிக்கைகளும் இந்த வங்கியின் நிதி நிலைமையைச் சரிசெய்ய முடியவில்லை.
இதையடுத்துத்தான் வேறு ரூட்டை மாற்றிப் பார்க்கிறது மத்திய அரசு.
நிர்வாகக் கட்டுப்பாட்டை மாற்றிப் பார்த்தால் இந்த வங்கியின் நிதிச் செயல்பாடு மாறுபடும் என்பதுதான் மத்திய அரசின் நடவடிக்கையின் பிளான்.

ஐ.டி.பி.ஐயில் மத்திய அரசின் பங்கே இனி இருக்காதா?
இந்தக் கேள்விக்கான பதிலை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார். அதாவது இந்த மாற்றம் நிதிச் சேவைத் துறையில் புதிய மூலதனத்தைக் கொண்டுவருவதோடு, அந்நிய நேரடி முதலீட்டையும் பெருக்கும்.
அடுத்ததாக, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSME), சிறு தொழில்கள் மற்றும் தொழிலதிபர்களுக்குப் புதிய வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்கும்.
ஃபேர்ஃபாக்ஸ் நிறுவனத்தின் நிர்வாகத்தின் கீழ் வங்கி மறுசீரமைக்கப்பட்ட ஐ.டி.பி.ஐ வங்கியில் இந்திய அரசு மற்றும் எல்.ஐ.சி இணைந்து 34 சதவிகிதப் பங்குகளைத் தக்கவைத்துக்கொள்ளும்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் இந்த நடவடிக்கையை ‘மூலோபாய மறுசீரமைப்பு’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
அடுத்து என்ன?
இந்திய ரிசர்வ் வங்கி தற்போது ஃபேர்ஃபாக்ஸ் நிறுவனத்தின் ‘தகுதி மற்றும் பொருத்தப்பாடு’ மதிப்பீட்டைப் பார்க்கும். இதில் இந்தியாவில் ஒரு வங்கியின் உரிமையாளராக இருக்கவும், நிர்வாகிப்பதற்கும் சில விதிமுறைகள் இருக்கின்றன.
அதற்குக் கீழ் இந்த நிறுவனம் தகுதி பெறுகிறதா என்பதைத்தான் இந்திய ரிசர்வ் வங்கி இனி சோதிக்கும்.
ஃபேர்ஃபாக்ஸ் நிறுவனம் சி.எஸ்.பி வங்கியில் ஏற்கெனவே பங்குகளை வைத்துள்ளது. அதை ஐ.டி.பி.ஐ வங்கியுடன் இணைக்க வேண்டும் அல்லது இரண்டு ஆண்டுகளுக்குள் அந்தப் பங்குகளை இந்த நிறுவனம் விற்க வேண்டும்.
மேலும், ஃபேர்ஃபாக்ஸ் நிறுவனம் சிறுபான்மைப் பங்குதாரர்களுக்குத் திறந்தவெளிச் சலுகை ஒன்றும் வழங்க வேண்டும்.

கனடாவின் ரியாக்ஷன்
ஐ.டி.பி.ஐ வங்கிப் பங்குகளைக் கனடா நிறுவனம் வாங்குவது குறித்து கனடாவின் சர்வதேச வர்த்தக அமைச்சர் மனிந்தர் சித்து, “கனடா நிறுவனம் ஒன்றிற்கு இந்தியாவில் கிடைத்த மற்றொரு மிகப்பெரிய வெற்றி.
இந்தியாவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான ஐடிபிஐ வங்கி தொடர்பான சுமார் $5.6–7.9 பில்லியன் மதிப்புள்ள ஒப்பந்தத்தில் கனடாவின் ஃபேர்ஃபாக்ஸ் நிறுவனம் இடம்பெற்றுள்ளது.
இது இந்தியாவில் தொழில் செய்யும் கனடா முதலீட்டாளர்களுக்கான பிரம்மாண்டமான வாய்ப்புகளை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது.
ஃபேர்ஃபாக்ஸ் நிறுவனமும் கனடா முழுவதிலும் உள்ள அதன் பிற துணை நிறுவனங்களும் ஆயிரக்கணக்கான கனடர்களின் வேலைவாய்ப்புகளுக்கு ஆதரவாக உள்ளன.
இந்த ஒப்பந்தம், கனடா நிறுவனங்களின் வலிமைக்கும், உலக அளவில் போட்டியிட்டு வெற்றிபெறும் அவற்றின் திறனுக்கும் மற்றொரு சான்றாகும்” என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
















