மலேரியா, மண்ணீரல் பாதிப்பு: உடல் நலம் மற்றும் பொது சுகாதார நடவடிக்கைகள்| மேட்டூர...
திருமணம் கடந்த உறவிலும் சந்தேகம்; கொன்று புதைக்கப்பட்ட பெண்! - தருமபுரி அதிர்ச்சி
தருமபுரி மாவட்டம் கடத்தூர்... அக்டோபர் 12-ஆம் தேதி காலை...
கடத்தூர் 4-வது வார்டு குடியிருப்புவாசிகள் தங்கள் அன்றாட பணிகளுக்காக அங்குமிங்கும் சென்று கொண்டிருந்தபோது அத்தெருவில் காலியான இடத்திலிருந்து துர்நாற்றம் வீசுவதை உணர்ந்த மக்கள், அங்கு குவிந்திருக்கும் குப்பைக் கழிவுகளால் வரும் நாற்றம் என்றுதான் முதலில் நினைத்தார்கள்.

ஆனால், துர்நாற்றம் அதிகமாக வீச ஆரம்பித்ததும் 'ஏதோ தப்பா நடந்திருக்கு' என்று சந்தேகம் ஏற்பட, உடனே கடத்தூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையினர் அங்கு வந்து, குப்பைகளுக்குள் உடல் புதைக்கப்பட்டிருப்பதை தெரிந்துகொண்டவர்கள் உடனே தடய அறிவியல் துறை, வருவாய்த்துறை பணியாளர்களை வரவழைத்து அந்த இடத்தில் தோண்டச் சொல்ல, ஒரு அடி ஆழத்தில் புதைக்கப்பட்ட பெண்ணின் உடல் வெளியில் எடுக்கப்பட, அதைப் பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ந்தனர்.
கொன்று புதைக்கப்பட்ட பெண் குறித்து அப்பகுதி மக்களிடம் விசாரித்தபோதுதான், அவர் பெயர் பாப்பாத்தி என்பதும், வெங்கடாசலம் என்பவருடன் சில மாதங்களாக இப்பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார் என்பதையும் தெரிவித்தார்கள்.
உடனே வெங்கடாசலத்தைத் தேட ஊரில் அவர் இல்லை. வெளியூரில் சுற்றிக்கொண்டிருந்தவரை லபக்கென்று பிடித்து வந்து விசாரித்தபோது முதலில் 'எனக்கு எதுவும் தெரியாது' என்று சமாளித்தவர், பின்பு, 'ஆமாம், என்னோடுதான் வாழ்ந்தார், நான் அடித்ததில் இறந்துவிட்டதால் யாருக்கும் தெரியாமல் புதைத்து விட்டேன்' என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்க தற்போது ரிமாண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.
சினிமாவை மிஞ்சும் வகையில் நடந்துள்ள இச்சம்பவம் கடத்தூர் பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், "பாப்பாத்தி யார்? அவரை வெங்கடாசலம் ஏன் கொலை செய்தார்?' என்று, விசாரணை நடத்திய காவல்துறையினரிடம் பேசினோம்.

"கடத்தூர் அருகிலுள்ள மணியம்பாடியைச் சேர்ந்த 46 வயதான வெங்கடாசலத்துக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளார்கள். வெளியூர்களுக்கு சென்று வீட்டு வேலைகளைச் செய்து வந்தவருக்கு அதுபோல வீட்டு வேலை செய்து வந்த அவர் வயதை ஒத்த பாப்பாத்தியுடன் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த பாப்பாத்திக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில் குடும்பத்தினரை விட்டு பிரிந்து வெளியூரில் தங்கி வேலை செய்து வந்துள்ளார். வேலை செய்த ஊர்களில் இருவரும் ஒன்றாக இருந்த நிலையில், 6 மாதங்களுக்கு முன்புதான் கடத்தூரில் வாடகைக்கு வீடெடுத்துள்ளனர்.
சொந்த ஊரான மணியம்பாடிக்கு செல்வதும் கடத்தூருக்கு வருவதுமாக இருந்திருக்கிறார் வெங்கடாசலம். இந்த நிலையில் தன்னிடம் சொல்லாமல் அடிக்கடி வெளியில் செல்லும் பாப்பாத்திக்கு வேறு சிலருடன் தொடர்பு இருக்கிறது என்று வெங்கடாசலத்துக்கு சமீபகாலமாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் வெங்கடாசகத்துக்கும் பாப்பாத்திக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது.

அது ஒரு கட்டத்தில் தீவிரமாகி கடந்த 2 ஆம் தேதி ஏற்பட்ட தகராறில் கட்டையால் பாப்பாத்தியை கடுமையாக தாக்கியுள்ளார். பலத்த காயத்துடன் மயக்காகிவிட்ட பாப்பாத்தியை அப்படியே விட்டுச் சென்றுள்ளார். கடந்த 6-ஆம் தேதி வந்து பார்த்தபோது பாப்பாத்தி இறந்து கிடக்க, அதைப்பற்றி யாரிடமும் தகவல் தெரிவிக்காமல் உடலை துணியால் மூட்டையாக கட்டி வீட்டுக்கு அருகிலுள்ள காலி இடத்தில் புதைத்து குப்பைகளை போட்டு மறைத்துவிட்டு சென்றுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பாப்பாத்தி சில ஆண்டுகளுக்கு முன்பே வீட்டை விட்டு வெளியேறியவர் என்பதால் அவர் உறவினர்கள் யாரும் தேட மாட்டார்கள், இங்குள்ளவர்களுக்கும் அவரைப்பற்றி எதுவும் தெரியாது என்பதால் அவர் இல்லையென்றாலும் யாரும் கவனிக்க மாட்டார்கள் என்பதால் தான் கொலை செய்து புதைத்தது யாருக்கும் தெரியாது என்று நினைத்திருக்கிறார்.
ஆனால் ஒரு அடி ஆழத்தில் புதைத்ததால் துர்நாற்றம் வீசி உடனே சிக்கி விட்டார்" என்றனர்.
கடத்தூரில் சம்பவம் நடந்த பகுதியிலுள்ளவர்களிடம் கேட்டால், "இவர்கள் யார், எந்த ஊர் என்பதே எங்களுக்குத் தெரியாது, பிழைப்பதற்காக வந்து இங்கு குடியிருக்கிறார்கள் என்று நினைத்தோம். ஆனால், இப்படி நடந்துள்ளது அதிர்ச்சியா இருக்கு" என்றனர்.
'இந்த கொலையில் வேறு யாரும் ஈடுபட்டிருக்கிறார்களா?' என்று கடத்தூர் இன்ஸ்பெக்டர் வேலுதேவனிடம் கேட்டோம், "இல்லை, திருமணம் கடந்த உறவில் வாழ்ந்து வந்த அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. சந்தேகத்தால் கடந்த 2 ஆம் தேதி கடுமையாக தாக்கிவிட்டு சென்று, கடந்த 6 ஆம் தேதி வீட்டுக்கு வந்த வெங்கடசாலம், இறந்துவிட்ட பாப்பாத்தியை அருகிலுள்ள இடத்தில் புதைத்துவிட்டு சென்றுள்ளார். பிடித்து விசாரித்தபோது திட்டமிட்டு கொலை செய்யவில்லை என்று தெரிவித்தார். இதில் வேறு யாரும் சம்பந்தப்படவில்லை என்பது எங்கள் விசாரணையில் தெரிய வந்தது, நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறைக்கு அனுப்பிவிட்டோம்" என்றார்.

'திட்டமிட்டு கொலை செய்யவில்லவில்லை என்று வாக்குமூலத்தில் கூறியுள்ள வெங்கடாசலம், கோபத்தில் செய்திருந்தால் பாப்பாத்தியை மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றிருக்கலாம். நான்கு நாள் கழித்து யாருக்கும் தெரியாமல் புதைத்ததன் மூலம் திட்டமிட்டுத்தான் கொலை செய்திருக்கிறார் என்பது தெரிகிறது,'' என்றும் தெரிவிக்கிறார்கள்.

















