ஈரான் போர் : செய்வதறியாது திகைத்து நிற்கும் ட்ரம்ப்! - நெதன்யாகுவுடன் அவசர சந்தி...
IIT Madras இயக்குநர் காமகோடி 'கோமிய நிபுணரா'? பிரியங்கா காந்தி vs அனுராக் தாகூர் காரசார விவாதம்
தற்போது நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது.
மக்களவையில் உறுப்பினர்கள் பிரியங்கா காந்தி மற்றும் அனுராக் தாகூருக்கு இடையே ஐ.ஐ.டி மெட்ராஸின் இயக்குநர் காமகோடி குறித்து காரசார விவாதம் ஒன்று நேற்று (ஜூலை 28) நடந்தது.
நேற்று மக்களவையில், 'பொதுத் தேர்வுகள் (முறையற்ற வழிமுறைகளைத் தடுத்தல்) திருத்த மசோதா, 2026' மீதான விவாதம் நடந்தது.

பிரியங்கா காந்தி பேச்சு
அது குறித்து பிரியங்கா காந்தி பேசுகையில், "வினாத்தாள் கசிவு தொடர்பான பிற குற்றங்களுக்கான தண்டனையை அதிகரிப்பதுதான் மசோதாவின் முக்கிய நோக்கம். ஆனால், இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதிலிருந்து இன்றுவரை இந்த அரசு ஒரே ஒரு குற்றவாளிக்குக் கூடத் தண்டனை வாங்கித் தரவில்லை.
சபாநாயகர் அவர்களே, உங்கள் வாயிலாக மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு நான் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அவர் தன் ஆலோசகர்களை மாற்ற வேண்டும் என நினைக்கிறேன்.
மேலும், இந்தப் புதிய குழுவில் ஒரு முன்னாள் IB தலைவர், ஒரு ஐடி நிறுவனத்தின் உரிமையாளர், மற்றும் ஒரு கோமிய நிபுணரும் இருக்கிறார்கள். இதுதானே உண்மை? இவர்களுக்குக் கல்வியைப் பற்றி என்ன தெரியும்?" என்று கூறியிருந்தார்.
பிரியங்கா காந்தி காமகோடியைத்தான் 'கோமிய நிபுணர்' என்று குறிப்பிட்டிருந்தார்.
தேர்வு வினாத்தாள் கசிவதைத் தடுப்பதற்காக பிரதமர் மோடி அமைத்திருக்கும் ஆறு உறுப்பினர் குழுவில் காமகோடியும் ஒருவர்.
காமகோடியை பிரியங்கா காந்தி ஏன் கோமிய நிபுணர் என்று குறிப்பிட்டார்?
2025-ம் ஆண்டு, சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில், காமகோடி, "மாட்டுக் கோமியத்தில் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வீக்கத்தைக் குறைக்கும் மருத்துவக் குணங்கள் உள்ளன.
இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் பல சோதனைகளை நடத்தி, அந்தக் கூற்றுகளை உறுதிப்படுத்தும் அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளனர்" என்று பேசியிருந்தார்.
இதைத்தான் பிரியங்கா காந்தி கேலி செய்து நாடாளுமன்றத்தில் பேசினார்.

பிரியங்கா காந்தி பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்து அனுராக் தாகூர் பேசியதாவது...
"ஆர்.எஸ்.எஸ்-ஸில் இருப்பது ஒன்றும் குற்றமல்ல. அப்படி இருந்தாலும், அவர்கள் அதற்காகப் பெருமைப்படத்தான் வேண்டும். நீங்களும் சேர்ந்து கொள்ளுங்கள். கொஞ்சம் நல்ல பண்புகளாவது வரும். நாட்டைப் பற்றி யோசிக்கத் தொடங்குவீர்கள்.
2001-ம் ஆண்டு முதல் ஐஐடி மெட்ராஸ் பேராசிரியராக இருக்கும் அவருக்கு, கணினி அறிவியல் மற்றும் பொறியியலில் முனைவர் பட்டம் உள்ளது. உங்கள் முழு குடும்பத்தின் பட்டங்களை ஒன்று சேர்த்தால் கூட அவருடைய அளவுக்கு வர முடியாது.
காந்தி குடும்பத்தின் மிகப்பெரிய பிரச்னையே இதுதான். அவர்கள் இந்தியாவின் பாரம்பர்யங்களைப் புரிந்துகொள்வதும் இல்லை.
புரிந்துகொள்ள முயற்சிப்பதும் இல்லை. மாறாக அதை ஏளனம் செய்கிறார்கள். உலகம் எதைப் பற்றி ஆராய்ச்சி செய்கிறதோ, அதைக் காங்கிரஸ் கிண்டல் செய்கிறது. இந்திய அறிவுப் பாரம்பர்யத்தைப் பற்றி படிக்க விரும்பும் நாட்டின் புகழ்பெற்ற விஞ்ஞானிகளைப் பார்த்து காங்கிரஸ் கேலி செய்கிறது.
டாக்டர் காமகோடி நவீன அறிவியலின் உச்சத்தில் இருப்பவர். அவர் ஒருபுறம் செயற்கை நுண்ணறிவின் நிபுணராகவும் இருக்கலாம். மறுபுறம் கோமியத்தைப் பற்றியும் ஆராய்ச்சி செய்யலாம். அதற்கு எந்தத் தடையும் இல்லை" என்று பதில் கொடுத்திருக்கிறார்.














