INDIA BLOC: ``நாங்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கப் போவதில்லை" - ராகுல் கா...
INDIA BLOC: ``மீண்டும் வாக்குச்சீட்டு தேர்தல் முறையைக் கொண்டுவர வேண்டும்!" - மல்லிகார்ஜுன கார்கே
டெல்லியில் இன்று (30-ம் தேதி) நடைபெற்ற 'இந்தியா கூட்டணி' தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சமாஜ்வாதி, சிபிஐ, சிபிஐ(எம்), என்சிபி (சரத் பவார்), சிவசேனா (யுபிடி) உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், பீகார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், மேற்கு வங்கத்தின் முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ஜெய்ராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்துக்குப் பிறகு இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டுச் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ``இன்று நடைபெற்ற இந்தியா கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் சுமார் 3 முதல் 3.5 மணி நேரம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர். உத்தவ் தாக்கரே மற்றும் ஹேமந்த் சோரன் ஆகியோர் காணொளி வாயிலாகக் கலந்துகொண்டனர். அனைவரும் ஒருமனதாக இணைந்து வாக்கு திருட்டுக்கு எதிராகப் போராட ஒப்புக்கொண்டதில் மகிழ்ச்சி.
அதன் அடிப்படையில், மக்களவைத் தேர்தல் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு மற்றும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளுக்கு எதிராக இந்தியா கூட்டணி சார்பில் 4 கட்ட போராட்டங்கள் நடத்தப்படும். இதன் ஒரு பகுதியாக, அக்டோபர் 2 முதல் 8-ம் தேதி வரை மாவட்ட அளவிலான பேரணிகளும், அக்டோபர் 6-ம் தேதி அனைத்து எதிர்க்கட்சி எம்பிக்கள் பங்குபெறும் தேர்தல் ஆணையத்தை நோக்கிய பேரணியும் நடைபெறும். 'வாக்கு திருட்டு' (Vote Chori) மூலம் உருவாக்கப்பட்ட தற்போதைய அரசால் ஏற்பட்டுள்ள பிரச்னைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கவே இந்த போராட்டம் நடத்தப்படுகிறது. இந்திய அரசியலமைப்பைப் பாதுகாக்கும் பொறுப்பு எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் உள்ளது.
இந்திய ஜனநாயகத்தைச் சீரழித்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் அவர்களுக்கு நிச்சயம் தண்டனை பெற்றுத் தருவோம் என்பது இந்தியா கூட்டணியின் உறுதியான வாக்குறுதியாகும். SIR திருத்தத்துக்கு முன்பிருந்த வாக்காளர் பட்டியலையே வரவிருக்கும் தேர்தல்களில் பயன்படுத்த வேண்டும். வாக்காளர் பட்டியலைத் திருத்துவதில் முழு வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். ஒரு நபருக்கு ஒரு வாக்கு, ஒரு மதிப்பு என்ற கொள்கை பலவீனப்படுத்தப்படுவதை அனுமதிக்க முடியாது.
வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டவர்கள், நீக்கப்பட்டவர்கள் மற்றும் திருத்தம் செய்யப்பட்டவர்களின் விவரங்களை தொகுதி வாரியாகவும், வாக்குச்சாவடி வாரியாகவும் வெளிப்படையாக வெளியிட வேண்டும். வாக்காளர் பெயர்களை நீக்குவதற்கு முன் முன்னறிவிப்பு, அதற்கான காரணங்கள் மற்றும் மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். நிர்வாகத் தவறுகளால் தகுதியான வாக்காளர்கள் விடுபடக் கூடாது. மேலும், முதல்முறை வாக்காளர்களுக்கு எளிமையான பதிவு முறையை உருவாக்க வேண்டும்.
தேர்தல் ஆணையம் அனைத்துத் தரப்பினரின் நம்பிக்கையையும் பெறும் வகையில் செயல்பட வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குப் பதிலாக மீண்டும் பழைய வாக்குச்சீட்டு முறையையே கொண்டு வர வேண்டும் என இந்தக் கூட்டணியின் மூலமாக கோரிக்கை முன்வைக்கப்படுகிறதுவாக்கு என்பது மக்களின் உரிமை, தேர்தல் தீர்ப்பு என்பது மக்களின் அதிகாரம். மக்களே ஜனநாயகத்தின் இறுதி அதிகார மையமாக இருப்பதை உறுதி செய்வதே எதிர்க்கட்சிகளின் கடமை. அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து செயல்பட வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.











