பாழாகும் பொருநை ஆறு; வரி செலுத்தாத பெரு நிறுவனங்கள்... கடிவாளம் போடப்படுமா?! | T...
Iran: 9 வயதில் ஈரானிலிருந்து வெளியேற்றம்; ஈரானின் கடைசி ஷாவின் மகளான லெய்லா பஹ்லவியின் சோக கதை!
ஈரானில் தற்போது நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு மத்தியில், இளவரசர் ரெசா பஹ்லவி மீண்டும் பரபரப்பான செய்தியாக மாறியிருக்கிறார்.
ஆயத்துல்லா கமேனி தலைமையிலான ஆட்சிக்கு எதிராக ஈரானியர்கள், நாட்டில் மீண்டும் மன்னராட்சி முறையை மீட்டெடுக்க வேண்டும் எனக் கோரி வருகின்றனர்.
ஈரானின் கடைசி ஷா முகமது ரிசா பஹ்லவியின் கடைசி மகளும், ரெசா பஹ்லவியின் இளைய தங்கையுமான லெய்லா பஹ்லவியின் சோகக் கதையைப் பற்றி தற்போது பலரும் பேசி வருகின்றனர். அந்தக் கதையைப் பார்ப்போமா...

1979-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், ஈரானில் இஸ்லாமியப் புரட்சி உச்சத்தில் இருந்தபோது, 'ஷாவுக்கு மரணம்' என்ற கோஷத்துடன் மக்கள் கூட்டம் அரச அரண்மனைகளை சுற்றி வளைத்தது.
இதனால், ஈரானின் கடைசி ஷா முகமது ரிசா பஹ்லவி மற்றும் அவரது மனைவி எம்பிரஸ் பரா பஹ்லவியின் குடும்பம் நாட்டை விட்டு தப்பியோட வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்தக் குடும்பத்தின் இளைய மகள் இளவரசி லெய்லா பஹ்லவி 1970-ஆம் ஆண்டு மார்ச் 27-ஆம் தேதி தெஹ்ரானில் பிறந்தவர். ஈரானை விட்டு வெளியேறும்போது லெய்லாவுக்கு வயது 9.
புரட்சியால் குடும்பத்தின் உரிமைகள், குடியுரிமை அனைத்தும் பறிக்கப்பட்டு, அவர்கள் நாடு கடத்தப்பட்டனர். நாடு கடத்தப்பட்ட பிறகு, பஹ்லவி குடும்பம் எகிப்து, மொராக்கோ, பஹாமாஸ், மெக்ஸிகோ, அமெரிக்கா, பனாமா உள்ளிட்ட பல நாடுகளில் தங்கினர்.
கொலை முயற்சி அச்சுறுத்தல்கள் காரணமாக எந்த நாடும் நீண்டகாலம் தஞ்சம் அளிக்க மறுத்தது. 1980-ஆம் ஆண்டு ஜூலை 27-ஆம் தேதி, முகமது ரிசா பஹ்லவி மேம்பட்ட லிம்போமா நோயால் எகிப்தின் கெய்ரோவில் உயிரிழந்தார். இது லெய்லாவின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது.

பிறகு, இவர்களின் குடும்பம் அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தில் உள்ள கிரீன்விச்சில் குடியேறியது. லெய்லா நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச பள்ளியில் பயின்றார்.
1988-ஆம் ஆண்டில் பள்ளிப் படிப்பை முடித்தவர், பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவில் பட்டப் படிப்பைத் தொடர்ந்தார். ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளை சரளமாகப் பேசவும் அவர் கற்றுக் கொண்டார்.
ஆனால், நாடு கடத்தப்பட்ட விஷயம், தந்தையின் இழப்பு அவரிடையே ஆழமான தாக்கத்தை உண்டாக்கியது. அது அவரை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கியது.
இதனால் அவர் சோர்வு நோய் (chronic fatigue syndrome), மனச்சோர்வு, அனோரெக்ஸியா உள்ளிட்ட பல பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டார். இதற்காக அவர் பல்வேறு இடங்களுக்குப் பயணித்து சிகிச்சையும் எடுத்துக் கொண்டார்.
இதனால் தூக்க மாத்திரைகள் உள்ளிட்ட மருந்துகளுக்கும் அவர் அடிமையானார். இப்படியான மருந்துகளை அதிகமாக உட்கொண்டதால், 2001-ஆம் ஆண்டு ஜூன் 10-ஆம் தேதி லண்டனின் லியோனார்ட் ஹோட்டலில் அவரது அறையில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

அப்போது அவருக்கு வயது 31. பிரேதப் பரிசோதனையில், தூக்க மாத்திரைகளை அதிக அளவில் எடுத்துக் கொண்டதும், கொக்கைன் போதைப்பொருள் எடுத்துக் கொண்டதும் கண்டறியப்பட்டது.
அவர் தனது மருத்துவரின் மேசையிலிருந்து மருந்துகளைத் திருடியதாகவும் தெரியவந்தது. இளவரசி லெய்லாவின் உடல் பாரிஸில் உள்ள பாஸி கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.
குழந்தைப் பருவத்திலேயே தாயக நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டு, அந்நிய நாட்டில் அடையாள நெருக்கடி உள்ளிட்ட பல சவால்களை எதிர்கொண்டார். லெய்லா எப்போதும் பொது வாழ்க்கையைத் தவிர்த்து, தனியாக வாழ விரும்பினார்.
ஈரானில் தற்போது மீண்டும் மன்னராட்சி திரும்ப வேண்டும் என மக்கள் குரலெழுப்பும் நிலையில், இளவரசி லெய்லாவின் இந்த சோகக் கதை மீண்டும் நினைவுகூரப்படுகிறது.
















