Parasakthi: ''அந்தத் தைரியம் உங்களுக்கு இருக்குனு சுதா மேம் சொன்னாங்க" - பராசக்த...
Khaleda Zia: 7 முறை சிறை; நாடு கடத்த சதி; யார் இந்த 'ஜனநாயகப் போராளி' கலிதா ஜியா?
வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமரான கலீதா ஜியா இன்று காலமானார் என அவரது வங்கதேச தேசியவாத கட்சி (BNP) அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
கடந்த சில மாதங்களாகவே கல்லீரல் சிதைவு, மூட்டுவலி, நீரிழிவு நோய், இதயப் பிரச்சனைகள் உட்பட பல உடல்நலக் கோளாறுகளால் அவதிப்பட்டு வந்தார். அதற்காக டாக்காவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் சிகிச்சைப் பலனின்றி காலமானார்.

யார் இந்த கலீதா ஜியா?
1945-ல் பிரிட்டிஷ் இந்தியாவின் வங்காள மாகாணத்தில் உள்ள அப்போது பிரிக்கப்படாத தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ஜல்பைகுரியில் பிறந்தார். அதாவது அவர் இந்தியாவில் பிறந்தார்.
பிரிவினைக்குப் பிறகு, கலீதா ஜியாவும் அவரது குடும்பத்தினரும் தற்போது வங்கதேசத்தில் உள்ள தினாஜ்பூர் நகரத்திற்கு குடிபெயர்ந்தனர். அவர் ஆரம்பத்தில் தினாஜ்பூர் மிஷனரி பள்ளியில் பயின்றார். 1960-ல் தினாஜ்பூர் பெண்கள் பள்ளியில் படிப்பை தொடர்ந்தார்.
வங்கதேசத்தின் முன்னாள் அதிபரான ஜியாவுர் ரஹ்மானை திருமணம் செய்துகொண்டார். ஜியாவுர் ரஹ்மான் 1981-ல் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியின் போது கொல்லப்பட்டார்.
கணவனுக்குப் பிறகு...
அதைத் தொடர்ந்து ஒன்பது ஆண்டுகள் வங்கதேசத்தில் இராணுவ ஆட்சி நடந்தது. ஜியாவுர் ரஹ்மானின் மரணத்திற்குப் பிறகு, வங்கதேச இராணுவத்தின் முன்னாள் தளபதியான ஜெனரல் ஹுசைன் முஹம்மது எர்ஷாதின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர, கலீதா ஜியா ஏழு கட்சிகளின் கூட்டணியை வழிநடத்தினார்.
வங்கதேச தேசியவாத கட்சியில் ஒரு சாதாரண உறுப்பினராகச் சேர்ந்து, 1983-ல் கட்சியின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1984-ம் ஆண்டு கட்சி அவரைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தது.

தொடர் கைது நடவடிக்கை:
1986-ல், கலீதா ஜியா தேர்தல்களைக் கண்டித்து பங்கேற்பதை தவிர்த்தார். அதே நேரத்தில், அவரது போட்டியாளர்களான அவாமி லீக், ஜமாத்-இ-இஸ்லாமி மற்றும் வங்கதேச கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை ஜாதியா கட்சியின் ஆட்சியின் கீழ் தேர்தலில் பங்கேற்றன. இந்தக் காலகட்டங்களில் அதாவது 1983 முதல் 1990 வரை ஏழு முறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அதைத் தொடர்ந்து 1991-ல், கலீதா ஜியா தேர்தலில் பங்குகொண்டார். மக்கள் வாக்கெடுப்பின் மூலம் வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமர் என்ற அங்கீகாரத்தைப் பெற்றார்.
இவரின் ஆட்சியின்போதுதான் நாடாளுமன்ற அரசு முறை, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலைக் கண்காணிப்பதற்கானப் பொறுப்பாளர் அரசு முறை என இரண்டு அரசு முறையை அறிமுகப்படுத்தினார்.
முக்கிய சீர்திருத்தங்கள்;
கலிதா ஜியாவின் முதல் ஆட்சி சில முக்கியப் பொருளாதாரச் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தது. அவற்றில் மதிப்புக்கூட்டு வரி (VAT) அறிமுகம், 1991-ல் வங்கி நிறுவனச் சட்டம், 1993-ல் நிதி நிறுவனங்கள் சட்டம், தனியார்மயமாக்கல் வாரியம் ஆகியவை அடங்கும். வங்கதேசத்தில் கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் கூடுதல் அக்கரைக் கொண்டு தீவிரமாகப் பணியாற்றினார். அதற்காகவே அவர் நினைவுகூரப்படுகிறார்.
கலிதா ஜியாவின் இரண்டாவது பதவிக்காலம் சில வாரங்களுக்கு மட்டுமே நீடித்தது. மீண்டும் ஆட்சிக்கு வரும் நோக்கில், பி.என்.பி கட்சி 1999-ல் ஜாதியா கட்சி, ஜமாத்-இ-இஸ்லாமி, இஸ்லாமி ஒய்க்யா ஜோட் ஆகிய நான்கு கட்சிக் கூட்டணியுடன் எதிர்க்கட்சிக் கூட்டணியை அமைத்தார்.
ஆளும் அவாமி லீக்கிற்கு எதிராகப் பல போராட்டத் திட்டங்களைத் தொடங்கியது. ஊழல் மற்றும் பயங்கரவாதத்தை ஒழிப்பதாக உறுதியளித்து 2001-ல் மீண்டும் அதிகாரத்துக்கு வந்தார்.
வீட்டுச் சிறை:
கலிதா ஜியா உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்களை நாடுகடத்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. 2007-ல் ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் கைதும் செய்யப்பட்டார். வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு 2009-ல் பதவியேற்றது.
கலிதா ஜியா மீண்டும் தன் போராட்டத்தை தொடங்கினார். அந்தக் காலகட்டத்தில் இரண்டு முறை வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். ஜனநாயகத்துக்கான இவரின் தொடர் போராட்டத்தால் 2011-ல், நியூ ஜெர்சியின் மாநில செனட் சபை கலிதா ஜியாவை 'ஜனநாயகப் போராளி' என கௌரவித்தது.

அக்டோபர் 2012-ல், கலிதா ஜியா இந்தியாவிற்கு வருகை தந்து, அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரைச் சந்தித்தார். மோடி பிரதமராகப் பதவியேற்றதற்குப் பிறகு, 2015-ல் வங்கதேசத்திற்குச் சென்று கலிதா ஜியாவைச் சந்தித்தார்.
தொடர்ந்து அரசுக்கு எதிரான போராட்டங்கள், மக்களுக்கான ஜனநாயகம் மீதான நம்பிக்கையை வளர்த்தெடுப்பதில் முக்கியப் பங்கெடுத்தார். தற்போது அவரின் மரணம் வங்கதேச மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

















