புதுச்சேரி பட்ஜெட்: 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு `டேப்'; முதியவர்களுக்கு நடமாட...
Paal Dabba: "த்ரிஷா மேடம் என் பாடலில் நடிக்க சம்மதித்ததே சிறப்பான ஒன்று!" - பால் டப்பா ஷேரிங்ஸ்
சுயாதீன இசைத்துறையில் பரபரப்பாக இயங்கி வரும் முக்கியமான குரல் `பால் டப்பா'. தொடர்ந்து உச்ச நட்சத்திரங்கள் நடிக்கும் படங்களில் பாடல்கள் செய்து வருகிறார். மற்றொரு பக்கம் தன்னுடைய அடுத்தடுத்த சுயாதீன பாடல்களையும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் வார்னர் மியூசிக் இந்தியாவிற்காக இவர் செய்திருந்த பாடலின் வீடியோவில் நடிகை த்ரிஷா நடித்திருந்தார்.
இதனைத் தாண்டி, இப்போது வெவ்வேறு சுயாதீன கலைஞர்களின் மியூசிக் வீடியோவை டைரக்ட் செய்தும் வருகிறார். ஜாலியாக அவருடன் உரையாடினோம்.
"நீங்கள் சுயாதீன பாடல்களிலும் திரைப்படப் பாடல்களில் பணியாற்றியுள்ளீர்கள். ஒரு திரைப்படக் கதாபாத்திரத்திற்காக எழுதும்போதும், சுயாதீன கலைஞர் பால் டப்பாவாக எழுதும்போதும் எவ்வளவு வேறுபாடு இருக்கும்?"
"நிச்சயமாக ஒரு வித்தியாசம் இருக்கிறது. பால் டப்பாவாக எழுதும்போது, ஒரு வரியிலிருந்தோ, ஒரு டியூனிலிருந்தோ, எனக்கு நடந்த ஒரு சம்பவத்திலிருந்தோ அல்லது அன்றைய தினம் நடந்த ஒரு சாதாரண விஷயத்திலிருந்தோ கூட நான் தொடங்கலாம். அதிலிருந்து அதை வளர்த்துக்கொள்வேன். எனக்கு ஒரு நிலையான முறையோ சக்சஸ் பார்முலாவோ இல்லை.
ஆனால் ஒரு திரைப்படத்திற்காக எழுதும்போது, நீங்கள் வேறு ஒருவரின் உலகிற்குள் நுழைகிறீர்கள். அங்கு ஒரு கதாபாத்திரம், ஒரு சூழல், ஒரு கதை மற்றும் இயக்குநரின் பார்வை இருக்கும். எனவே, நான் சொல்ல விரும்புவது என்ன என்பதை விட, அந்தக் கதாபாத்திரம் உண்மையில் என்ன பேசும் அல்லது என்ன உணரும் என்பதைப் பற்றி யோசிக்க வேண்டும். இருப்பினும், நான் என்ன செய்தாலும் என் தனிப்பட்ட அடையாளம் இயல்பாக அதில் கலந்துவிடும் என்று நம்புகிறேன்.
திரைப்படத்திற்காகப் பணிபுரியும்போதும் பால் டப்பா என்ற என் தன்மையை நான் முற்றிலும் ஒதுக்கிவிடுவதில்லை. அது கதைக்குள் எங்கு பொருந்தும் என்பதை மட்டுமே புரிந்துகொள்ள வேண்டும்."

"பல திரைப்பட இசையமைப்பாளர்கள் சுயாதீன கலைஞர்களை அதிகமாக அணுகிவருகின்றனர். திரைப்படங்களில் பணிபுரியும்போது உங்களுக்கு முழுமையான சுதந்திரம் கிடைப்பதாக உணர்கிறீர்களா?"
"அது அந்த ப்ராஜெக்டையும், நீங்கள் பணிபுரியும் மனிதர்களையும் பொறுத்தது. திரைப்படம் என்பது இயல்பாகவே ஒரு கூட்டு முயற்சி. எனவே, படத்தைப் பற்றிய எந்தக் கருத்தும் இல்லாமல் நீங்கள் விரும்பியதைச் செய்யலாம் என்பதையே முழுமையான சுதந்திரம் என்று நான் நினைக்கவில்லை. அதில் ஒரு சமநிலை இருக்க வேண்டும்.
இன்றைய பல இசையமைப்பாளர்களும் திரைப்பட இயக்குநர்களும், ஒரு சுயாதீன கலைஞர் கொண்டுவரும் தனித்துவத்தை நன்றாகப் புரிந்துகொள்கிறார்கள். அவர்கள் உங்களின் அடையாளத்தை முழுமையாக மாற்ற வேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை. அந்த வேறுபட்ட விஷயத்தைத்தான் அவர்கள் விரும்புகிறார்கள்."
"ஒரு சுயாதீன கலைஞரின் பாடல் வைரலாகி பெரிய வெற்றியைப் பெற்றால், அதே சக்சஸ் பார்முலாவை மீண்டும் உருவாக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எப்போதும் இருக்கும். இசையில் உங்களை மீண்டும் மீண்டும் அதேபோல் வெளிப்படுத்த வேண்டும் என்ற அழுத்தத்தை எப்படிச் சமாளிக்கிறீர்கள்?"
"உண்மையைச் சொன்னால், அதே பாடலை மீண்டும் மீண்டும் உருவாக்க முயன்றால் எனக்கே சலிப்பாகிவிடும். ஏதாவது ஒன்று வெற்றி பெற்ற பிறகு, "சரி, இது வேலை செய்துவிட்டது; இதே மாதிரி இன்னொரு பாடலை உருவாக்கலாம்" என்று நினைப்பு இருக்கும். ஆனால் அதுவே உங்களை ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள் அடைத்துவிடும். அந்த வகையில் வைப் தரும் பாடல் எனக்கு ஒரு முக்கியமான தருணமாக இருந்தது.
நான் ஏற்கனவே செய்துவந்த இசையையே தொடர்ந்து செய்திருக்க முடியும். ஆனால் முற்றிலும் வேறுபட்ட ஒன்றை முயற்சிக்க விரும்பினேன். மக்கள் அதை ஏற்றுக்கொள்வார்களா என்ற கேள்வியும் ஆரம்பத்தில் எனக்குள் இருந்தது. ஆனால் அது வெற்றி பெற்றபோது, ரசிகர்களை விட என்னையே நான் அதிகமாகக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தேன் என்பதை உணர்ந்தேன். அதனால் இப்போது 'அடுத்த வைரல் பாடல் என்ன?' என்று நான் யோசிப்பதில்லை. அதற்குப் பதிலாக "இப்போது நான் என்ன புதிதாக முயற்சிக்க விரும்புகிறேன்?" என்பதையே நினைக்கிறேன். அது நன்றாக அமைந்து, எனக்கு மகிழ்ச்சியைத் தருமானால், அதையே தொடர்கிறேன்."

"த்ரிஷாவுடன் ஒரு சுயாதீன பாடலுக்காக இணைந்து பணிபுரிந்திருந்தீர்கள். அந்த வாய்ப்பு எப்படி அமைந்தது? உங்கள் இசை குறித்து அவர் ஏதேனும் கருத்துகளைப் பகிர்ந்தாரா?"
"நான் த்ரிஷா மேடத்தின் மிகப்பெரிய ரசிகன். எனவே, இந்த முழு அனுபவமும் எனக்கு ஒரு "Full-circle moment" போலத்தான் இருந்தது. நான் உருவாக்கிய முதல் சுயாதீன பாடல்களில் ஒன்று '3SHA'. த்ரிஷா மேடம் தாமாகவே என் இசை வீடியோவில் இடம்பெறுவது என்பது நான் ஆரம்பித்த காலத்தில் கற்பனை கூடச் செய்து பார்க்காத விஷயம். நான் அவருக்கு நேரடியாக என் பாடலை அனுப்பினேன், அவருக்கு அந்தப் பாடல் பிடித்திருந்தது.
பின்னர் விஷயங்கள் சரியாக அமைந்து அந்த வீடியோ உருவானது. படப்பிடிப்பு தளத்தில் நான் மிகவும் உற்சாகமாக இருந்தேன். அதே நேரத்தில், வேலையையும் சரியாகச் செய்ய வேண்டியிருந்தது. அது மிகவும் இனிமையான அனுபவம். பாடலுக்கும் அதற்குப் பின்னிருந்த எண்ணத்திற்கும் அவர் மிகுந்த ஆதரவளித்தார். அந்த வீடியோவின் ஒரு பகுதியாக இருக்க அவர் சம்மதித்ததே எனக்கு மிகவும் சிறப்பான ஒன்று."
"‘ஊரும் ப்ளட்’ சென்சேஷனல் ஹிட் பாடலாக ஆகிவிட்டது. இப்போதும் அதனை தொடர்ந்து கேட்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அதன் வெற்றிக்கு முக்கிய காரணம் என்ன?"
" 'சரி, இது ஒரு மிகப்பெரிய ஹிட்டாகப் போகிறது' என்று உட்கார்ந்து திட்டமிட்டோம் என்று நான் சொல்ல மாட்டேன். நான் இசையை அந்த வகையில் அணுகுவதில்லை. 'ஊரும் ப்ளட்' பாடலில் சில விஷயங்கள் மிகவும் தெளிவாக இருந்தன. அந்த எனர்ஜி, மெலடி, ராப் பாடல் இசையோடு கலக்கும் விதம் என அனைத்தும் அமைந்து வந்தது. சாய் அபயங்கர் முற்றிலும் மாறுபட்ட இசை உணர்வைக் கொண்டுவந்தார். அந்த வித்தியாசம் மிகச் சிறப்பாக வேலை செய்தது. சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ஆரம்பத்தில் இந்தப் பாடல் நிறைய ட்ரோல்களுக்கும் மீம்களுக்கும் உள்ளானது. அந்த ஆரம்ப எதிர்வினையைப் பார்த்துப் பாடல் வேலை செய்யவில்லை என்று முடிவு செய்திருந்தால், அங்கேயே நின்றிருப்போம்.
ஆனால் காலப்போக்கில் மக்கள் அதனுடன் மிகப்பெரிய அளவில் ஒன்றிப்போனார்கள். அதுவே அதன் வெற்றிக்கான மிக முக்கியமான காரணம். மக்கள் அந்தப் பாடலைத் தங்களுடையதாக மாற்றிக்கொள்வது மிகவும் எளிதாக இருந்தது. பாடலின் ஆரம்பச் சூழலைத் தாண்டியும் வேலை செய்யக்கூடிய ஓர் ஆற்றல் அதில் இருந்தது."

"சுயாதீன இசைக்கலைஞர் வெங்காயத்தின் ‘சிக்காமா’ மற்றும் ‘சேட்டை’ சுயாதீன இசை வீடியோக்களை நீங்கள் இயக்கியுள்ளீர்கள். இயக்குநராகப் பொறுப்பேற்ற அனுபவம் எப்படி இருந்தது?"
"விஷூவல்களில் எனக்கு எப்போதும் ஆர்வம் உண்டு. எனவே, இயக்குநராக மாறியது திடீரென நடந்த விஷயம் அல்ல. நான் இசை வீடியோக்களை உருவாக்கும்போதே, அவற்றின் காட்சி உலகம் மற்றும் கதையை எப்படி உணர வைக்க வேண்டும் என்பதைக் குறித்து இயல்பாகவே யோசிப்பேன். இயக்குநராக இருப்பதன் சுவாரஸ்யமான அம்சம் என்னவென்றால், இசையை மட்டும் அல்லாமல் முழுப் படத்திற்கும் நீங்கள்தான் பொறுப்பு. நடிகர்களின் நடிப்பு, கேமரா, எடிட்டிங், கலை அமைப்பு, உடைகள், காட்சிகளின் வேகம் என அனைத்தையும் கவனிக்க வேண்டும். இந்தச் செயல்முறையை நான் மிகவும் ரசிக்கிறேன்.
ஏனென்றால், காட்சிகள் பாடலை விளக்குவதற்காக மட்டும் இருக்க வேண்டும் என்று நான் நினைப்பதில்லை. சில நேரங்களில், வீடியோ மூலமாக முற்றிலும் வேறொரு கதையைச் சொல்ல விரும்புகிறேன். என் சொந்த இசையிலும் இதை ஏற்கனவே செய்துவருகிறேன். இயக்குவது அதை மேலும் ஆழமாக ஆராய்வதற்கான அதிக சுதந்திரத்தை எனக்கு அளிக்கிறது. நான் இன்னும் கற்றுக்கொண்டேதான் இருக்கிறேன். எதிர்காலத்தில் இதை இன்னும் அதிகமாகச் செய்ய விரும்புகிறேன்."

"ஜொமேட்டோ நிறுவனத்திற்காக 'Veppam Is Our Weapon' பாடல் செய்திருக்கிறீர்கள். அதுவும் இந்தப் பாடலில் சென்னையைப் பற்றி சொல்கிறீர்கள். அந்தப் பாடல் பற்றி..."
``என்னைப் பொறுத்தவரை, சென்னை என்பது வெறும் மெரினா கடற்கரை, ஃபில்டர் காபி மற்றும் கோவில்கள் மட்டுமல்ல. அவை சென்னையின் ஒரு பகுதிதான், ஆனால் அதற்குப் பின்னால் நகரத்தின் இன்னொரு பரிமாணமும் இருக்கிறது. தெருக்கள், உணவு, மெட்ராஸ் பாஷை, உள்ளூர் மனிதர்கள், நகைச்சுவை உணர்வு, அணுகுமுறை மற்றும் மக்கள் தினமும் உழைக்கும் விதம் ஆகியவை அதில் அடங்கும். சென்னையின் இளைஞர்களிடம் மிகவும் சுவாரஸ்யமான விஷயங்களை நான் காண்கிறேன். அவர்கள் உயர்ந்த இலக்குகளையும் கனவுகளையும் கொண்டவர்கள். அதே நேரத்தில் தங்கள் வேர்களோடு ஆழமாக இணைந்திருக்கிறார்கள்.
நாம் பெரிய விஷயங்களைச் சாதிக்க விரும்புகிறோம், அதே சமயம் நண்பர்கள், குடும்பம், உணவு, தெருக்கள் மற்றும் கலாச்சாரத்தோடு இன்னும் நெருக்கமாகவே இருக்கிறோம். போராட்டங்களும் இருக்கின்றன, ஆனால் அந்தச் சவால்களை நகைச்சுவையுடன் எதிர்கொள்ளும் தனித்துவமான ஆற்றல் சென்னைக்கு உண்டு. அந்த ஆற்றல்தான் இந்த பாடலில் பிரதிபலிக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். விளம்பரத் தன்மை தெரியும் வழக்கமான பிராண்ட் பாடலை உருவாக்க நான் விரும்பவில்லை. முதலில் அது ஒரு 'பால் டப்பா' பாடலாக இருக்க வேண்டும். அதன் பிறகு ஜோமாட்டோ அம்சம் இயல்பாக அதில் கலந்திருக்க வேண்டும் என்று நினைத்தேன்."




















