``ஆதவ் அர்ஜுனா நிழல் முதலமைச்சர் போல் செயல்படுகிறார்..!" - கே.பி.முனுசாமி விமர்ச...
Ramayana: ``ஏன் வெறுக்கப்படும் ராவணன் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறீங்கனு கேட்டாங்க.!" - நடிகர் யாஷ்
நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ‘ராமாயணம் - தி ரைஸ் ஆஃப் எ லெஜண்ட்’. இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடிக்க, இத்திரைப்படத்தின் இணை தயாரிப்பாளரான ‘கே.ஜி.எஃப்’ புகழ் யாஷ் ராவணனாகவும், சன்னி தியோல் அனுமனாகவும், ரவி துபே லட்சுமணனாகவும் மற்றும் ரகுல் பிரீத் சிங் சூர்ப்பனகையாகவும் நடித்துள்ளனர்.
ஹாலிவுட்டின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர், இந்தியாவின் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் ஆகிய இருபெரும் உலகளாவிய ஆளுமைகள் இணைந்து இப்படத்திற்கு பின்னணி இசையமைத்திருக்கிறார்கள்.
அடுத்த மாதம் 5-ம் தேதி வெளியாகவிருக்கும் இந்தப் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர்கள் ரன்பீர் கபூர், யாஷ், சாய் பல்லவி, ரகுல் பிரீத் சிங், ஏ.ஆர்.ரஹமான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய நடிகர் ரன்பீர் கபூர்,``சென்னைக்கு வணக்கம்! உங்கள் அன்பிற்கும் இந்த வரவேற்புக்கும் மிகப்பெரிய நன்றிகள். 'ராமாயணா' என்பது அன்பு, நம்பிக்கை மற்றும் நமது பண்பாட்டின் வழியே நம் அனைவரையும் ஒன்றாக பிணைக்கும் ஒரு அற்புதக் காவியம். நமது இசைமேதை ஏ.ஆர். ரஹ்மான் சாருடன் எனது முந்தைய இரண்டு திரைப்படங்களில் பணியாற்றும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.
அவை என் மனதிற்கு என்றும் நெருக்கமானவை. ஆனால், இந்தத் திரைப்படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு எனது வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு பொக்கிஷமாகும். ஏ.ஆர். ரஹ்மான் சார் உங்களுக்காகப் பல அற்புதமான பாடல்களை வரிசையாக வைத்திருக்கிறார். திரைப்படம் உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும். இப்போது போல எப்போதும் உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறோம்." என்றார்.
அதைத் தொடர்ந்து பேசிய நடிகர் யாஷ், ``நான் உண்மையிலேயே ரொம்ப மகிழ்ச்சியா இருக்கேன். ஒரு பாடகரோ அல்லது இசைக்கலைஞரோ ஏதேனும் ஒரு கருவியை வாசிப்பதைப் பார்க்கும்போதெல்லாம், இசைக்கு முன்னாடி நாம எவ்வளவு சிறியவர்கள் என்ற உணர்வு எனக்குள் வரும்.

நடிகர்களான நாம யாரோ எழுதின வசனத்தைப் பேசுறோம், யாரோ நம்ம படம்பிடிச்சு அழகா காட்டுறாங்க, இயங்குனர்கள் நாம என்ன செய்யணும்னு சொல்றாங்க, கதையாசிரியர் கதை எழுதுறாரு. ஆனா, இசைக்கலைஞர் தான் நமக்கான ஆற்றலை உருவாக்கும் ஒரு புதிய படைப்பைத் தருகிறார். இன்றைய நிகழ்வின் நாயகன் ரஹ்மான் சார்!
என்ன ஒரு ஆற்றலை நீங்க உருவாக்கியிருக்கீங்க! இங்க இருக்கிற எல்லாரையும் போல நானும் உங்களோட தீவிர ரசிகன். 'ஜென்டில்மேன்' படப் பாடல்களுக்கெல்லாம் நான் நடனமாடியிருக்கேன். நாங்க கர்நாடகாவில் இருந்தபோதும் கூட இந்தப் பாடல்களுக்கு நடனப் பயிற்சி எடுத்த நினைவுகள் உண்டு. திரையுலகிற்கு உங்களின் பங்களிப்பு மிகவும் மகத்தானது.
'டேக் இட் ஈஸி ஊர்வசி' பாடலை நாங்க அவ்வளவு ரசிச்சுக் கேட்டிருக்கோம். அந்தப் பாடலை வேறு மொழிகளில் கேட்கும்போது, ஏதோ ஒன்று குறைவாக இருப்பது போலவே தோன்றும். உங்க பாடல்கள் மூலமாதான் தமிழ் வார்த்தைகளை தெரிஞ்சிக்கிட்டோம். நான் 'ரங்கீலா' பாடல்களைத் திரும்பத் திரும்பக் கேட்டே இந்தி மொழியைக் கத்துக்கிட்டேன்னு கூடச் சொல்லலாம். இன்று என்னுடைய திரைப்படத்திற்கு, நான் நடித்த காட்சிகளுக்கு நீங்கள் இசையமைப்பது எனக்குப் பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. இந்தத் திரைப்படத்தில் நான் 'இராவணன்' கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு முன்பு பலர் என்னிடம், `ஏன் இராவணனாக நடிக்கிறீர்கள்? அது வெறுக்கப்படும் ஒரு பாத்திரம் தானே?' என்று கேட்டார்கள்.

நமக்கு கிடைக்கும் கதாப்பாத்திரத்தை செவ்வனே செய்ய வேண்டும் என்பது என் விருப்பம். அதைதான் நான் இந்தப் படத்திலும் செய்திருக்கிறேன். நான் சிவபெருமானின் ஆற்றலை இந்த இராவணன் பாத்திரத்திற்குள் கொண்டு வந்தேன். அதிலும் ரஹ்மான் சார் வழங்கிய இந்த சிவன் பாடல் எனக்கு மிகப்பெரிய ஆற்றலைக் கொடுத்தது. நான் வழக்கமாகவே பல சிவன் பாடல்களைக் கேட்பேன், தற்போது இந்த 'சிவ தாண்டவம்' பாடலைக் கேட்கும்போது அந்த ஆற்றலை முழுமையாக உணர்கிறேன்.
உங்கள் அன்பையும் மரியாதையும் காக்க நான் என் முழு முயற்சியையும் செய்வேன். ஒரு நடிகனாக, ரசிகர்கள் நீங்க ஆரவாரம் செய்யும்போதுதான் எங்களுக்கு ஆற்றல் கிடைக்கிறது. வெற்றிகளும் தோல்விகளும் வந்து போகலாம், ஆனால் மாறாதது உங்களுடைய இந்த அன்பு தான். இந்த அன்பு இல்லை என்றால் ஒரு நடிகன் தன் ஊக்கத்தை இழந்துவிடுவான். உங்கள் அன்பு இருக்கும் வரை தொடர்ந்து எங்களோட சிறந்த உழைப்பைக் கொடுப்போம். இந்தத் திரைப்படத்தை அனைவரும் சிறந்த முறையில் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்." என்றார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
















