Bigg Boss Tamil 9: கடைசி வாரத்தில் வெளியேறிய வைல்டு கார்டு போட்டியாளர்!
RBI: அமெரிக்காவை நம்பாத இந்தியா; தங்கம் பக்கம் ரூட்டை மாற்றுவது ஏன்?
இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவிகித வரி... அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் வீழ்ச்சி... தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு... என நம்மை சுற்றி பல பொருளாதார விஷயங்களும், மாற்றங்களும் நடந்துகொண்டிருக்கின்றன.
இந்த நேரத்தில், கடந்த ஆண்டு, இந்திய ரிசர்வ் வங்கி அமெரிக்க கருவூல பத்திரம் இருப்பை அதிகமாகக் குறைத்துள்ளது. இதை அமெரிக்க கருவூலத் துறையின் தரவுகள் உறுதி செய்கின்றன.

தரவுகள் என்ன சொல்கின்றன?
அமெரிக்க கருவூலத் துறையின் தரவுகளின் படி, இந்திய ரிசர்வ் வங்கி 2024-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி வரையிலான நிலவரப்படி, 241.4 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான அமெரிக்க கருவூல பத்திரத்தை வைத்திருந்திருக்கிறது.
கடந்த ஆண்டு (2025) அதே தேதியின் நிலவரத்தை எடுத்து பார்த்தால், இந்திய ரிசர்வ் வங்கியிடம் 190.7 பில்லியன் மதிப்பிலான அமெரிக்க கருவூல பத்திரம் மட்டுமே இருக்கிறது.
ப்ளூம்பெர்க் நிறுவனத்தின் அறிக்கைப்படி, கடந்த நான்கு ஆண்டுகளில், இந்திய ரிசர்வ் வங்கி மிக குறைந்த அளவிலான அமெரிக்க கருவூல பத்திரம் வைத்திருப்பது இதுவே முதல் முறை.
காரணம் என்ன?
'அமெரிக்க கருவூலப் பத்திரம் இந்த நேரத்தில் நல்ல வருமானத்தைத் தரவில்லையா?' என்று பார்த்தால், அப்படியெல்லாம் இல்லை. 10 ஆண்டுகளுக்கான அமெரிக்க கருவூலப் பத்திரம் 4 - 4.8 சதவிகித வருமானத்தைத் தந்துள்ளது. இந்த நேரத்தில் தான், இந்திய ரிசர்வ் வங்கி அமெரிக்க கருவூலப் பத்திரத்தின் இருப்பைக் குறைத்துள்ளது.
அமெரிக்க கருவூலப் பத்திரத்திற்கு பதிலாக, தங்கத்தின் பக்கம் தங்களது முதலீட்டைத் திருப்பியுள்ளது இந்திய ரிசர்வ் வங்கி.
கடந்த செப்டம்பர் மாதம், மொத்த அந்நிய செலாவணியின் இருப்பில் 13.9 சதவிகிதம் தங்கத்தை வைத்திருக்கிறது இந்திய ரிசர்வ் வங்கி. 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதக் காலக்கட்டத்தில், இந்திய ரிசர்வ் வங்கி தங்கத்தை 9 சதவிகிதம் தான் வைத்திருந்தது.

இந்தியா மட்டுமல்ல... சீனா கூட அமெரிக்க கருவூலப் பத்திர இருப்பைக் குறைத்துள்ளது.
இதற்கு உலக அளவில் நிலவும் நிலையற்ற தன்மையே காரணம். இதனால், உலக வங்கிகள் தங்கத்தின் மீது அதிக நம்பிக்கையை வைக்கிறன. மேலும், ஒரே இடத்தில் அதிக முதலீடுகளைச் செய்து, ரிஸ்க்குகளைச் சந்திப்பதை மாற்றி, பல முதலீடுகளில் கவனம் செலுத்தலாம் என்று உலக வங்கிகள் நினைக்கின்றன.


















