பொங்கல் பண்டிகை: இந்த ஆண்டு சிறப்பு என்ன? - பொங்கல் பானை வைக்க நல்ல நேரம் எது?
Real Estate: நிலம் வாங்கும்போது நேரில் போய் 'இந்த 10' விஷயங்களை கண்டிப்பா செக் செஞ்சுடுங்க!
இதுவரை, 'நிலம் வாங்கப் போறீங்களா?' இந்த ஆவணத்தைப் பாருங்க... அந்த ஆவணத்தைச் செக் பண்ணுங்க' என்று விளக்கமாகச் சொல்லியிருக்கிறோம்.
அத்துடன் நிலத்தை நேரில் சென்று பாருங்கள் என்றும் கூறி வருகிறோம்.
அப்படி நேரில் சென்று என்னவெல்லாம் கவனிக்க வேண்டும் என்கிற கேள்வி உங்களுக்கு இருக்கலாம்.
அந்தக் கேள்விக்கான பதிலை விளக்கமாகத் தருகிறார் பில்டர் மற்றும் வழக்கறிஞர் முத்துசாமி.

"1. முதலில், வாங்கும் நிலத்திற்கு நேரடியாகச் சென்று பத்திரம், பட்டா மற்ற பிற ஆவணங்களில் கூறியிருப்பது போல, 'அனைத்து விவரங்களும் சரியாக இருக்கிறதா?' என்பதை நீங்களே நேரடியாக சரி பாருங்கள். இது முதல் மற்றும் முக்கியமானது.
2. அடுத்தது, நில ஆவணங்களில் கூறியிருப்பது போல, 'அனைத்து பக்கங்களிலும் எல்லைகள் சரியாக உள்ளதா... சர்வே நம்பர், பொது சாலையின் பெயர், அகலம் மற்றும் பொது அணுகல் உள்ளதா என்பதை சரி பாருங்கள்.
3. நிலத்தில் வேறு ஏதேனும் எல்லை மற்றும் ஆக்கிரமிப்பு பிரச்னைகள் உள்ளதா என்பதை செக் செய்யுங்கள்.
4. தேவைப்பட்டால், புதிதாக ஒரு முறை, சம்பந்தப்பட்ட நிலத்தினை சர்வே செய்து, அனைத்து பக்கங்களிலும், ஆவணப்படி, எல்லைகள் சரியாக உள்ளனவா என்று அளவிட்டுக் கொள்ளலாம்.
அந்தச் சர்வேயர் ஒரு அரசு சர்வேயர் அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட சர்வேயராக இருப்பது மிக முக்கியமான ஒன்று.
5. நிலம் வாங்கிய பிறகு, அங்கே வாழ்வதற்கும், சுலபமாக பராமரிப்பதற்கும் ஏற்றது தானா... முற்றிலும் பாதுகாப்பான ஒரு இடத்தில்தான் இருக்கிறதா என்பதை நன்றாக ஆராய்ந்து தெரிந்து கொள்ள வேண்டும்.

6. குடிநீர், தெருவிளக்கு, நன்கு பராமரிப்பில் உள்ள சாலைகள், கழிவுநீர் பாதை, திடக்கழிவு மேலாண்மை, முற்றிலும் பாதுகாப்பு உள்ள சுற்றுப்புறச் சூழல் போன்ற அடிப்படை வசதிகள் இருக்கிறதா என்பதை ஒன்றுக்கு இரண்டு முறை செக் செய்து கொள்ளவும்.
7. அப்பார்ட்மெண்ட், கேட்டட் கம்யூனிட்டி போன்றவற்றைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்றால், அங்கே வழங்கப்படும் வசதிகள், குடியிருப்போர் நல்வாழ்வு சங்கத்தின் சட்ட திட்டங்கள் மற்றும் அது சார்ந்த செலவினங்களுக்கு வசூலிக்கும் காலமுறை கட்டணம் (மெயின்டனன்ஸ் சார்ஜ்), சங்க நிர்வாக செயல்திறன் போன்றவற்றை தீர விசாரித்து தெரிந்துகொள்ளவும்.
8. இப்போதெல்லாம், எதிர்பாராத பருவ நிலை மாறுதல்களினால் ஏற்படும் பேரிடர் காலத்தில், அதிகமான மழைநீர் வெள்ளம் பெருகெடுப்பு மற்றும் தண்ணீர் தேங்கும் பிரச்னைகளை பெரிய அளவில் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
இதனால், மழை பெய்தால், நிலம் உள்ள குறிப்பிட்ட இடத்தில், மழைநீர் தேங்குமா? உடனடி மழைநீர் வடிகால் வசதிகள் அங்கு உள்ளதா என்பதைக் கட்டாயம் விசாரித்து விடுங்கள்.

9. விற்பனை நிலத்தின் அருகில், அன்றாட தேவைக்கு வேண்டிய பலசரக்கு சாமான்கள், காய்கறிகள், பழ வகைகள் கிடைக்கக் கூடிய மளிகைக் கடை அல்லது சூப்பர் மார்க்கெட், ஷாப்பிங் மால், வீட்டு உபகரணக் கடைகள், மெடிக்கல் ஷாப், மருத்துவமனைகள் மற்றும் அது சார்ந்த ஆய்வகங்கள், நல்ல தரம் வாய்ந்த பள்ளிகள், கல்லூரி, பஸ் ஸ்டாப், போக்குவரத்து வசதி, பூங்காகள், பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் வசதிகள் போன்றவை உள்ளதா என்பதையும் சரி பாருங்கள்.
10. உங்கள் பணியிடம் அருகில் இருக்கிறதா என்பதைப் பாருங்கள். ஒருவேளை, இல்லையென்றால், பணிக்கு இடையூறு இன்றி சுலபமாக சென்று வர தேவையான அனைத்து போக்குவரத்து வசதிகள் உள்ளதா என்பதையும் கட்டாயம் பாருங்கள்".
















