செய்திகள் :

நீங்கள் வாங்கும் வீடு/நிலம் சொத்து தகராறு, சட்டச் சிக்கல்களில் சிக்கக்கூடாதா? இதை செஞ்சுடுங்க!

post image

நிலம் அல்லது வீடு வாங்குவது என்றால் வெறும் பணம் கொடுத்து பதிவு செய்வது அல்ல. 'இது தான் நம்முடைய நிலம் அல்லது வீடு' என்று முடிவானதும், அதை விற்பவரின் சில ஆவணங்களை செக் செய்ய வேண்டியது அவசியம். இல்லையேல், சிக்கல் தான்.

'என்னது விற்பவரின் ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டுமா? இது என்ன புதுசாக இருக்கிறது' என்று அதிர்ச்சி அடையாதீர்கள். இது ஏன் கட்டாயம் என்பதை விளக்குகிறார் வழக்கறிஞர் மற்றும் பில்டர் முத்துசாமி.
முத்துசாமி
முத்துசாமி

"நீங்கள் யாரிடம் இருந்து நிலம் அல்லது வீடு வாங்குகிறீர்களோ, அவர்கள் நல்லவராக... உங்களுக்கு நன்கு தெரிந்தவராகவே இருக்கலாம். ஒருவேளை, 'இல்லை' என்றால், அது உங்களைத் தான் சிக்கலில் மாட்டிவிடும்.

நிலம் அல்லது வீடு வேறொருவரின் பெயரில் இருக்கலாம். ஆனால், உங்களுக்கு 'நான் தான்' உரிமையாளர் என்று ஏமாற்றி, ஆள் மாறாட்டம் செய்து, விற்பதற்குக் கூட வாய்ப்புகள் உண்டு. இது மாதிரியான செய்திகளை அன்றாடம் செய்தித்தாள்களில் அதிகம் படித்திருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.

அடுத்தது, நிலம் அல்லது வீட்டைப் பராமரிக்க, நிர்வாகிக்க மட்டும் ஒருவரின் பெயருக்கு பொது அதிகாரம் எழுதப்பட்டிருக்கும். ஆனால், அதை மறைத்து, நிலம் அல்லது வீடு விற்பதற்கும் உரிமை உண்டு என்று தவறான தகவல் சொல்லி உங்களுக்கு விற்க முன் வரலாம்.

இன்னொன்று, நிலம் அல்லது வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு பங்கு இருக்கலாம். ஆனால், அதை குறிப்பிடாமல், ஒருவர் மட்டுமே முழு உரிமை கொண்டாடி, உங்களுக்கு நிலம் அல்லது வீட்டை விற்றுவிடலாம்.

வீடு
வீடு

இதனால், நிலம் அல்லது வீட்டின் உரிமையை சரிபார்ப்பது அவசியம். அதற்கு என்னென்ன ஆவணங்களை செக் செய்ய வேண்டும் தெரியுமா?

1. குறிப்பிட்ட சொத்தின் உரிமை குறைந்தபட்சம் 33 ஆண்டுகளுக்கு யாரிடம் இருந்தது என்பதையும், தாய்/மூல பத்திரத்தையும் விவரம் தெரிந்த சட்ட வல்லுநர் மூலம் சரிபாருங்கள்.

2. சொத்து அடுத்தடுத்து நபர்களுக்கு கைமாறி இருந்தால், அவர்களின் பெயரையும், இப்போதைய உரிமையாளரின் பெயரையும் சரி பாருங்கள்.

3. இந்தச் சொத்தின் மீது ஏதேனும் வழக்கு, தகராறு, பிரச்னை உள்ளதா என்பதை தீர விசாரித்து தெரிந்துகொள்ளுங்கள்.

4. அது பரம்பரை வழி வந்த சொத்து எனில், இப்போதைய உரிமையாளருக்கு முறைப்படி, சட்டத்திற்கு உட்பட்டு, குடும்ப பிரிவினை, தான, தீர்வு போன்ற மூலம் சட்டபூர்வ ஆவணம் மூலம் மாற்றம் செய்து சொத்து வழங்கப்பட்டிருக்கிறதா என்பதைப் பாருங்கள்.

5. பரம்பரை சொத்து வாங்குகிறீர்கள் என்றால், சம்பந்தப்பட்ட அரசு அதிகாரி வழங்கிய இறப்புச் சான்றிதழ், வாரிசுச் சான்றிதழ், போன்றவற்றை கேட்டுப் பெற்று சரிபாருங்கள்.

6. முன்பு நிலம் அல்லது வீடு அடமானம் வைக்கப்பட்டிருந்தால், இப்போது அடமானத் தொகை முழுவதுமாக திருப்பிச் செலுத்தி, பதிவு ரசீது மூலம் சொத்து மீட்கப்பட்டுவிட்டதா என்பதை செக் செய்யுங்கள்.

ஃபிளாட்
ஃபிளாட்

7. சொத்து பரிசாக கொடுக்கப்பட்டிருந்தால், அது சரியான பதிவு பெற்ற ஆவணம் மூலம் கைமாற்றப்பட்டிருக்கிறதா என்பதை நன்கு சோதித்து தெரிந்துகொள்ளுங்கள். மேலும், இந்த சொத்தை குறிப்பிட்ட நபர் தானம் செய்ய அவருக்கு உரிமை உள்ளதா மற்றும் தானம் வாங்குபவர் அதை பெற்றுக்கொண்டாரா என்பதையும் பாருங்கள்.

8. பொது அதிகாரப் பத்திர சொத்திற்கு வழங்கப்பட்டிருந்தால், அது பதிவு செய்யப்பட்டு இருக்கிறதா, அவருக்கு அந்த சொத்தினை விற்பதற்கான உரிமை உண்டா என்பதை சரிபாருங்கள்.

9. ஃபிளாட் அல்லது வில்லா என்றால் சரியான ஒப்படைப்பு கால அட்டவணை (delivery schedule), ஒப்புக்கொண்ட பிரிக்கப்படாத நில பங்கு (Undivided Share - UDS), பிளாட்டின் கார்பெட் ஏரியா(carpet area) / பிளிந்த் ஏரியா (Plinth Area), கார் பார்க்கிங் வசதி, வழங்கப்படும் வசதிகள் (amenities) , சொசைட்டி / குடியிருப்பு சங்க விவரங்கள், கட்டண அட்டவணை (payment schedule), ஒப்புதல் படத்திலிருந்து ஏதேனும் மாற்றங்கள் / விலகல்கள் (deviation from sanctioned plan) இருக்கிறதா? என்பதை பாருங்கள்.

10. குறைந்தபட்சம் 33 ஆண்டுகளுக்கான இ.சி (Encumbrance Certificate) செக் செய்து பாருங்கள்.

Property | மனை | நிலம்
Property | மனை | நிலம்

11. வருவாய்த் துறை சார்ந்த ஆவணங்கள் குறிப்பாக அந்த சொத்தின் பட்டா, சிட்டா, அடங்கல், ஏ-ரெஜிஸ்டர், FMB (Field Measurement Book) நகல்களைச் சரிபாருங்கள்.

12. சட்டரீதியான, அன்றைய தினம் வரையான, சொத்து வரி, கழிவுநீர் மற்றும் குடிநீர் வரி/ கட்டணம், மின்சாரக் கட்டணம் போன்றவற்றின் ரசீதுகளையும், யாருடைய பெயரில் இருக்கிறது என்பதையும் சரி பாருங்கள்.

13. CMDA, DTCP, RERA, மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து, காவல்துறை, விமான நிலையம், தீயணைப்புத்துறை, ASI (இந்திய தொல்லியல் துறை), அறநிலையத் துறை, வேளாண்மைத் துறை, SEZ, வீட்டு வசதி வாரியம், நீர் மேலாண்மை, மற்றும் நிலம் எடுப்பு/கையகப்படுத்தல் போன்ற அரசு நிறுவன அதிகாரியிடம் பெற்ற அனுமதிகள்/தடை இல்லா சான்று இருக்கிறதா என்பதை செக் செய்யுங்கள்.

14. உரிமையாளரின் அல்லது அவரின் பொது அதிகாரம் பெற்றவர் ஆதார், பான், கைபேசி எண் போன்ற தகவல்களைக் கேட்டுப்பெறுங்கள்.

15. கடன் மூலம் வாங்கப்பட்டிருந்த சொத்து என்றால், கடன் வழங்கியிருக்கும் வங்கி அல்லது நிதி நிறுவனங்களிடம் இருந்து நிலுவை இருப்பு உறுதிப்படுத்தல் கடிதம் (Balance confirmation letter), தடையில்லா சான்றிதழ்(No Due Certificate), பதிவு செய்யப்பட்ட ரசீது (Registered Receipt) மற்றும் கடன் திருப்பிச் செலுத்தப்பட்டதற்கான உறுதி சான்றிதழ் கேட்டுப் பெறுங்கள்.

`சொந்த வீடு' எந்த வயதில் வீடு கட்டுவது சரியானது?

வீடு கட்டுவது அவ்வளவு எளிதல்ல. இதற்கு, 'வீட்டைக் கட்டிப்பார்... கல்யாணம் பண்ணிப்பார்' என்கிற சொலவடையே சாட்சி. அதனால், வீட்டை கட்டுவதற்கு முன், அது குறித்த பிளான் என்பது மிக அவசியம். இந்தப் பிளானில், '... மேலும் பார்க்க