RN Ravi: அதிரடியாக மாற்றப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி! - பின்னணி காரணம் என்ன?
RN Ravi: அதிரடியாக மாற்றப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி! - பின்னணி காரணம் என்ன?
தமிழக ஆளுநராக உள்ள ஆர்.என்.ரவி, மேற்கு வங்க ஆளுநராக மாற்றப்பட்டு உள்ளார். தெலங்கானா உள்ளிட்ட மாநில ஆளுநர்களை இரவோடு இரவாக மாற்றம் செய்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
2021-ம் ஆண்டு தி.மு.க அரசு பொறுப்பேற்றதும், தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவியை நியமித்தது மத்திய அரசு. தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் பாலமாக இருக்க வேண்டிய ஆளுநர், தமிழக அரசோடு தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வந்தார். இதனால், பல்வேறு சர்ச்சைகள் அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே தொடர்ந்து நீடித்துவந்தது.

தமிழகத்தின் நிலை போலவே, மேற்குவங்கத்திலும் ஆளுநருக்கும், அந்த மாநில அரசுக்கும் இடையே மோதல் போக்கு இருந்துவந்தது. அந்த மாநில ஆளுநராக பதவியில் இருந்து வந்த ஆனந்த போஸ் மீது தொடர்ந்து மம்தா குற்றசாட்டுக்களை முன்வைத்து வந்தார்.
இந்நிலையில், மத்திய அரசு மேற்கு வங்க ஆளுநராக உள்ள ஆனந்த போஸை ராஜினாமா செய்ய சொல்லி இருப்பதாக மம்தா பானர்ஜி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அதோடு தமிழக ஆளுநராக உள்ள ஆர்.என்.ரவியை மேற்கு வங்க மாநிலத்திற்கு மாற்ற இருப்பதாகவும் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இது குறித்து மத்திய அரசுக்கு நெருக்கமான அதிகாரிகளிடம் விசாரித்தோம்.
“மேற்கு வங்க ஆளுநரோடு, லடாக் யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநராக உள்ள கவிந்தர் குப்தா, உள்ளிட்ட மூன்று ஆளுநர்களை மத்திய அரசு ராஜினமா செய்ய சொல்லியதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால், மேற்கு வங்க மாநில ஆளுநரை மட்டுமே ராஜினாமா செய்துள்ளார்.
உள்துறை அமைச்சகத்துடன் ஏற்பட்ட சில கருத்து மோதல்களே இந்த ராஜினமாவிற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது” என்கிறார்கள்.
அதே நேரம் மேற்குவங்க மாநிலத்தில் அடுத்த மாதம் தேர்தல் நடக்க உள்ளதால், தங்களுக்கு ஏற்ற ஒருவரையே ஆளுநராக நியமிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. அதனாலே ஆர்.என்.ரவியை மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் செய்யும் முடிவை மத்திய அரசு எடுத்துள்ளதாக தெரிகிறது. மற்றொருபுறம், கேரள மாநில ஆளுநராக உள்ள ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரை தமிழகத்தின் கூடுதல் ஆளுநர் பொறுப்பையும் கவனிக்கும் உத்தரவு வெளியாகியுள்ளது.
அதோடு தெலங்கான மாநில ஆளுநராக இருந்த தேவ் வர்மாவை மஹாராஷ்ட்ரா மாநில ஆளுநராகவும், இமாச்சல மாநில ஆளுநராக இருந்த பிரதாப் சுக்லாவை தெலுங்கானா மாநில ஆளுநராகவும் மாற்றம் செய்துள்ளது மத்திய அரசு.
அதே போல், டெல்லி, லடாக் உள்ளிட்ட யூனியன் பிரதேச மாநிலங்களின் துணை நிலை ஆளுநர்களும் மாற்றப்பட்டுள்ளார்கள். இதற்கான அறிவிப்பை முறைப்படி ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ளது.
கேரளா மாநில ஆளுநர் கூடுதல் பொறுப்பாக தமிழக ஆளுநராக செயல்படுவார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளதால், தமிழகத்திற்கான ஆளுநர் தேர்வை மத்திய அரசு தள்ளிவைத்துள்ளதாக தெரிகிறது. விரைவில் தமிழகத்திற்கான ஆளுநர் யார் என்பதை மத்திய அரசு ஒரு வாரத்திற்குள் அறிவிக்கும் என்கிறார்கள் மத்திய அரசுக்கு நெருக்கமானவர்கள். மேற்கு வங்க மாநில ஆளுநரின் ராஜினாமாவை தொடர்ந்தே இத்தனை ஆளுநர் மாற்றங்களை மத்திய அரசு மேற்கொண்டிருப்பதாக தெரிகிறது.















