திமுக கூட்டணி: சோனியா மௌனம்... ராகுல் அமைதி... பிரியங்கா நிலைப்பாடு? - டெல்லியில...
Saudi - UAE Conflict - நட்பு நாடுகள் எதிரிகளானது எப்படி? பிரச்னைக்கு காரணம் என்ன? | Explained
மத்திய கிழக்கில் இரண்டு பொருளாதார சக்தி மிகுந்த நாடுகளாக சவுதி அரேபியாவும், ஐக்கிய அரபு அமீரகமும் இருக்கின்றன. உலகின் 2வது பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடாக சவுதியும், சர்வதேச வர்த்தகத்தை மையமாக ஐக்கிய அரபு அமீரகம் விளங்குகின்றன. இவ்விரு நாடுகளும் ஒரு காலத்தில் நட்பு நாடுகளாக இருந்தன. ஆனால், இன்று இந்த இரண்டு நாடுகளும் இடையே ஒரு மறைமுகப் போரை நடந்து வருகின்றது. இந்த போருக்கு காரணம் என்ன? நண்பர்கள் எதிரிகளானது எப்படி? இவ்விரு நாடுகளுக்கும் இடையே என்ன பிரச்னை? இதற்கு விடையை ஏமனில் இருந்து தொடங்கலாம்.

ஏமன் திட்டம்:
ஏமன் கடல் பகுதியில் அமைந்திருக்கும் ஏமனின் ‘அல் முக்காலா’, ஒரு முக்கியமான துறைமுகம். டிசம்பர் 30,2025-ல் இத்துறைமுகத்துக்கு வந்து சேர்ந்த 2 கப்பகள் மீது சவுதி அரேபியாவின் படைகள் வான்வழித் தாக்குதலை நடத்தின.
“ கிளர்ச்சிக் குழு ஒன்றுக்கு அந்த கப்பல்களில் ஆயுதங்கள் கொண்டு வரப்பட்டன. ஆயுதங்களைக் அனுப்பியது அமீரகம். அதனால்தான், தாக்கினோம்” என்று சவுதி அரேபியா அறிக்கை வெளியிட்டது.
ஆனால் அமீரகமோ, அதை மறுத்தது. ஏமனில் உள்ள இடைக்கால அரசு, உத்தரவிட்டதன் பேரில் அமீரகப் படைகள் ஏமனில் இருந்து முழுமையாக வெளியேறின.
சரி, ஏமனில் யாருக்கு கொடுக்க ஆயுதங்களை கொண்டு சென்றது அமீரகம். அதை தெரிந்து கொள்ள வேண்டுமெனில், ஏமனில் நடந்து வரும் உள்நாட்டு போர் குறித்து ஒரு சிறிய அறிமுகம் தேவைப்படுகிறது.
உள்நாட்டுப் போர்:
2014 முதல் ஏமனில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்திருக்கிறது. இந்த போரில், ஈரானின் ஆதரவு கொண்ட ஹவுதி படைகள் அரசு படைகளை வீழ்த்தி, ஏமனின் வடக்கு பகுதியை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, அரசையும் நடத்தி வருகிறது. ஆனால், இந்த அரசை சரவதேச நாடுகள் அங்கீகரிக்கவில்லை.
சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட அரசு, ஏமனின் மத்திய மற்றும் தெற்கு ஏமனின் ஒரு சில பகுதிகளை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து தற்காலிக அரசை நடத்தி வருகிறது. இந்த அரசுக்கு சவுதி அரேபியா ஆதரவளித்து வருகிறது.
மற்றொரு கிளர்ச்சிக் குழுவான, எஸ்.டி.சி (Southern Transitional Council) தெற்கில் சில பகுதிகளை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. இந்த குழுவுக்குத்தான் அமீரகம் ஆயுதங்களை அனுப்பியதாக குற்றச்சாட்டு வைத்தது சவுதி அரேபியா.
உள்நாட்டுப் போரின் தொடக்கத்தில் சவுதியும், அமீரகமும் இணைந்தே ஏமனில் செயல்பட்டன. ஆனால், ஒரு கட்டத்தில் அமீரகம் பாதை மாறி, சவுதி எதிர்க்கும் குழுவான எஸ்.டி.சிக்கு ஆதரவளிக்கத் தொடங்கியது.

எஸ்.டி.சிக்கு அமீரகம் ஆதரவு கொடுப்பதில் சவுதிக்கு என்ன பிரச்னை?
ஏமன் சவுதியோடு எல்லையை பகிர்ந்து கொள்ளும் நாடு. ஏமனில் இருக்கும் உள்நாட்டுப் போர், சவுதிக்கு பரவிவிடக் கூடாது என்பதில் சவுதி எச்சரிக்கையாக இருக்கிறது. சவுதி எல்லையை ஒட்டிய பகுதிகள் இடைக்கால அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதில் ஒரு முக்கியமான இடம்தான் ஹத்ராமவுத். ஏமனின் 80% எண்ணெய் வளம் இந்த பகுதியில்தான் இருக்கிறது. அப்படிப்பட்ட முக்கியமான இடத்தை, டிசம்பர் 2025-ல் எஸ்.டி.சி திடீர் தாக்குதல் மூலம் கைப்பற்றியது.
இதை சவுதி சற்றும் எதிர்பார்க்கவில்லை. தன்னுடைய எல்லையில், பிரச்னை இருப்பதை சவுதி விரும்பவில்லை. பதில் தாக்குதலை தொடங்கியது. ஒரு சில நாட்களில் எஸ்.டி.சியின் ஆயுதக் குழுக்களை தனது படை பலத்தால் விரட்டியடித்தது சவுதி. மீண்டும் இடைக்கால அரசின் கட்டுப்பாட்டுக்கு ஹத்ராமவுத் வந்தது.
எஸ்.டி.சிக்கு அமீரகம் ஆதரவு கொடுப்பது ஏன்?
இதை புரிந்து கொள்ள, சவுதிக்கும் அமீரகத்துக்கும் நடக்கும் பவர் பாலிடிக்ஸ் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
சவுதியையும், அமீரகத்தை ஒப்பிட்டு பார்ப்போம்.
சவுதியின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) $1.24 டிரில்லியன். அமீரகத்தின் ஜிடிபி $537 பில்லியன்.
சவுதி தினமும் 1.10 கோடி பீப்பாய் எண்ணெய் உற்பத்தி செய்கிறது. அமீரகம் 35 லட்சம் பீப்பாய்கள் மட்டுமே உற்பத்தி செய்கிறது.
சவுதியின் நிலப்பரப்பு, அமீரகத்தைவிட 24 மடங்கு பெரியது. மக்கள் தொகையில் அமீரகத்தைவிட சவுதியில் அதிகம். சவுதியின் மக்கள் தொகை 3.5 கோடி. அமீரகத்தின் மக்கள் தொகை 1.10 கோடி.
இந்த தரவுகளை எல்லாம் பார்க்கும்போது, அமீரகத்தை விட சக்திவாய்ந்த நாடாக சவுதி தோன்றலாம். ஆனால், ஒரு சில விஷயங்களில் அமீரகத்தின் கட்டடங்கள் போலவே சில துறைகளில் சவுதியைவிட உயர்ந்த இடத்தில் இருக்கிறது அமீரகம்.
குறிப்பாக தொழில்நுட்பம், நிதித் துறை, சர்வதேச முதலீடு, சுற்றுலா போன்ற துறைகளில், தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கிறது அமீரகம். சுருக்கமாக சொல்வதென்றால், வளைகுடாவில் சர்வதேச நாடுகளின் மூலதனம், அமீரகத்தில்தான் அதிகமாக குவிந்து கிடக்கிறது.

எண்ணெய் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் சவுதி, அமீரகத்தை பின்னுக்குத் தள்ளி மற்ற துறைகளிலும் கோலோச்ச வேண்டும் என்று விரும்புகிறார், இளவரசர் முகமது பின் சல்மான். இதன் மூலம், மத்திய கிழக்கில் அசைக்க முடியாத சக்தியாக சவுதி உருவெடுக்க முடியும் என அவர் நினைக்கிறார்.
ஒரு நாடு, மற்றொரு நாட்டை பொருளாதார ரீதியில் முந்த நினைப்பது இயல்பானதே. ஆனால், இங்கே பொருளாதார போட்டி, அதிகாரத்துக்கான போட்டியாக மாறியதே பிரச்னையின் மையப் புள்ளி.
இந்த அதிகாரப் போட்டியின் ஒரு அங்கமாக, முதலீடுகளை ஈர்க்க விஷன் 2030 என்ற கொள்கையை வெளியிட்டது சவுதி. அதன்படி, சவுதி அரசின் ஒப்பந்தங்கள் கிடைக்க வேண்டும் என்றால், சர்வதேச நிறுவனங்கள் சவுதியில் தங்கள் பிராந்திய தலைமயகத்தை அமைக்க வேண்டும் என்ற விதியை கட்டாயப்படுத்தியது.
இதன் மூலம், அமீரகத்துக்கு செல்லும் முதலீடுகளை மடைமாற்றுவதுதான் சவுதியின் எண்ணம். 2024-ல் இருந்து இந்த கொள்கையை நடைமுறைப்படுத்தி வருகிறது சவுதி. இதன் விளைவாக அமீரகத்தில் இருந்து சில நிறுவனங்கள் தங்கள் தலைமையகத்தை சவுதிக்கு மாற்றியிருக்கின்றனர். இது அமீரகத்தை கொந்தளிக்கச் செய்தது.
நேரடியாக மோதுவதை விரும்பாத அமீரகம், சவுதிக்கு குடைச்சல் கொடுக்க விரும்பியது. அப்படி குடைச்சல் கொடுப்பதன் மூலம் சவுதிக்கு வரவிருக்கும் முதலீடுகளை தடுக்க திட்டமிட்டது. அதன் ஒரு பகுதியாகத்தான், ஏமனில் எஸ்.டி.சிக்கு ஆதரவு கொடுத்து, சவுதி எல்லையி பிரச்னையை ஏற்படுத்த அமீரகம் முயன்றதாக சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
ஏமன் பிரச்னை சவுதிக்குள் பரவினால், சவுதியின் அமைதிக்கும், நிலைத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அப்படிப்பட்ட சூழலில் முதலீடு் செய்ய முதலீட்டாளர்கள் தயங்குவார்கள். அமீரகமும் தன் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற கணக்கு இதில் இருக்கிறது.
ஆனால், எஸ்.டி.சி படைகளை சவுதி படைகள் விரட்டியடித்ததால், தற்போதைக்கு தன்னை தற்காத்துக் கொண்டது சவுதி.

பிரச்னை முடியுமா?
இந்த அதிகாரப் போட்டி முடிவுறாது. வெவ்வேறு வகையில் தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சவுதியில் நடந்து வரும் ‘உலக பாதுகாப்பு கண்காட்சி’யிலிருந்து அமீரக நிறுவனங்கள் வெளியேறியிருப்பதும், இந்த பிரச்னையின் தொடர்ச்சியாகத்தான் பார்க்கப்படுகிறது. முதலீடுகளையும், நாட்டின் ஸ்திரத்தன்மையையும் பாதுகாப்பது அவசியமாவதால், இந்த மோதல் ஆயுத வடிவம் எடுக்காது என்று சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒருவேளை இந்த பொருளாதார மோதல் தீவிரமடையும் பட்சத்தில் அது, வளைகுடா நாடுகளில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். வளைகுடாவின் எதிர்காலத்தை தீர்மானிப்பதாக அந்த மோதல் இருக்கும். அந்த வகையில் இது இருநாடுகளின் பிரச்னை மட்டுமல்ல, வளைகுடாவின் பிரச்னை, இன்னும் சொல்லப்போனால், உலகின் எண்ணெய் வளத்தில் 24% கொண்டுள்ள இரண்டு நாடுகளிடையே ஏற்படும் மோதல், உலகின் பிரச்னையும் கூட!
ஏமனைத் தாண்டி, வேறு சில நாடுகளிலும் சவுதியும், அமீரகமும் மறைமுகமாக மோதி வருகின்றனர். அவை எந்த நாடுகள்? சவுதி, அமீரகத்தின் நட்பில் பிளவு ஏற்பட முக்கியமான காரணங்களாக அமைந்த வரலாற்று சம்பவங்கள் என்னென்ன? விரிவாக தெரிந்து கொள்ள பின் வரும் வீடியோவை பாருங்கள்!

















