``அவரை இக்னோர் பண்ணுங்க... அவரும் அவர் ஸ்டேட்மெண்டும்" - சேகர் பாபு குறித்து அமை...
Scene: " 'ழகரம் ஸ்டுடியோஸ்' தொடங்கியதற்கான காரணம்!?" - புதிய தயாரிப்பு நிறுவனம் குறித்து சூர்யா
சூர்யாவின் 'சீன்' திரைப்படம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வருகிறது. மலையாள சினிமா இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் நஸ்ரியா, நஸ்லென் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
'பேரழகன்' படத்திற்குப் பிறகு மலையாள சினிமா இயக்குநருடன் இப்படத்தில் இணைந்திருக்கிறார் சூர்யா. இந்தப் படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைக்கிறார். நேற்றைய தினம் இப்படத்தின் நிகழ்வு துபாயிலுள்ள ஒரு மாலில் நடைபெற்றது.

சூர்யா பேசுகையில், "'சீன்' கதை கேட்டு முடித்தவுடனேயே 'இந்தப் படத்தை நாம் பண்ணுகிறோம்' என்று முடிவு செய்து கைகொடுத்துவிட்டோம்." என்றவர், தொடர்ந்து, "நான் சரவணனாக இருக்க முடியாது.
ரசிகர்கள் என்னைச் சூர்யாவாக தான் எதிர்பார்க்கிறார்கள். அதனால் அவர்களுக்காக நான் 'சூர்யா'வாக மாற வேண்டியிருந்தது. எனக்குள் இருக்கும் இன்னொரு பக்கத்தைக் கண்டறிந்து, அவர்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது.
ரசிகர்கள் காட்டுவது எவ்வித எதிர்பார்ப்புமற்ற உண்மையான அன்பு. அதனால் என்னால் எவ்வளவு உண்மையாகவும், இதயப்பூர்வமாகவும் இருக்க முடியுமோ அவ்வளவு உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்." என்றார்.
சூர்யா - ஜோதிகா சமீபத்தில் தங்களின் 20-வது ஆண்டு திருமண விழாவை கொண்டாடியிருந்தனர். அது குறித்து, "தொழில்ரீதியாகவும் சரி, சொந்த வாழ்க்கையிலும் சரி, நான் ஒரு சிறிய முயற்சி எடுத்தால் எனக்குப் பத்து மடங்கு அன்பு திரும்பக் கிடைக்கிறது.
ஒரு நடிகனாக நான் 1% உழைப்பைக் கொடுத்தால், ரசிகர்கள் எனக்கு 100 சதவீதம் அன்பைத் திரும்பத் தருகிறார்கள். இத்தனை ஆண்டுகள் கடந்து, எத்தனையோ படங்கள் வந்த பிறகும் கூட, 'பார்த்த முகம்தானே, இவன் புதிதாக என்ன செய்துவிடப் போகிறான்?' என்று ஒதுக்கித்தள்ளாமல், அவர்களின் அன்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே தான் செல்கிறது.

ஞாயிற்றுக்கிழமை அதுவுமாகப் பல்வேறு வேலைகள் இருந்தும் கூட குழந்தைகளும் பெண்களும் திரளாக வந்து நமக்காக நிற்கும்போது, அதை நினைத்து எனக்குப் பெருமதிப்பு ஏற்படுகிறது. நான் போடும் ஒரு சிறிய முயற்சிக்கு 100 மடங்கு அன்பு எனக்குக் கிடைக்கிறது.
என்னுடைய திருமண வாழ்க்கையும் அப்படித்தான். நான் எடுக்கும் ஒரு சிறிய முயற்சிக்கு ஜோதிகாவிடம் இருந்து அளப்பரிய அன்பு திரும்பக் கிடைக்கிறது. அவர் என் மீது பொழியும் அன்பிற்கு ஈடாக என்னால் எதுவுமே செய்ய முடியாது. அதனால் நான் செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் முழு மனதோடும் உண்மையாகவும் செய்ய முயற்சிக்கிறேன்." என்றார்.
'சீன்' படத்த்தை சூர்யா - ஜோதிகா, 'ழகரம்' என்கிற பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியிருக்கிறார்.
புதிய தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்டது குறித்து, "'அகரம்' அறக்கட்டளையில் 20 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறோம். சினிமாவிலும் அதுபோன்ற ஒரு முயற்சியை எடுக்க வேண்டும் என்று நினைத்தேன்.

'2D என்டர்டெயின்மென்ட்' நிறுவனம் எப்போதும் குடும்பத்தோடு பார்த்து மகிழக்கூடிய, வணிக ரீதியாகவும் வெற்றிபெறக்கூடிய தரமான திரைப்படங்களையே தயாரித்து வருகிறது.
ஆனால், எங்களது 'ழகரம்' தயாரிப்பு நிறுவனம் மூலமாக இதுவரை வெளிவராத புதிய திறமைகளை கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்க விரும்புகிறோம். புதிய திறமையாளர்களைத் தேடிக் கண்டுபிடிப்பதே ழகரத்தின் நோக்கம்." எனப் பகிர்ந்திருக்கிறார்.



















