``அவரை இக்னோர் பண்ணுங்க... அவரும் அவர் ஸ்டேட்மெண்டும்" - சேகர் பாபு குறித்து அமை...
கணவனின் கழுத்தை இறுக்கி கொலை செய்த தவெக பெண் நிர்வாகி கைது - பிரபல ரவுடி மரணத்தில் மர்மம் விலகியது!
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள இறச்சகுளம் பூங்கா நகரைச் சேர்ந்தவர் புதூர் மணிகண்டன் என்ற சுரேஷ் (43). காவல்துறையின் பிரபல ரவுடிகள் பட்டியலில் இவரின் பெயர் இடம்பிடித்திருந்தது. கடந்த 2011-ம் ஆண்டு தமிழ்நாட்டையே உலுக்கிய தேரூர் வன ஊழியர் ஆறுமுகம் மற்றும் அவரது மனைவி யோகீஸ்வரி ஆகியோர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் மணிகண்டன் முக்கியக் குற்றவாளியாவார். இதுதவிர, இவர் மீது பல்வேறு கொலை முயற்சி வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இவருக்கு பாரதி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். பாரதி, கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட த.வெ.க மகளிர் அணி இணைச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார். கடந்த 22-ம் தேதி இரவு நேரத்தில் திடீரென தனது கணவருக்குக் கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, பாரதி அவரை வடசேரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், மணிகண்டன் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். பாரதி உடனடியாக அவரை நாகர்கோவிலில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். அங்கும் மருத்துவர்கள் மணிகண்டன் இறந்துவிட்டதை உறுதி செய்தனர். இதையடுத்து, சடலத்தை ஆம்புலன்ஸ் மூலம் இறச்சகுளத்தில் உள்ள வீட்டுக்குக் கொண்டுவந்த பாரதி, யாருக்கும் சந்தேகம் ஏற்படாதவாறு, அவசர அவசரமாக உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக இறங்கினார்.

பிரபல ரவுடி மணிகண்டன் திடீரென உயிரிழந்த தகவல், மருத்துவமனை நிர்வாகம் அளித்த 'இண்டிமேஷன்' மூலம் பூதப்பாண்டி காவல் நிலைய போலீஸாருக்கு தெரியவந்தது. ரவுடிகள் பட்டியலில் உள்ள நபர் மரணமடைந்ததால் உடனடியாக இறச்சகுளத்தில் உள்ள அவரது வீட்டிற்கு போலிஸார் விரைந்தனர். மணிகண்டனின் உடலை பார்வையிட்ட போலீஸார், அவரது கழுத்துப் பகுதியில், கயிறு போன்ற ஒன்றினால் பலமாக இறுக்கப்பட்டதற்கான தழும்புகளும் காயங்களும் இருப்பதை பார்த்தனர். இது இயற்கை மரணம் அல்ல, கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்ததை அடுத்து, உடனடியாக உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு எடுத்துச் செல்ல போலீஸார் முயன்றனர். அதுவரை அழுதுகொண்டிருந்த அவரது மனைவி பாரதி, "என் கணவரின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு எடுத்துச் செல்ல விடமாட்டேன். மீறி எடுத்தால் தீக்குளிப்பேன்" எனப் போலீஸாரை மிரட்டினார். பாரதியின் எதிர்ப்பு போலீஸாரின் சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்தியது. பின்னர், அவரை சமாதானப்படுத்திய போலீஸார், மணிகண்டனின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்குப்பின் அவரது உடலுக்கு இறுதிச்சடங்கு நடத்தப்பட்டது.மருத்துவர்கள் அளித்த உடற்கூறு ஆய்வு அறிக்கையில், மணிகண்டனின் கழுத்தில் கயிறால் பலமாக இறுக்கப்பட்டு மூச்சுத் திணறி உயிரிழந்தது உறுதியானது.

மணிகண்டன் கொலைச் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பூதப்பாண்டி போலீஸார் மணிகண்டனின் வீடு மற்றும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது, மணிகண்டனின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த அனைத்து கண்காணிப்பு கேமராக்களும் சம்பவத்தன்று இரவு திட்டமிட்டு அணைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. கேமராக்கள் அணைக்கப்பட்டது குறித்துப் பாரதியிடம் விசாரித்தபோது, "இரவு வீட்டில் மின்சாரம் இல்லை, அதனால் கேமராக்கள் இயங்கவில்லை" என்று கூறினார். ஆனால், வீட்டில் இன்வெர்ட்டர் வசதி இருப்பதை கவனித்த போலீஸார், கேமராக்கள் மட்டும் எப்படி ஆஃப் ஆனது என கேள்வி எழுப்பியபோது பாரதியால் பதிலளிக்க முடியவில்லை. போலீஸாரின் தீவிர விசாரணையில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த கணவர் மணிகண்டனின் கழுத்தை கயிற்றால் இறுக்கிக் கொலை செய்ததை பாரதி ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து, பாரதியை போலீஸார் கைது செய்தனர். தினமும் குடித்துவிட்டு டார்ச்சர் செய்ததால் கணவன் தூங்கும்போது கயிறால் இறுக்கிக் கொலை செய்ததாக பாரதி தெரிவித்துள்ளார். போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.





















