நெல்லை: பொருநை அருங்காட்சியகம் திறப்பு விழா; முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம...
SIR: எஸ்.ஐ.ஆர் வரைவு வாக்காளர் பட்டியல்: தஞ்சாவூர் மாவட்டத்தில் 2,06,503 வாக்காளர்கள் நீக்கம்!
தமிழகம் முழுவதும் எஸ்.ஐ.ஆர் மூலம் வாக்காளர் பட்டியலை சரிபார்த்து சீரமைக்கும் பணியினை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. பீகாரில் வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டதாக சர்ச்சை கிளம்பியதால் இதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் குறைந்த கால அவகாசமே கொடுப்பட்டதும் சர்ச்சைகளுக்கு வித்திட்டது.
இந்த சூழலில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வருவாய்துறையினர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன் எஸ்.ஐ.ஆர் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எஸ்.ஐ.ஆர் படி வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டார். எஸ்.ஐ.ஆர்-க்கு முன்பு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்ற தொகுதிகளிலும் 20,98,561 வாக்காளர்கள் இருந்தனர்.
எஸ்.ஐ.ஆர்க்கு பின்பு 18,92,058 வாக்காளர்கள் வரைவுபட்டியலில் இடம் பெற்றுள்ளனர். 2,06,503 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் இறந்தவர்கள் மற்றும் வேறு பகுதிக்கு குடிபெயர்ந்தவர்களும் அடக்கம் என சொல்லப்பட்டுகிறது. இது குறித்து அரசியல் கட்சிகளை சேர்ந்த சிலரிடம் பேசினோம், ``தஞ்சாவூர் மாவட்டத்தில் முதலில் எஸ்.ஐ.ஆர் விண்ணப்பங்கள் பெற்று அதை பதிவேற்றம் செய்கின்ற பணி சுணக்கமாக நடைபெற்றது. பின்னர், மாவட்ட ஆட்சியர், டி.ஆர்.ஓ உள்ளிட்ட அதிகாரிகள் இதில் முழு கவனம் செலுத்தி இரவு, பகலாக பணியினை மேற்கொண்டனர்.
அதனால் எஸ்.ஐ.ஆர் விண்ணப்பம் பெற்று பதிவேற்றம் செய்யும் பணி வேகமெடுத்தது. ஆதார் போன்றவை கொடுக்காத விண்ணப்பங்களும் பதிவேற்றம் செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் 2,06,503 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தகுதியான வாக்காளர் பெயர் ஏதோ ஒரு காரணத்தால் விடுபட்டிருந்தால், அல்லது நீக்கம் செய்யப்பட்டிருந்தால் அந்த வாக்காளரை சேர்த்து அவர் தன்னுடைய வாக்குரிமையை செலுத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு வாக்காளர் தனது வாக்கை இழந்தால் அது தேர்தல் ஆணையத்தில் தோல்வியாகவே பார்க்கப்படும்" என்றனர்.


















