'தி காட்பாதர்' முதல் 'பாட்ஷா' வரை! - இந்தாண்டு சென்னை திரைப்பட விழாவில் திரையிடப...
`SIR தொடர்பான APK ஃபைல் வந்தால், கிளிக் செய்ய வேண்டாம்’ - சைபர் கிரைம் போலீஸார் எச்சரிக்கை
`சைபர்’ குற்றங்கள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. இந்த வகைகுற்றங்களைத் தடுக்க சைபர் கிரைம் போலீஸாரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஆனாலும், சைபர் குற்றவாளிகள் நாட்டில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளைப் பயன்படுத்தி, பொது மக்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணத்தை அபகரிப்பது குறைந்தபாடில்லை.
இந்த நிலையில்தான் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீர்திருத்தம் தொடர்பான `எஸ்.ஐ.ஆர்’ பெயரைப் பயன்படுத்தியும் சைபர் மோசடி அரங்கேறி வருகிறது.

வாட்ஸ் அப்பில், `ஏ.பி.கே (APK)’ ஃபைல்களை அனுப்பி, அதை கிளிக் செய்ய வைப்பதன் மூலமாக போனை `ஹேக்’ செய்து, சம்பந்தப்பட்டவரின் வங்கிக் கணக்கில் இருந்து மொத்த பணத்தையும் எடுத்துவிடுகின்றனர்.
இதனால், ``ஏ.பி.கே ஃபைல்கள் வாட்ஸ்அப்பில் வந்தால், அதை எக்காரணம் கொண்டும் `இன்ஸ்டாலேஷன்’ அல்லது `கிளிக்’ செய்ய வேண்டாம்’’ என சைபர் கிரைம் போலீஸார் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர்.
இது தொடர்பாக, சைபர் கிரைம் போலீஸார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ``வங்கிக் கணக்கில் உள்ள `ரிவார்டு’ பாயிண்ட்டுகளை பணமாக மாற்ற `SBI reward.apk’, ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு அபராதம் செலுத்த `RTO challan.apk’, வங்கிக் கணக்கின் கே.ஒய்.சி (KYC) புதுப்பிக்க `KYC/Aadhar update.apk’ போன்ற ஏ.பி.கே ஃபைல்களை அனுப்பி, பணம் அபகரிக்கப்பட்டு வருகிறது.
தற்போது, தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சீர்திருத்த பணிகள் பி.எல்.ஓ-க்கள் மூலம் நடைபெற்று வருகின்றன.

இக்காலக்கட்டத்தில், சைபர் கிரைம் குற்றவாளிகள் வாட்ஸ் அப்பில், `வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் வாக்காளர் பெயர் மற்றும் வாக்காளரின் நிலை போன்ற விவரங்களை அறிந்துகொள்ள’ என்ற தலைப்பில், `SIR Election Commission.apk’ என்கிற ஏ.பி.கே ஃபைலை அனுப்பி வருகின்றனர்.
இப்படி வரும் ஏ.பி.கே ஃபைலின் லிங்க்கை இன்ஸ்டாலேஷன் அல்லது கிளிக் செய்வதன் மூலமாக தங்களுடைய போன் `ஹேக்’ செய்யப்பட்டு, வங்கிக் கணக்கில் இருந்தும் பணம் முழுவதுமாக எடுக்கப்படுகிறது. ஆகையால், வாட்ஸ் அப் குரூப்பில் வரும் எந்தவொரு லிங்க் மற்றும் ஏ.பி.கே ஃபைல்களை கிளிக் செய்ய வேண்டாம்’’ எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

















