TNPSC குரூப் 2, 2A மெயின்ஸ் தேர்வு 'பின்னர்' ஒத்திவைப்பு - காரணம் என்ன?
T20: 'இது' தான் என்னை மீண்டும் சூர்யாவாக்கியது! - IND Vs USA வெற்றிக்குப் பின் சூர்யகுமார் யாதவ்
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற T20 உலகக்கோப்பை தொடரின் மூன்றாவது லீக் போட்டியில் இந்தியா – அமெரிக்கா அணிகள் நேருக்கு நேர் மோதின.
டாஸ் வென்ற அமெரிக்க அணியின் கேப்டன் மோனாங்க் படேல், சூழ்நிலையை கணித்து பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.
முதலில் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. அமெரிக்க வேகப்பந்து வீச்சாளர்களின் துல்லியமான பந்து வீச்சுக்கு இந்திய டாப் ஆர்டர் வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக பெவிலியன் திரும்பினர்.

இலக்கு நிர்ணயித்த இந்தியா
பவர் பிளே முடிவில் இந்திய அணி கடுமையான அழுத்தத்தில் சிக்க, ஸ்கோர் 77/6 என்ற நிலைக்கு சரிந்தது.
அந்த நெருக்கடியான தருணத்தில் பொறுப்புடன் விளையாடினார் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ்.
சூழ்நிலைக்கு ஏற்ப பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், 49 பந்துகளில் 84 ரன்கள் என அபாரமாக விளையாடி இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டார். அவரது இன்னிங்ஸின் துணையுடன் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 161/9 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் அமெரிக்க அணிக்கு 162 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
'ஆட்டநாயகன்' - சூர்ய குமார் யாதவ்
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய அமெரிக்க அணி வீரர்கள், இந்திய அணியின் கட்டுப்படுத்தப்பட்ட பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுக்கடுக்காக விக்கெட்டுகளை இழந்தனர்.
கேப்டன் மோனாங்க் படேல் உட்பட டாப் ஆர்டர் வீரர்கள் எதிர்பார்த்த அளவுக்கு பங்களிக்கத் தவறினர். 20 ஓவர்கள் முடிவில் அமெரிக்க அணி 132/8 ரன்கள் மட்டுமே எடுத்ததால், இந்திய அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக கேப்டன் சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டார்.

வெற்றி குறித்து சூர்யகுமார் யாதவ் கூறியதாவது:
“கடந்த ஆண்டு முழுவதும் அணிக்காக இன்னிங்ஸை பிடித்து விளையாட முயன்றேன். ஆனால் அது என் வழியில் நடக்கவே இல்லை. ரன்கள் வரவில்லை, நம்பிக்கை சறுக்கிக் கொண்டே இருந்தது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி தொடருக்குப் பிறகு, ‘சரி… இதை விட்டுவிடலாம்’ என்று நினைத்தேன். கிட்டை மூடி வைத்துவிட்டு, குடும்பத்துடன் இரண்டு வாரங்கள் முழுக்க நேரம் கழித்தேன். அந்த ஓய்வே என்னை மீண்டும் சூர்யாவாக்கியது.
என்னை மீண்டும் சூர்யாவாக்கியது!
புது வருடம் தொடங்கியது. நாக்பூருக்கு வந்ததும் மனநிலை முற்றிலும் மாறியது. ‘இது 180–190 ரன் அடிக்க வேண்டிய மைதானம் இல்லை; 140 போதுமானது’ என்ற எண்ணம் முதல் ஓவரிலிருந்தே மனதில் இருந்தது. 77 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் விழுந்தபோதும், பதட்டம் வரவில்லை. அந்த தருணத்தில் கௌதி பாய்(கவுதம் கம்பீர்) வந்து சொன்ன ஒரே வார்த்தை தான் எனக்கு தெளிவை கொடுத்தது – ‘கடைசி வரை நின்று விளையாடு. ரன்களை நீ எப்பவும் எடுத்துக்கலாம்.’

அந்த ஆலோசனையே என் விளையாட்டின் திசையை மாற்றியது. ஒவ்வொரு ஓவராகவும் யார் பந்து வீசப் போகிறார், எத்தனை பந்துகள் மீதம் இருக்கிறது என்பதை கணக்கிட்டு, தேவையற்ற ஆட்டங்களை தவிர்த்தேன். ஒரு பேட்ஸ்மேன் கடைசி வரை நின்றாலே இந்தப் போட்டி நம்முடையது என்பதில் உறுதியாக இருந்தேன்.
முக்கியமாக, மும்பை கிரிக்கெட்டில் நான் வளர்ந்தவன். இந்த மாதிரியான விக்கெட்டுகளிலும், மைதானங்களிலும் நான் நிறைய கிரிக்கெட் விளையாடியிருக்கிறேன். அதனால் பிச்சுக்கு எப்படி ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியும். பொறுமையும் சரியான ஷாட் தேர்வுமே அந்த இன்னிங்ஸின் உயிர். அந்த நம்பிக்கையும், அந்த அமைதியும் தான் இந்த வெற்றிக்கு காரணம்.”














