அதிமுக: "அப்படி இருந்தா சொல்லுங்க அரசியலை விட்டு போய்விடுகிறேன்" - ஜெயக்குமார் எ...
WPL 2026: '2வது முறை சாம்பியன்' - RCB சாதனை! தொடரும் டெல்லி அணியின் 'பைனல்' சோகம்
மகளிர் பிரீமியர் லீக் (WPL) தொடரின் 2026-ம் ஆண்டுக்கான இறுதிப்போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி அபார வெற்றி பெற்றது.
இதன் மூலம் டெல்லி அணி தொடர்ச்சியாக நான்காவது முறையாக இறுதிப்போட்டியில் தோல்வியைத் தழுவி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
போட்டியின் ஆரம்பத்தில் டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் ஸ்மிருதி மந்தனா பௌலிங்கைத் தேர்வு செய்தார். முதலில் களம் புகுந்த டெல்லி அணிக்கு லிசெல் லீ மற்றும் சஃபாலி வர்மா ஜோடி அதிரடியான தொடக்கத்தை அளித்தது. பவர் பிளேயின் கடைசி ஓவரில் சஃபாலி வர்மா ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து லிசெல் லீயும் வெளியேற டெல்லிக்குச் சிறு நெருக்கடி ஏற்பட்டது.
அதன்பின் களமிறங்கிய லாரா வோல்வார்ட் 25 பந்துகளில் 44 ரன்களும், அணியின் கேப்டன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 37 பந்துகளில் 57 ரன்களும் எடுத்து சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இறுதியில் ஹென்றி 35 ரன்கள் சேர்க்க, டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 203 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது.
கடினமான இலக்கை நோக்கி ஆடிய பெங்களூரு அணிக்கு ஜி. ஹாரிஸின் விக்கெட் ஆரம்பத்திலேயே சரிந்தது. எனினும், ஜார்ஜியா வோல் மற்றும் கேப்டன் ஸ்மிருதி மந்தனா இணைந்து டெல்லி பந்துவீச்சாளர்களைத் திணறடித்தனர். இருவரும் 165 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.
ஜார்ஜியா வோல் 16-வது ஓவரில் ஆட்டமிழந்த பிறகு, ரிச்சா கோஷ் (6), நதின் டி கிளர்க் (7) மற்றும் ராதா யாதவ் (12) ஆகியோர் சொற்ப ரன்களைச் சேர்த்தனர். கடைசி ஓவரில் பெங்களூரு அணி த்ரில் வெற்றிபெற்று கோப்பையைக் கைப்பற்றியது.
டெல்லியின் 'பைனல்' சோகம்: எட்டாக் கனியான கோப்பை
2023-ம் ஆண்டு தொடங்கப்பட்ட WPL தொடரின் அனைத்து இறுதிப்போட்டிகளுக்கும் முன்னேறிய ஒரே அணி என்ற பெருமையைத் டெல்லி கேப்பிடல்ஸ் பெற்றிருந்தாலும், கோப்பையை வெல்வது அவர்களுக்கு எட்டாக் கனியாகவே உள்ளது:
2023: மும்பை இந்தியன்ஸிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி.
2024: பெங்களூரு அணியிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி.
2025: மும்பை இந்தியன்ஸிடம் 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி.
2026: பெங்களூரு அணியிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி.
தொடர்ந்து நான்கு முறை இறுதிப்போட்டி வரை சென்று தோல்வியைத் தழுவிய டெல்லி அணியினருக்கு இந்த முறையும் ஏமாற்றமே மிஞ்சியது. பெங்களூரு அணியின் இந்த வெற்றி அந்த அணி ரசிகர்களை உற்சாகக் கடலில் ஆழ்த்தியுள்ளது.

















