செய்திகள் :

`வீடுகளில் தேநீர் தயாரிக்கப்பட்டாலும்.!' அரசியலை வளர்த்த டீ கடைகளும் கட்சிப் பத்திரிகைகளும்! | EP 4

post image

இன்று தொடுதிரையில் கணநேரத்தில் நாட்டு நடப்புகளை அறிகிறோம். தலைவர்கள் சமுக வலைதளம் மூலம் உடனுக்குடன் மக்களிடம் பேசுகிறார்கள். அனால் நாம் கடந்து வந்த தேர்தல் பாதை இத்தனை எளிதானதன்று! திண்ணை பிரசாரம், தெருமுனை கூட்டங்கள், ரேடியோ, தொலைக்காட்சி, சமுக வலைதளம் என கடந்து வந்த பாதையும், கட்சிகள் அவற்றை திறம்பட கையாண்ட விதமும் இன்றும் ஆச்சரியமானவை! அந்த ஆச்சரிய காலங்களுக்கு அழைத்துச் செல்கிறார் பா. முகிலன், தமிழக தேர்தல்களின் நினைவுச் சுவடுகள் தொடர் மூலம்!

தமிழ்நாட்டில் அரசியல் என்பது கட்சி அலுவலகங்கள், சட்டமன்ற அரங்குகள் அல்லது தேர்தல் மேடைகளுக்குள் மட்டுமே இருந்ததில்லை. பல ஆண்டுகளாக அது டீ கடைகளிலும் உயிர்ப்புடன் இருந்தது. சிறிய தெருமுனைகளில் இருக்கும் அந்த டீ கடைகளில், கிணிங் கிணிங் எனச் சத்தமிடும் கண்ணாடி டம்ளர்களின் ஓசையுடன் செய்தித்தாள்கள் ஒருவரிடமிருந்து மற்றொருவரின் கைகளுக்குச் செல்லும். சமயங்களில் ஒரே பக்கத்தை இரண்டு அல்லது மூன்று பேர்கூடச் சேர்ந்து படிப்பது உண்டு. அதனைத் தொடர்ந்து நடைபெறும் அரசியல் விவாதங்களில், குவளையில் ஆற்றப்படும் டீயைப் போலவே சூடு பறக்கும். 

இந்த டீ கடைகளுடன் சேர்ந்து, செய்தித்தாள்களும் கட்சி சார்ந்த பத்திரிகைகளும் சாதாரண மக்களுக்கு அதிகாரம், அரசியல் கொள்கைகள், தலைமை என்றால் என்ன என்பதைப் புரிய வைத்தன. இவை அனைத்தும் இணைந்து, மக்களின் கருத்துகளையும் கட்சிகளின் அடிப்படை ஆதரவு வலையையும் உருவாக்கிய ஒரு அமைதியான, ஆனால் வலிமையான அரசியல் சூழலை உருவாக்கின.

டீக்கடை

1950-களில் இருந்து 1980-களின் இறுதிவரை, தமிழ்நாட்டில் டீ கடைகள் மக்கள் தங்களின் அரசியலைப் பேசும் மிக எளிய பொது இடங்களாக இருந்தன. கட்சி கூட்டங்கள் அல்லது தேர்தல் மேடைகள் போல அழைப்போ, உறுப்பினர் அடையாளமோ இங்கே தேவையில்லை. யார் வேண்டுமானாலும் உள்ளே வரலாம்; பேசலாம்; எதிர்ப்புக் கருத்துகளைத் தெரிவிக்கலாம் அல்லது மற்றவர்கள் பேசுவதை அல்லது விவாதிப்பதை அமைதியாகக் கேட்கலாம். இந்தத் திறந்த தன்மையே, டீ கடைகளை ஒரு தனித்துவமான ஜனநாயக வெளியாக மாற்றியது.

காலையில் வீடுகளில்  தேநீர் தயாரிக்கப்பட்டாலும், செய்தித்தாள் படிப்பதற்காகவும், அதில் வரும் செய்திகள் குறித்து நண்பர்கள் அல்லது மாற்றுக் கட்சியினருடன் விவாதிப்பதற்காகவும் என்றே, ஆண்கள் பலரும் டீ கடைகளைத் தேடி வருவதுண்டு. படிக்கத் தெரிந்த ஒருவர், அரசியலில் ஆர்வம் கொண்ட ஒருவர், செய்திகளைச் சத்தமாக வாசிப்பார். மற்றவர்கள் கேட்பார்கள்; இடைமறிப்பார்கள்; கேள்வி எழுப்புவார்கள்; வாதம் செய்வார்கள்.

அந்த வகையில், இங்கே செய்தி வெறும் தகவலாக  மட்டுமல்லாது, விவாதமாகவும் பகுப்பாய்வாகவும் மாறியது. இந்த உரையாடல்கள் சிறியதாகத் தோன்றினாலும், அவை தலைவர்கள், அரசுகள், கொள்கைகள் பற்றிய மக்களின் பார்வையை உருவாக்கின. பல கிராமங்களிலும், தொழிலாளர்கள் நிறைந்த பகுதிகளிலும், ஒருவரின் அரசியல் அடையாளம் உருவான இடம் டீ கடைகளே என்றால், அது மிகையில்லை.

முன்னணி தமிழ் நாளிதழ்கள், டீ கடை அரசியல் விவாதங்களுக்கான அடிப்படை  ஆதாரமாக இருந்தன. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான வாசக வட்டத்தைப் பெற்றிருந்தன. எளிய மொழி, குறுகிய வாக்கியங்கள், உள்ளூர் செய்திகளுக்கு அளித்த முக்கியத்துவம் ஆகியவை, டீ கடைகளில் கூட்டாக வாசிக்க ஏற்றதாகத் திகழ்ந்தன.

ஆங்கில நாளிதழ்கள் போல் உயர் வகுப்பு வாசகர்களுக்காக அல்லாமல், தமிழ் நாளிதழ்கள் மாநில மற்றும் மத்திய அரசியல் செய்திகளை சாதாரண மக்களுக்குப் புரியும் மொழியில் கொண்டு வந்தன. அரசின் முடிவுகள், விலைவாசி உயர்வு, சட்டம்–ஒழுங்கு பிரச்னைகள், தேர்தல் செய்திகள் ஆகியவை பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புபடுத்திப் பேசப்பட்டன. பஸ் கட்டண உயர்வு, ரேஷன் அரிசி தட்டுப்பாடு, உள்ளாட்சி அலுவலகங்களின் செயலிழப்பு போன்ற விஷயங்கள் டீ கடை விவாதங்களில் அடிக்கடி இடம் பெற்றன.

இந்த நாளிதழ்கள் நேரடியாக எந்தக் கட்சியையும் ஆதரிப்பதில்லை என்றாலும், அவற்றின் செய்தித் தன்மை மற்றும் தலைப்புகள் மூலம், ஆட்சியில் இருக்கும் அரசைப் பற்றி சாதகமாகவோ, விமர்சனமாகவோ வாசகர்கள் புரிந்து கொண்டனர். காலப்போக்கில், இவ்வாறு மெதுவாக உருவான செய்தி அணுகுமுறைகளே மக்களின் அரசியல் மனநிலையை மாற்றுவதில் முக்கியப் பங்கு வகித்தன.

பிரதான நாளிதழ்களுடன் சேர்ந்து, கட்சிகளுடன் தொடர்புடைய பத்திரிகைகள் இன்னும் ஆழமான அரசியல் பாத்திரத்தை வகித்தன. குடிஅரசு, விடுதலை, திராவிட நாடு, முரசொலி ( திராவிடர் கழகம் மற்றும் திமுக ஆதரவு) சுதேசமித்ரன், நவசக்தி(காங்கிரஸ் ஆதரவு), ஜனசக்தி ( கம்யூனிஸ்ட் ஆதரவு) அண்ணா, நமது எம்ஜிஆர் ( அதிமுக ஆதரவு - ) போன்ற வெளியீடுகள், வெறும் செய்தி தரும் ஊடகங்களாக மட்டுமல்லாது, அந்தந்த கட்சித் தொண்டர்களின் அரசியல் சிந்தனைகளை மேலும் கூர்படுத்தவும் செய்தன. 

இந்தப் பத்திரிகைகள் சமூக நீதி, பகுத்தறிவு, மொழி அடையாளம், மாநில உரிமைகள், மத்திய ஆதிக்கத்துக்கு எதிரான சிந்தனை போன்ற கருத்துகளை மக்களிடையே கொண்டு சென்றன. இவை நடுநிலையை நோக்கமாகக் கொள்ளவில்லை. மக்களை, தங்களுக்கு ஆதரவாக சம்மதிக்க வைக்க வேண்டும் என்பதே அவற்றின் நோக்கமாக இருந்தது. அதனால், அதன் மொழிநடை கூர்மையாகவும், உணர்ச்சி நிறைந்ததாகவும், தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் இருந்தது.

'குடி அரசு' பத்திரிகை, பெரியாரால் தொடங்கப்பட்ட, பகுத்தறிவு, சாதி ஒழிப்பு, பெண் விடுதலை போன்ற கருத்துகளைப் பரப்பிய வார இதழ். சமூக மாற்றத்திற்கான கருத்துகள், பகுத்தறிவு, சாதி ஒழிப்பு, பெண் விடுதலை மற்றும் பகுத்தறிவுவாதக் கொள்கைகளை வலியுறுத்தி அதில் தீட்டப்படும் தலையங்கங்களும் எழுதப்படும் கட்டுரைகள் பெரும்பாலும் பெரியாராலேயே வெவ்வேறு புனைப் பெயர்களில் எழுதப்பட்டதாக இருக்கும். சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய பரப்புரைக் கருவியாக செயல்பட்டது.

அதேபோன்றுதான் 'விடுதலை' திராவிடர் கழகத்தின் கொள்கைகளைப் பரப்பும் நாளிதழாக வெளிவந்தது. திராவிடர் கழகம் தேர்தல் அரசியலில் ஈடுபடாது என்றாலும், தேர்தல் நேரத்தில் யாரை ஆதரிக்க வேண்டும் என்பது குறித்து பெரியார் எழுதும் கட்டுரைகள் தவறாது இடம்பெறும். இது மட்டுமல்லாது முக்கிய பிரச்னைகளில் ( உதாரணம் இந்தி எதிர்ப்பு) தமது நிலைப்பாட்டை விளக்கி பெரியார் எழுதும் கட்டுரைகளும் கவனம் பெறும்.  

குடி அரசு

 அதேபோன்று 1942 ல் அண்ணா தொடங்கிய 'திராவிட நாடு' இதழும் அண்ணாவின் எழுத்துகளாலும், "திராவிட நாடு திராவிடருக்கே" என்ற முழக்கத்தாலும் பெரிதும் பிரபலமானது. திராவிட இயக்கத்தின் கொள்கைகளையும், தமிழக அரசியல் மற்றும் பொது வாழ்வு நிகழ்வுகளையும் பரப்பிய ஒரு முக்கிய வாராந்திர தமிழ் இதழாக செயல்பட்டது. சௌமியன், பரதன் என்கிற புனை பெயர்களில் அண்ணா எழுதிய கட்டுரைகளும் தொடர்களும் நல்ல வரவேற்பைப் பெற்றவையாக திகழ்ந்தன. குறிப்பாக அவர் எழுதிய "ஆரிய மாயை" என்கிற தொடர் கட்டுரை, அந்தக் காலத்தில் பரவலாகப் பேசப்பட்ட ஒன்றாக இருந்தது.  

கருணாநிதியால் தொடங்கப்பட்ட முரசொலியில், கருத்து மோதல்களும், காரசார விவாதங்களும் அனல் பறக்கும். முரசொலியில் கருணாநிதி எழுதும் 'உடன்பிறப்புக்கு கடிதம்', எப்போதுமே அரசியல் களத்தைத் தகிப்பில் வைத்து, திமுகவினரை உற்சாகம் கொள்ள வைக்கும்.  

'கரிகாலன் பதில்கள்' என்கிற பெயரில் எழுதப்படும் கேள்வி பதில்கள் வடிவிலான கட்டுரைகள், கருணாநிதியின்  கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்லவும், எதிர்ப்புகளுக்கு பதிலளிக்கவும், குறிப்பாக பத்திரிகை தணிக்கை இருந்த காலத்தில் மறைமுகமாகப் பேசவும் உதவியது. நெருக்கடி நிலையின்போது கைதான திமுகவினரின் பெயர்களை மறைமுகமாக தெரிவிக்கும் பொருட்டு, "அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்த வர முடியாதவர்கள்' என்கிற தலைப்பில் பெயர் பட்டியலை முரசொலியில் வெளியிட்டு  கட்சியினருக்கு 'அப்டேட்' கொடுத்தார் கருணாநிதி. முரசொலியில் வெளிப்பட்ட கருணாநிதியின் அரசியல் சிந்தனைகளும் எழுத்துத் திறமையும், திமுகவினரை அவரது கட்டுக்குள் வைத்திருந்தது. 

முரசொலி

அதேபோன்று 'சின்னக்குத்தூசி' என்கிற பெயரில், இரா.தியாகராஜன் என்கிற இயற்பெயர் கொண்டவர் எழுதிய அரசியல் விமர்சனக் கட்டுரைகளும் திமுகவினரிடத்தில் வெகுவாக தாக்கத்தை ஏற்படுத்தின. வசீகரிக்கும் எழுத்து நடையில், அவர் முன்வைக்கும் ஆழமான கருத்துகளும் சொல்வீச்சுகளும் படிப்போரை அசரடிக்கும்.

மேலும், 'சிலந்தி' என்கிற புனைப்பெயரில் வெளியாகும் கட்டுரைகளும், முரசொலியின் முக்கியப் பகுதியாக விளங்கின.இதனை, கடந்த ஆண்டு மறைந்த முரசொலி செல்வம்தான் எழுதி வந்தார். இவை தவிர, கட்சியின் இரண்டாம் மட்டத் தலைவர்கள், இலக்கிய அணியைச் சேர்ந்தவர்கள், மேடை பேச்சாளர்கள் போன்றவர்களின் கட்டுரைகளும், கவிதைகளும் அரசியல் கருத்துகளைப் பேசுபவையாக இருந்தன.

 திமுகவுக்கு ஒரு 'முரசொலி' என்றால், அதிமுகவுக்கு எம்ஜிஆர் காலத்தில் 'அண்ணா' 'நமது எம்ஜிஆர்' ஆகிய பத்திரிகைகள் கைகொடுத்தன. 'நமது எம்.ஜி.ஆர்' முதலில், எம்ஜிஆர் காலத்து அதிமுகவின் கட்சி இதழாக இயங்கியது; பின்னர் 1988-ல்  ஜெயலலிதாவால் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழாக தொடங்கப்பட்டு, அதிமுகவின் கேடயமாகவும், எதிர்க்கட்சியினரைக் கட்டுரைகளாலும் கவிதைகளாலும் குத்திக்கிழிக்கும் 'குத்தீட்டி'யாகவும் செயல்பட்டது. அதன் ஆசிரியராக நீண்ட காலம் செயல்பட்டவர் மருது அழகுராஜ்.

'குத்தீட்டி' என்கிற புனைப்பெயரில் அவர் தீட்டுகிற கட்டுரைகளும் வடிக்கிற கவிதைகளும் திமுகவையும் கருணாநிதியையும் ரொம்பவே பதம் பார்த்தது. கூடவே, அதிமுக கூட்டணியில் இருந்த கட்சிகள், எதிர்முகாமுக்கு மாறினால், அந்தக் கட்சிகளும் 'குத்தீட்டி'யின் கூர்தாக்குதலுக்குத் தப்பாது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், 'நமது எம்.ஜி.ஆர்' நாளிதழ், சசிகலா குடும்பத்தினரின் கைக்கு மாறிய நிலையில்,  டி.டி.வி.தினகரனுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக, 2017 ஆகஸ்ட் மாதத்திலிருந்து ஆசிரியர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார் மருது அழகுராஜ். 

‘நமது அம்மா’ நாளிதழ் கட்டுரை

தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியால் அதிமுகவுக்கான கட்சிப் பத்திரிகையாக தொடங்கப்பட்ட 'நமது அம்மா' நாளிதழின் ஆசிரியர் பொறுப்பை ஏற்ற மருது அழகுராஜ்,  2018 முதல் 2022 வரை அப்பொறுப்பில் இருந்தார். எடப்பாடிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலின்போது, எடப்பாடியின் ஒற்றைத் தலைமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில்,  அதன் தலைமை ஆசிரியர் பதவியில் இருந்து விலகினார். தற்போது ச.கல்யாணசுந்தரம் 'நமது அம்மா" நாளிதழின் தலைமை ஆசிரியராக உள்ளார். 


காங்கிரஸ் கட்சிக்கு 'சுதேசமித்ரன்', 'நவசக்தி' போன்ற நாளிதழ்கள் ஆதரவாக இருந்தன. ஜி.கே. மூப்பனார் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்த காலத்தில், நவசக்தியின் ஆசிரியராக  எழுத்தாளர் ஜெயகாந்தன் இருந்தார். பின்னர் ஏ.கோபண்ணா,  'நவசக்தி' இதழின்  நிர்வாக ஆசிரியராக செயல்பட்டார். 

2000-ஆம் ஆண்டில் அந்த இதழ்  நிறுத்தப்பட்டது. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தமட்டில், திராவிட கட்சிகளுடன் ஒப்பிடுகையில், அதன் ஊடக வீச்சும் செல்வாக்கும் தமிழ்நாட்டில் பலவீனமான நிலையிலேயே இருந்தது. இப்பொழுதும் அப்படியே இருக்கிறது. 

கட்சிப் பாதையிலிருந்து விலகாமல், தொழில்முறை அடிப்படையில் நடத்தப்படும் மற்றொரு கட்சி பத்திரிகை சிபிஐ(எம்)-ன் 'தீக்கதிர்' ஆகும். இது சென்னை, மதுரை, திருச்சி மற்றும் கோயம்புத்தூரில் பதிப்புகளைக் கொண்டுள்ளது. இது, சிபிஐ(எம்) போன்ற வரையறுக்கப்பட்ட ஆதரவு தளத்தைக் கொண்ட ஒரு அரசியல் கட்சிக்கு ஒரு சாதனையாகும். இந்த நாளிதழ், கட்சியினரின் சந்தாக்களால்தான் நிலைத்து நிற்கிறது.  அதன் புழக்கத்தில் 15 விழுக்காடு பிரதிகள் மட்டுமே கட்சி வட்டத்திற்கு வெளியே படிக்கப்படுகிறது. அதேபோன்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவு பத்திரிகையாக 'ஜனசக்தி' வெளிவருகிறது.

அதேபோன்று மதிமுகவுக்கு ஆதரவாக 'சங்கொலி' பத்திரிகை வந்துகொண்டிருக்கிறது. 

மேற்கூறிய கட்சி பத்திரிகைகளில் எழுதப்பட்ட கருத்துகளை அந்தந்த கட்சியைச் சேர்ந்தவர்கள் ஏற்றுக்கொண்டு, அது குறித்து தேநீர் கடைகள் போன்ற பொதுவெளிகளில் சிலாகித்து, விவாதித்து  வியப்புறுவதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. கட்சியினர் அப்படித்தான் இருப்பார்கள். ஆனால், அத்தகைய கட்டுரைகள் எல்லாமே எழுத்து செறிவும், கருத்து செறிவும், சொல்வளமும் (Vocabulary ) நிறைந்ததாக இருக்கும். மேலும், கட்டுரைகளின் இடையே ஆங்காங்கே தூவப்படும் சொலவடைகளும் சொற்றொடர்களும் (Idioms and Phrases ) படிக்க அத்தனை சுவாரஸ்யமாக இருக்கும்.

இத்தகைய கட்டுரைகளைப் படிக்கும் மாற்று கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கு அவற்றில் சொல்லப்படும் கருத்துகளில் முரண்பாடுகளோ மாறுபட்ட நிலைப்பாடோ இருந்தாலும், அதன் மொழிவளம் அக்கட்டுரைகளை ஆர்வமுடன் படிக்க வைக்கும். அத்தகைய கட்டுரைகளைப் படிப்பதென்பது, ஒருவரின் மொழி அறிவையும் திறனையும் வளர்த்துக்கொள்ளத்தக்கதாக இருக்கும். 

இத்தகைய சிறப்புமிக்க பத்திரிகைகள் மற்றும் தேநீர் கடைகள் ஏற்படுத்திய விவாதங்களும் கருத்துருவாக்கங்களும் 1990-களின் இறுதியிலிருந்து, தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகங்களின் வருகையினால், அரசியல் விவாதங்களின் மையத்தன்மை மாறத் தொடங்கின. காட்சி அரசியல் வீடுகளுக்குள் நுழைந்தது. ஆனால் வடிவங்கள் மாறினாலும், கூட்டாகப்  பேசும் பழக்கம் முற்றிலும் மறைந்துவிடவில்லை. செய்தித்தாள் தலைப்புகளுக்குப் பதிலாக, இப்போது தொலைக்காட்சி விவாதங்கள், செய்தி ஸ்க்ரோல்கள், சமூக வலைத்தளங்கள் போன்றவை டீ கடை இடத்தையும் கட்சிப் பத்திரிகைகளின் இடத்தையும் பிடித்துவிட்டன.

இடங்கள் மாறலாம்… ஆனால் அரசியல் அக்கப்போர்களும் விவாதங்களும் காலத்துக்கேற்ற வடிவங்களில் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.!

(தொடரும்)

Vijay: 'புலி' பட வருமானத்தை மறைத்த வழக்கு; விஜய்யின் மனுவைத் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்

நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை 2015-ம் ஆண்டு சோதனை நடத்தியது. அப்போது ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் மதிப்பீட்டு ஆய்வு மேற்கொண்ட வருமானவரித்துறை அதிகாரிகளால்... மேலும் பார்க்க

விடாப்பிடி திருநாவுக்கரசர்; பெண் வேட்பாளரை விரும்பும் அதிமுக; அறந்தாங்கி தொகுதி 'சீட் பிடி' களேபரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கிறது அறந்தாங்கி தொகுதி. வங்காள விரிகுடா கடற்கரையையொட்டியுள்ள இந்தத் தொகுதியில் தற்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எஸ்.டி.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ-வாக இருந்து வருகிறார்.... மேலும் பார்க்க

Vijay: `அவர்கள் அப்படித்தான்' - தவெக விழா குறித்த கேள்விக்கு ஒரு வார்த்தையில் பதில் சொன்ன திருமா

பட்ஜெட் கூட்டத்தொடரில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் ஆற்றிய உரை தமிழ்நாட்டின் பரபரப்பாகப் பேசப்பட்டது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும், பா.ஜ.க-வையும் அதில் கடுமையாக விமர்சித்திருந்தார்.இந்த ந... மேலும் பார்க்க

"இந்தியாவில் 15 ஆண்டுகளில் கச்சா எண்ணெய் தீர்ந்துவிடும்" - அதிர்ச்சி கொடுத்த மத்திய அமைச்சர்

இன்னும் எத்தனை ஆண்டுகள் இந்தியாவில் கச்சா எண்ணெய் கிடைக்கும் ?நாடாளுமன்றத்தின் 2026-ம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 28-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று பிப்ரவரி 5-ம்... மேலும் பார்க்க