செய்திகள் :

UFO ரகசியங்களை உடைத்த பென்டகன்: ஏலியன்கள் நிஜமா? டொனால்ட் ட்ரம்பின் அதிரடி உத்தரவு!

post image

நமது பிரபஞ்சத்தில் மனிதர்களைத் தவிர வேறு உயிரினங்கள் இருக்கிறதா என்ற கேள்விக்கு விடை தேடும் வகையில், அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் சில ரகசியக் கோப்புகளை வெளியிட்டுள்ளது. அதிபர் டொனால்ட் ட்ரம்ப், "மக்களுக்கு உண்மைகள் தெரிய வேண்டும்" என்று உத்தரவிட்டதைத் தொடர்ந்து, பல ஆண்டுகளாகப் பூட்டி வைக்கப்பட்டிருந்த 162 ஆவணங்கள் தற்போது வெளிவந்துள்ளன.

இதில் விண்வெளி வீரர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள் நேரில் கண்ட மர்மமான சம்பவங்கள் ஆதாரங்களுடன் விளக்கப்பட்டுள்ளன.

இந்தக் கோப்புகளில் இடம்பெற்றுள்ள மிக முக்கியமான விஷயம், நிலவில் கால் பதித்த பஸ் ஆல்ட்ரின் பற்றியதாகும். 1969-ல் அவர் நிலவுக்குச் சென்றபோது, அங்கே ஒரு வினோதமான ஒளியையும், அடையாளம் தெரியாத ஒரு பொருளையும் பார்த்ததாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், 2022-ஆம் ஆண்டு கடலுக்கு மேல் கால்பந்து வடிவத்தில் ஒரு பொருள் பறந்ததும், 2023-ல் சிரியாவில் மணிக்கு 483 கி.மீ வேகத்தில் ஒரு வட்ட வடிவப் பொருள் மின்னல் வேகத்தில் சென்றதும் வீடியோவாகப் பதிவாகியுள்ளது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் 'சௌரான் கண்' (Eye of Sauron) போன்ற ஒரு மர்மமான ஒளிரும் கோளத்தை அரசு ஊழியர்கள் பார்த்த திடுக்கிடும் தகவலும் இதில் உள்ளது.

இந்த மர்மப் பொருள்கள் காட்டும் அசாத்தியமான வேகம் தான் விஞ்ஞானிகளைப் பெருத்த குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. எந்தவொரு விமானத்தாலும் செய்ய முடியாத வகையில், அந்தப் பொருள்கள் திடீரென 90 டிகிரி கோணத்தில் திரும்புவதும், கண்ணிமைக்கும் நேரத்தில் மறைந்து போவதும் இந்த ஆவணங்களில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவை ஏலியன்களா அல்லது வேறு நாடுகளின் அதிநவீன உளவு விமானங்களா என்று பென்டகன் இன்னும் நேரடியாகச் சொல்லவில்லை என்றாலும், இவற்றை "தீர்க்கப்படாத வழக்குகள்" என்று அறிவித்துள்ளது. வரும் நாள்களில் இன்னும் பல வீடியோக்கள் வெளிவரும் என்பதால் உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.