செய்திகள் :

அணை ஓசை: அணையின் தேவையும், காவிரி ஆதாரமும்! மேட்டூர் - சர் ஆர்தர் காட்டன் கனவு | பகுதி 03

post image
“தண்ணீரிலிருந்து தான் வாழ்வாதாரம் பெருகும்”

இந்தியாவின் நீர்ப்பாசன வரலாறு, அரசர்களின் தொலைநோக்கு சிந்தனையிலும், பின்னர் பிரிட்டிஷ் பொறியாளர்களின் திட்டங்களிலும் வேரூன்றியுள்ளது.

முகலாயப் பேரரசர் அக்பர், 1568-இல் கால்வாய்களை தோண்டி மக்களின் தேவையை பூர்த்தி செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதிலிருந்து இந்த சிந்தனை தொடங்குகிறது. “தண்ணீரிலிருந்து தான் வாழ்வாதாரம் பெருகும்” என்ற அவரது கூற்று, பின்னர் நடந்த வளர்ச்சிகளுக்கு கட்டியம் கூறியது.

2000 வருடங்களுக்கு முன்பே “கரிகால் பெருவளத்தான்” கட்டிய கல்லணை இன்றளவும் பாசனத்துக்கு துணை புரிந்தாலும் கூடுதலாக நீர் மேலாண்மையின் அவசியத்தை உணர வைத்தது.

ஆங்கிலேயர் ஆட்சி இந்தியாவை அடிமைப்படுத்தியபோதிலும், சில நல்ல விளைவுகளும் தோன்றின. 1854-ல் பொதுப்பணித்துறை தொடங்கியபோது, சிவில் பொறியாளர்கள் குறைவாக இருந்ததால், ராணுவப் பொறியாளர்களே சாலைகள், ரயில்வே, அணைகள், கால்வாய்கள் போன்ற பெரிய கட்டமைப்புகளில் பங்களித்தனர்.

இதன் மூலம் இந்திய நீர்ப்பாசன வரலாற்றில் தனித்த இடத்தைப் பெற்றார் பொறியாளர் “சர் ஆர்தர் காட்டன்”.

அவருடைய மதிப்பீட்டில், பொறியாளர்களுக்கு வெவ்வேறு நிலைகள் இருந்தாலும், இறுதியில் சரியான குறிக்கோளை நோக்கி வெற்றி அடையவேண்டும் என்ற நிலைப்பாடு, தெளிவாகப் பதிவான செயல்வீரராக அதில் பொருந்தக்கூடியவராக இருந்தார்.

இந்தியாவில் தேவைக்கு அதிகமாகவே தண்ணீர் அப்போது இருந்தது என்பதே உண்மை!

இப்படி ஒரு கூற்று உண்டு: தேம்ஸ் நதியில் லண்டன் பாலத்துக்கு அடியில், ஒரு மணிக்கு இவ்வளவு கேலன் தண்ணீர் ஓடுகிறது என்று அறுதியிட்டுக் கூற இயலும் என்பார்கள். ஆனால், இந்தியாவில் தண்ணீரின் கொள்ளளவு எவ்வளவு சதுர மைல்களுக்கு பரந்து, விரிந்து இருந்தது என்றே கூற இயலும். அவ்வளவு செழுமை இருந்துள்ளது என்பது நிஜம்.

ஆர்தர் காட்டனின் பணி பெருமளவில் காவிரி, கோதாவரி, கிருஷ்ணா போன்ற ஆறுகளுடன் தொடர்புடையது. அவர் தஞ்சாவூரில் சேதமடைந்திருந்த கல்லணையைச் சீரமைத்து, பாசனக் கால்வாய்களின் வலையமைப்பையும் மேம்படுத்தினார்.

ஆந்திராவில் தவளேஸ்வரம், விஜயவாடா அணைகளை கட்டி, அப்பகுதியை நெற்களஞ்சியமாக மாற்றினார். பாம்பன் கடற்பாதை திட்டத்திலும், ஆந்திரா–தமிழகம் பாசன முறைகளிலும் அவர் பங்களித்தார்.

“காவிரியின் குறுக்கே பெரிய அணை கட்டினால் டெல்டா மாவட்டங்கள் செழிக்கும்” என்ற அவரது கனவு, பின்னர் மேட்டூர் அணை உருவாகக் காரணமானது.

இவருடன் பிறந்தவர்கள் மொத்தம் 11 சகோதரர்கள். இவர்கள் அனைவருமே பல துறைகளில் பிரிட்டிஷ் அரசில் பணிபுரிந்து நீண்ட காலம் தொண்டாற்றி வாழ்ந்து மறைந்தவர்கள். இவர்களில் ஆகச்சிறந்தவராக விளங்கினார் சர்.ஆர்தர் காட்டன்.

காவிரியின் பயணம், இந்தியாவின் புவியியல், பண்பாட்டு அடையாளமாகும். குடகுமலையில் சிறிய ஊற்றாக பிறந்து, ஹாரங்கி, ஹேமாவதி, கபினி போன்ற துணை ஆறுகளைச் சேர்த்து, ஒகேனக்கல் வழியாக தமிழ்நாட்டில் நுழைகிறது.

மேட்டூரில் பவானியை இணைத்து, ஈரோடு, மாயனூர், திருச்சி வழியாகப் பாய்ந்து, ஸ்ரீரங்கத்தில் பிரிந்து, கல்லணையில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆகி டெல்டாவில் பரவி, வங்கக்கடலில் கலக்கிறது.

மொத்தம் 800 கி.மீ நீளத்தில், அதில் 416 கி.மீ தமிழ்நாட்டில் பாயும் காவிரி, “பொன்னி” என அன்போடு அழைக்கப்படுகிறது. மைசூர் மாகாணத்தில் 320 கி.மீ மற்றும் இரு எல்லைகளுக்கும் பொதுவாக 64 கி.மீ என பயணிக்கிறது காவிரி!

இந்த நதி, கோடிக்கணக்கான மக்களுக்கு குடிநீர், விவசாயம், கால்நடை, தொழில் என அனைத்திற்கும் உயிர்க்குருதியாக விளங்குகிறது. ஆண்டுக்கு சராசரியாக 700 மி.மீ. முதல் 2500 மி.மீ. வரை மழைப்பொழிவு பெற்றுக் கொண்டு, தமிழ்நாட்டின் வாழ்வாதாரத்தை தாங்கி நிற்கிறது.

ஜுன் - செப்டம்பர் மாதங்களில் பெய்யும் தென்மேற்கு பருவமழை காலம் ஆண்டின் பெரும் நீர் விநியோகத்தின் ஆதாரமாகும். ஜுலை, ஆகஸ்டு மாதங்களில் காவிரியில் பெருவெள்ளம் ஏற்படுகிறது. காவிரியின் மொத்த நீர்ப்பிடிப்புப் பகுதி 31,334 சதுர மைல்கள் என்ற விரிந்த பகுதியாகும். ( ஒரு மைல் என்பது 1.6 கி.மீ. 1 சதுர மைல் என்பது 2.59 சதுர கி.மீக்கு சமம்).

காவிரியின் கரையில் வாழ்வது, வாழும் போதே சொர்க்கத்தை அனுபவிப்பது போன்றதாக மக்களால் கருதப்படுகிறது.

2000 ஆண்டுகளுக்கு முன்பு கரிகால சோழன் கட்டிய கல்லணை போல, மேட்டூர் அணையும் மனிதன் – இயற்கை கூட்டுச் சாதனையின் சின்னமாக விளங்குகிறது. நீர் என்பது வெறும் வளம் அல்ல, வரலாறும் நம்பிக்கையும் வாழ்வும் என்பதே உண்மை!

(தொடரும்)

"60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனிதனின் மரபணு மதுரையில் கிடைக்கிறது" - அமர்நாத் ராமகிருஷ்ணன்

சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நினைவு விழாவை முன்னிட்டு திராவிட வரலாற்று ஆராய்ச்சி மையத்தின் சார்பில்,'இந்தியாவின் வரலாற்றைச் சிதைவுகளிலிருந்து மீட்டெடுத்தல்' என்ற தலைப்பிலான ஒரு நாள் மாநில மாநாடு ... மேலும் பார்க்க

அணை ஓசை: காவிரி பெருவெள்ளமும் வறட்சியும்... ஒரே கனவு - `நீரைத் தாங்கும் எஃகு கோட்டை' | பகுதி 02

பகுதி 02அணை ஓசை“உலகப் பிரளயம்”1924 – காவிரி ஆற்றின் வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயம். ஜூலை மாதம் ஏற்பட்ட மாபெரும் வெள்ளம், பவானி, காவிரி, கொள்ளிடம் கரைகளை முறியடித்து பாய்ந்தது.அன்றைய இதழ்களில் “வெள்... மேலும் பார்க்க

அணை ஓசை : இது வளம் பெருக்கும் மேட்டூர் அணையின் கதை! - பகுதி 01

எழுத்தாளர் : நாகாஅணை ஓசை“காவிரி ஆறு - தமிழரின் உயிர்நாடிநீர் – இயற்கையின் உயிர்த்துளி! அது மனிதனுக்கு மட்டுமே அல்ல, பூமியில் உள்ள 8.75 மில்லியன் உயிரினங்களுக்கும் உயிர் ஆதாரம். “நீரின்றி அமையாது உலகு”... மேலும் பார்க்க