M K Stalin, K பழனிசாமி, Vijay, சீமான்: தென்காசி மக்கள் யார் பக்கம்? | IPS On Roa...
"அண்ணாமலை இப்போ இங்க வந்தே ஆகணும்!" - அதிரடித்த கோயல்; பரபரத்த கமலாலயம்!
தே.ஜ கூட்டணியில், பாஜக-வுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. தொகுதி பங்கீட்டின்போது, பாஜக-வுக்கு பலமில்லாத தொகுதிகளை அதிமுக-விடமிருந்து பெற்றுவிட்டதாக கமலாலயத்தில் புகைச்சல் எழுந்திருக்கிறது. பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைக்கிறார்கள் பாஜக மாநில நிர்வாகிகள்.
இப்படியான சூழலில்தான், பாஜக வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்கான கூட்டம் நேற்று(மார்ச் 31-ம் தேதி) கமலாலயத்தில் நடைபெற்றது. அதற்காக, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை வந்திருந்தார்.

அந்தக் கூட்டம் குறித்து நம்மிடம் பேசிய பாஜக-வின் மாநில நிர்வாகிகள் சிலர், "சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கியவுடனேயே, புதுச்சேரியில் பிரசாரத்தில் இருந்த அண்ணாமலையை உடனே கிளம்பி சென்னை வரச் சொன்னார் பியூஷ் கோயல். மூன்று நாள் பிரசாரத் திட்டத்தோடு புதுச்சேரிக்குச் சென்றிருந்த அண்ணாமலை, 'பிரசாரத்தைப் பாதியிலேயே விட்டுவிட்டு வர வேண்டுமா... மையக்குழு கூட்டத்திற்கு நான் வந்து என்ன செய்யப் போகிறேன்' என்று கேட்டும் பியூஷ் கோயல் விடவில்லை. உடனடியாக ஹெலிகாப்டரைப் பிடித்து சென்னை வர உத்தரவிட்டார். அண்ணாமலை சென்னை வந்ததும்தான், 'குற்றவாளி கூண்டில் ஸ்டாலின் அரசு' என்ற அறிக்கை கமலாலயத்தில் வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து மையக்குழு கூட்டம் நடந்தது.
நயினாரை விளாசிய கோயல்
எடுத்த எடுப்பிலேயே நயினாரை விளாசியெடுத்துவிட்டார் கோயல். 'நாம் எதிர்பார்க்கும் 35 தொகுதிகளின் பட்டியலை எடப்பாடி பழனிசாமியிடம் கொடுத்தோம். அதிலிருந்து கோவை வடக்கு, திருப்பூர் தெற்கு, மயிலாப்பூர், அவினாசி என சுமார் பத்து தொகுதிகளைத்தான் நம் விருப்பப்படி ஒதுக்கியிருக்கிறார் எடப்பாடி. மீதியெல்லாம் அவர் இஷ்டபடியே ஒதுக்கப்பட்டுள்ளன. அதை ஏன் என்னிடம் தெரிவிக்கவில்லை...
ராஜபாளையம், வேளச்சேரி, சிங்காநல்லூர், கும்பகோணம் தொகுதிகளெல்லாம் நமக்குச் சாதகமாயிற்றே. அதை ஏன் கேட்டுப்பெறவில்லை... தொகுதிப் பங்கீட்டை பாஜக-வுக்கு சாதகமாக செய்தீர்களா? இல்லை, அதிமுக-வுக்கு சாதகமாக செய்தீர்களா..?' என்று கடுகடுத்த கோயல், ஓரிரு தொகுதிகளை மாற்றித் தருமாறு எடப்பாடியிடம் பேசும்படி கூறினார்.

அதற்கு நயினார் நாகேந்திரன், 'அதிமுக-வில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுவிட்டு பிரசாரம் கிளம்பிவிட்டார் எடப்பாடி. பல தொகுதிகளிலும் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டார்கள். இப்போது தொகுதியை மாற்றுவது சாத்தியமில்லை' என்று கைவிரிக்கவும், டென்ஷனாகிவிட்டார் கோயல். அடுத்ததாக வேட்பாளர் தேர்வு தொடர்பாக பேச்சு திரும்பியது. ஒரு தொகுதிக்கு மூன்று வேட்பாளர்கள் வீதம் மத்திய மையக்குழுவுக்கு பரிந்துரைப்பதென முடிவானது.
மயிலாப்பூரில் களமிறங்க ஆசைப்படும் தமிழிசையிடம், 'ராதாபுரத்தில் போட்டியிடுகிறீர்களா?' என்று கோயல் கேட்கவும், தமிழிசையின் முகம் சுருங்கிவிட்டது. 'மயிலாப்பூரில் ஏற்கெனவே தேர்தல் வேலையை ஆரம்பித்துவிட்டேனே..' என்று தமிழிசை மென்று முழுங்கவும், 'வேட்பாளர் பட்டியலை இன்னும் டெல்லி வெளியிடவில்லை. அதற்குள் வேலையை ஆரம்பித்துவிட்டீர்கள் என்று சொன்னால்...' என்று கண் சிவந்தார் கோயல்.
கோவை ஓகே... பதறிய வானதி!
அடுத்ததாக, அண்ணாமலையை தேர்தல் களத்தில் இறக்குவது குறித்துப் பேசப்பட்டது. அப்போது, 'எனக்குப் போட்டியிட விருப்பமில்லை' என்று நேரடியாகவே சொல்லிவிட்டார் அண்ணாமலை. ஆனால், 'உங்களையும் எல்.முருகனையும் தேர்தலில் களமிறக்குவதென டெல்லி தலைமை முடிவெடுத்திருக்கிறது. நீங்கள் கண்டிப்பாக போட்டியிட வேண்டும்' என்று அழுத்தமாகச் சொன்னார் கோயல். அதற்கு, 'கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டிருப்பதால், அந்த மாவட்டத்திற்குள் எந்தத் தொகுதியைக் கொடுத்தாலும் நான் போட்டியிடுகிறேன். மற்ற தொகுதிகள் கொடுத்தால், நான் போட்டியிட விரும்பவில்லை' எனச் சொல்லிவிட்டார் அண்ணாமலை.

கோவை மாவட்டத்தில், கோவை வடக்கு தொகுதி மட்டுமே பாஜக-வுக்கென ஒதுக்கப்பட்டிருக்கிறது. அந்தத் தொகுதியைக் குறிவைத்து வானதி சீனிவாசன் வேலை பார்த்து வரும் நிலையில், தன் சீட்டு பறிபோய்விடுமோ என்று பதறிவிட்டார் வானதி. 'அந்தத் தொகுதியை நான் கேட்டிருக்கிறேன்' என்று வானதி பேசவும், 'அக்காவே அங்கே நின்னுட்டுப் போகட்டும். எனக்கு கோவை வடக்கு வேண்டாம்' என்றுவிட்டார் அண்ணாமலை. மொடக்குறிச்சி தொகுதியில் அண்ணாமலையை களமிறக்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. அதற்கு அண்ணாமலை ஒத்துக்கொள்ளவில்லை.
இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட ஆள் இல்லை என்பதால், அங்கே அனுப்ப ஆலோசிக்கப்பட்டது. அதை அண்ணாமலை ஏற்கவில்லை. வரும் தேர்தலில் அவரை போட்டியிட வைப்பதென தீர்மானித்திருக்கும் டெல்லி தலைமை, தமிழிசையை ராதாபுரத்துக்கு அனுப்பிவிட்டு, மயிலாப்பூரை அண்ணாமலைக்கு ஒதுக்க ஆலோசித்து வருகிறது. அதேசமயம், தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷின் சிபாரிசில், மாநில அணிகள் பிரிவுகளின் அமைப்பாளர் கே.டி.ராகவனும் மயிலாப்பூருக்கான ரேஸில் இருக்கிறார்" என்றனர் விரிவாக.
அண்ணாமலையின் பெயர் இருக்குமா..
தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை டெல்லி வழங்க முன்வந்தாலும், அதை ஏற்றுக்கொள்ள அண்ணாமலை தயாராக இல்லையாம். "அவர் எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும் சரி, அதிமுக., பாஜக கட்சிகளுக்குள் இருக்கும் சில எதிர்கோச்டி தரப்பு அண்ணாமலைக்கு எதிராக வேலைப் பார்ப்பார்கள். அவரைத் தோற்கடிக்க எந்த எல்லைக்கும் செல்வார்கள். ஒருவேளை அண்ணாமலை தோற்றுவிட்டால், 'அரவக்குறிச்சி, கோவை நாடாளுமன்ற தோல்வியோடு இப்போதும் தோற்றுவிட்டார். அவர் தேர்தல் அரசியலுக்கு லாயக்கானவர் இல்லை' என்று பிரசாரம் செய்யப் பார்ப்பார்கள். தேர்தல் பிரசாரம் முடிய இன்னும் 20 நாள்தான் இருக்கிறது. அதனால்தான் ரொம்பவும் யோசிக்கிறார் அண்ணாமலை" என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது கூட, வேட்பாளராக களமிறங்க அண்ணாமலை தயாராக இருக்கவில்லை. கோவை தொகுதி தனக்கு ஒதுக்கப்பட்டபோது, வானதி சீனிவாசனைத்தான் தனக்குப் பதிலாக வேட்பாளராக நிறுத்த வலியுறுத்தினார். ஆனால், டெல்லி மேலிடம் பிடிவாதமாக அண்ணாமலையை களமிறக்கிவிட்டது. கடைசி நேரத்தில் வேட்பாளரானதால், களத்தை அவர் சுற்றி வருவதற்குள் தேர்தலே முடிந்துவிட்டது. அதுபோன்ற ஒரு நெருக்கடியை மீண்டும் சந்திக்க அண்ணாமலை தயாராக இல்லை. பியூஷ் கோயல் தலைமையில் நடந்த மாநில மையக்குழு கூட்டத்தில் வேட்பாளர் பெயர்கள் இறுதி செய்யப்பட்டு டெல்லியின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
இன்றிரவு அல்லது நாளைக்குள் வேட்பாளர் பட்டியல் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஏப்.4-ம் தேதி சென்னை வரவிருக்கும் பிரதமர் மோடி, பாஜக-வின் 27 வேட்பாளர்களை அறிமுகம் செய்து, கட்சி நிர்வாகிகளிடையே பேசவிருக்கிறார். இந்த பரபரப்புகளுக்கு இடையே, பாஜக தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் கையெழுத்திட்டு வெளியிடப் போகும் வேட்பாளர் பட்டியலில், அண்ணாமலையின் பெயர் இருக்குமா.. என்பதுதான் கமலாலயத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. !













