"பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் SCAM; ஏமாற்றங்களுக்கு தயாரா இருக்கணுமா CM saa...
அதிகாரிகளை வீட்டிற்கு வரவழைத்து ஆய்வுக் கூட்டம்; சர்ச்சையில் சிக்கிய சூலூர் தவெக MLA சொல்வது என்ன?
கோவை மாவட்டம் சூலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சுகுமார். இவரது வீடு கிணத்துக்கடவு தொகுதிக்கு உட்பட்ட வெள்ளலூர் பகுதியில் உள்ளது. இந்த நிலையில் சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி செயலாளர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களை நேற்று காலை, தனது வீட்டிற்கு வரவழைத்து ஆய்வுக் கூட்டம் நடத்தியுள்ளார்.
இதில் பங்கேற்க சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ள செஞ்செரி புத்தூர், ஜெ.கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதியில் இருந்தும் அதிகாரிகள், அவரது வீட்டிற்குச் சென்று ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
ஏற்கனவே கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி, தனது ஜோதிட அலுவலகத்திற்கு சுகாதாரத் துறை அதிகாரிகளை வரவழைத்து ஆய்வுக் கூட்டம் நடத்தியதால் ஏற்பட்ட சர்ச்சை ஓய்வதற்குள், சுகுமாரும் அரசு அதிகாரிகளை தனது வீட்டிற்கு வரவழைத்து ஆய்வுக் கூட்டம் நடத்தியுள்ளார்.
த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது அதிகார வரம்பை மீறி செயல்படுவதாக, எதிர்க்கட்சியினர் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து சூலூர் சட்டமன்ற உறுப்பினர் சுகுமாரிடம் கேட்டபோது, “எம்.எல்.ஏ. அலுவலகம் இன்னும் தயாராகவில்லை. சுல்தான்பேட்டை ஒன்றியத்திலிருந்து ஏகப்பட்ட புகார்கள் வருகின்றன. ஊராட்சி செயலாளர்கள் வேலையே செய்வதில்லை என்கிறார்கள்.
இது குறித்து ஒவ்வொருவராக அழைத்து பேச முடியவில்லை. நானே வந்து அவர்களைப் பார்ப்பதாகக் கூறினேன். அவர்கள் நாங்களே உங்களை வந்து பார்க்கிறோம் என்றார்கள். ஒரு 15 நிமிடம் பேசி முடித்து அனுப்பிவிட்டேன். இது ஒரு குற்றமா?
ஊருக்குள் சென்று குடிநீர், சாலை, பாதாள சாக்க்டை போன்ற மக்கள் பிரச்னைகளைத் தெரிந்து சரி செய்யுமாறு கூறினேன். வேறு எதுவும் சொல்லவில்லை. நன்றாக வேலை செய்பவர்களுக்கு விருது வாங்கி தருவதாகக் கூறினேன். கெட்டது செய்பவனை நம்பி அவனுடன் செல்கிறார்கள், எல்லாம் பண்ணி தருகிறார்கள். நாம நல்லது சொன்னால், இதுபோல எதாவது போட்டு அசிங்கப்படுத்த பார்க்கிறார்கள்.
நல்லது செய்தால் இடைஞ்சல் வரத்தான் செய்யும். தி.மு.க. ஆட்சியின் போது இந்த அதிகாரிகள் அமைச்சர்களைப் பார்க்க நாள்கணக்கில் நின்று கொண்டிருந்தார்கள். ஆனால் நான் வேலைதான் செய்ய சொல்கிறேன். நானும் அவர்களோடு சேர்ந்து எனக்கும் காசு வாங்கி கொடுங்கள் எனச் சொல்லியிருந்தால், இதுபோல எதுவும் வெளியே வந்திருக்காது” என்றார்.














