"தமிழ்நாட்டில் மிக எளிதாக வெற்றி பெறுகிறார்கள்; எனக்கு பொறாமையாக இருக்கிறது" - ப...
அதிமுக: `அம்பாசமுத்திரத்தின் செல்லப்பிள்ளை இசக்கி சுப்பையா' - ராஜினாமா செய்துவிட்டு தவெக தாவுகிறார்?
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க சார்பாக எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், இசக்கி சுப்பையா. அம்பாசமுத்திரம் தொகுதியின் செல்லப்பிள்ளை என வர்ணிக்கப்பட்ட இசக்கி சுப்பையா, தற்போது தனது எம்.எல்.ஏ பொறுப்பை ராஜினாமா செய்து விட்டு த.வெக-வில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஏற்கனவே, 2011 மற்றும் 2021 தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.க சார்பாக அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அ.தி.மு.க சார்பாக மூன்றாவது முறையாக வெற்றி பெற்ற அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆதரவாளர்களுடன் இன்று த.வெ.க-வில் இனிய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அம்பாசமுத்திரம் தொகுதியைச் சேர்ந்த ஆதரவாளர்களைத் திரட்டிக்கொண்டு சென்னை சென்றுள்ள இசக்கி சுப்பையா இன்று த.வெ.க-வில் இணைய உள்ளார் என்கிறார்கள்.
இந்தத் தகவல் வெளியானதும் அம்பாசமுத்திரம் தொகுதி மக்கள் பலரும் அவரை தொடர்பு கொள்ள முயன்ற போதிலும் அவர் யாருடைய அழைப்பையும் ஏற்கவில்லை எனத் தெரிகிறது
கடந்து வந்த பாதை!
இசக்கி சுப்பையாவின் சொந்த ஊர், தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே உள்ள ஆயிரப்பேரி கிராமம். தங்கும் விடுதி நடத்தி வந்த அவர் அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். அ.தி.மு.க அனுதாபியாக இருந்த அவரை கடந்த 2011-ம் ஆண்டு ஜெயலலிதா அரசியலுக்கு அழைத்து வந்தார். அப்போது நடந்த தேர்தலில் அவருக்கு அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை ஜெயலலிதா வழங்கினார். அந்தத் தேர்தலில் அவர் வெற்றி பெற்றார்.

அதைத் தொடர்ந்து ,அ.தி.மு.க ஆட்சியில் அவருக்கு சட்டத்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனால் ஒரே மாதத்தில் அவர் வகுத்து வந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். அத்துடன் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு பின்னர் நடைபெற்ற தேர்தலிலும் அவருக்கு போட்டியிடும் வாய்ப்பை ஜெயலலிதா கொடுக்கவில்லை. அதனால் சிறிது காலம் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்து வந்தார்.
கொரோனா காலத்தில், அம்பாசமுத்திரம் தொகுதி மக்களுக்கு இசக்கி சுப்பையா செய்த உதவிகள் ஏராளம். ஏராளமான கிராமங்களுக்கு உணவு வழங்கினார். அரிசி பைகள் விநியோகம், காய்கறிகள் கொடுப்பது, இளைஞர்களுக்கு விளையாடுவதற்காக கிரிக்கெட் உபகரணங்கள் கொடுப்பது என நலத்திட்ட உதவிகளைத் தொடர்ந்து செய்து வந்தார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அ.தி.மு.க இரண்டாக உடைந்து, எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒரு அணியும் டிடிவி தினகரன் தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்ட போது இசக்கி சுப்பையா டிடிவி தினகரன் அணியில் இணைந்தார். ஆனால் அங்கு நீண்ட காலம் நீடிக்காமல் மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் செயல்பட்ட அ.தி.மு.க-வில் இணைந்தார்.

அம்பாசமுத்திரம் தொகுதியில் அவருக்கு இருந்த செல்வாக்கை அறிந்த அ.தி.மு.க தலைமை, 2021-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அவருக்கு போட்டியிடும் வாய்ப்பை கொடுத்தது. அதில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக எம்.எல்.ஏ-வாக தேர்வாணர். அத்துடன், எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமாக செயல்பட்டு வந்தார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு மூன்றாவது முறையாக எம்.எல்.ஏ-வாக தேர்வானார்.
இரு வாரங்களுக்கு முன்பு, சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்ற அவர்,"இந்த பதவி என்பது மக்களின் கனவுகள், எதிர்பார்ப்புகள் மற்றும் நம்பிக்கைகளை சுமக்கும் மகத்தான பொறுப்பு.
அம்பாசமுத்திரம் தொகுதியின் வளர்ச்சி, மக்களின் நலன் மற்றும் ஒவ்வொரு குடும்பத்தின் முன்னேற்றத்தையும் முன்னிறுத்தி, முழு அர்ப்பணிப்புடனும் நேர்மையான செயல்பாடுகளுடனும் தொடர்ந்து பணியாற்றுவேன்" என்று, தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இசக்கி சுப்பையா தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் சேரவுள்ளார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே நேற்று அ.தி.மு.க-வைச் சேர்ந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், இன்று இசக்கி சுப்பையாவும் தனது பொறுப்பை ராஜினாமா செய்து விட்டு த வெ.க-வில் இணைய இருக்கிறார்.
அவர் தன்னுடன் ஆதரவாளர்கள் சிலரையும் சென்னைக்கு அழைத்துச் சென்றிருப்பதாகக் கூறப்படுகிறது. இது குறித்து அறிய இசக்கி சுப்பையாவை அழைத்தபோது, அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை. இசக்கி சுப்பையாவின் இந்த முடிவு அம்பாசமுத்திரம் தொகுதி மக்களிடம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.














