குருப்பெயர்ச்சி 2026 : மிதுன ராசிக்கு குருவருளால் வீடு - மனை வாங்கும் யோகம்; அதி...
தூத்துக்குடி மாணவி பாலியல் வன்கொடுமை: ”உங்க மகளின் ஞாபகம் வரலயா?" - நீதிபதியிடம் குற்றவாளி கண்ணீர்
தூத்துக்குடி மாவட்டம், வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்பு பள்ளி மாணவி, கடந்த மார்ச் மாதம் 12-ம் தேதி மாலையில் இயற்கை உபாதை கழிப்பதற்காக அப்பகுதியிலுள்ள காட்டுப்பகுதிக்குச் சென்றார். இரவு வரை வீடு திரும்பவில்லை.
மறுநாள் 13-ம் தேதி மதியம் சுமார் 2 மணியளவில் அதே காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கில் ராமநாதபுரத்தைச் சார்ந்த தர்ம முனீஸ்வரன் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், நேற்று (25-ம் தேதி) அவருக்குத் தீர்ப்பளிக்கப்பட்டது. பிரிவு 104 பி.என்.எஸ் சட்டத்தின்படி தூக்கு தண்டனையும், பிரிவு 127(2) பி.என்.எஸ் சட்டத்தின்படி ஓராண்டு சிறை தண்டனையும் வழங்கி தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி ப்ரீத்தா தீர்ப்பளித்தார்.

தீர்ப்பு வழங்கும் முன்பு தர்ம முனீஸ்வரனிடம் நீதிபதி, “உங்களைச் சார்ந்து உங்கள் குடும்பத்தில் யாரும் உண்டா?” என்று கேட்டார். அதன் பின்னர், "உங்களுடன் உங்களின் தாயார் மட்டுமே உள்ளார். உங்கள் மனைவியும், 17 வயது மகளும் உங்களை விட்டு பிரிந்து சென்று விட்டனர். ஏற்கெனவே ஒரு பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாகக் கொலை செய்த வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை பெற்று அப்பீலில் வெளியே வந்துள்ள நிலையில், நீங்கள் செய்துள்ள இந்தச் சம்பவம் கொடூரமானது.
மாணவியின் பிரேதப் பரிசோதனை அறிக்கையை முழுமையாகப் படித்தபோதுதான் நீங்கள் எவ்வளவு கொடூரமாக நடந்து கொண்டீர்கள் என்பது தெரிய வந்தது. உங்கள் மகள் போன்ற மகளின் வயதுடைய ஒரு குழந்தையிடம் இதுபோன்று கொடூரமாக நடந்து கொண்ட போது உங்கள் மகளின் ஞாபகம் உங்களுக்கு வரவில்லையா?
அந்தக் குழந்தையைப் பாதுகாக்க வேண்டும் என உங்களுக்குத் தோன்றவில்லையா? இந்தக் கொடூர செயலுக்கு உங்களுக்கு ஆயுள் தண்டனை கொடுத்தால் அது சரியாக இருக்காது.

அரசு தரப்பில் உங்கள் குற்றத்திற்கேற்ப பெரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று வாதிடப்பட்டுள்ளது. இருப்பினும் மரண தண்டனையைக் குறைப்பதற்கு உங்கள் தரப்பில் ஏதும் காரணம் இருக்குமா என ஆராய்ந்த போது எங்களுக்கு எந்தக் காரணமும் கிடைக்கவில்லை. உங்களுக்கு வழங்கப்படும் இந்தத் தண்டனை பெண் குழந்தைகள், பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களுக்கு ஒரு பாடமாக அமையும்” என்றார்.



















