`நீ உயிரோட இருந்தா பல குடும்பத்தை சீரழிச்சிடுவ!’ - மனைவியின் காதலனை ஸ்கெட்ச் போட...
`நீ உயிரோட இருந்தா பல குடும்பத்தை சீரழிச்சிடுவ!’ - மனைவியின் காதலனை ஸ்கெட்ச் போட்டு `முடித்த’ கணவன்
புதுச்சேரியை ஒட்டியிருக்கும் தமிழகப் பகுதியான வழுதாவூரில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட இளைஞரின் உடல், அந்த ஊர் கோயிலுக்கு அருகில் கிடந்தது. அதைப் பார்த்து அதிர்ந்துபோன அப்பகுதி மக்கள் கண்டமங்கலம் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதனடிப்படையில் அங்கு விரைந்த போலீஸார் இளைஞரின் சடலத்தை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதையடுத்து அப்பகுதியில் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டது அதே பகுதியைச் சேர்ந்த கதிரேசன் என்பது தெரிய வந்தது. அதையடுத்து அவரின் செல்போனுக்கு வந்த அழைப்புகளை ஆய்வு செய்தபோது, கடைசியாக அவரது நண்பர் ஞானமூர்த்தியிடம் பேசியது தெரியவந்தது.

ஞானமூர்த்தியிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், நன்பர்களுடன் சேர்ந்து கதிரேசனை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் கோகுல், ஞானவேல் என்ற இருவரையும் வளைத்துப் பிடித்தனர் போலீஸார்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை அதிகாரிகளிடம் பேசியபோது, ``சந்தை புதுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஞானமூர்த்தி விபத்தில் காலில் அடிபட்ட மாற்றுத்திறனாளி. அதனால் அதே பகுதியில் தன்னுடைய மனைவி பிரியாவுடன் இணைந்து, சிக்கன் 65, சூப் உள்ளிட்ட மாலை நேர சிற்றுண்டிக் கடையை நடத்தி வந்தார். அதில் ஞானமூர்த்தியின் நண்பர் கோகுல் என்பவரும் வேலை செய்து வந்தார்.
அதேபோல ஞானமூர்த்தியின் நண்பர்களான கதிரேசன் கறிக் கடையும், மற்றொரு நண்பரான ஞானவேல் தனியார் மருத்துவமனையிலும் வேலை செய்தனர். இவர்கள் இருவரும் அடிக்கடி ஞானமூர்த்தியின் கடைக்குச் செல்வது வழக்கம். அப்போது ஞானமூர்த்தியின் மனைவி பிரியாவுக்கும், கதிரேசனுக்கும் நட்பு ஏற்பட்டது.
வெகு விரைவிலேயே அந்த நட்பு, திருமண உறவை தாண்டிய நட்பாக மாறியது. இவர்களின் நட்பு ஞானமூர்த்திக்கு தெரிய வந்ததால், `இனிமேல் என் கடைக்கு நீ வராதே. என் மனைவியிடமும் பேசாதே’ என கதிரேசனை கண்டித்திருக்கிறார். அப்போது, `உன் மனைவி எனக்கு தங்கச்சி மாதிரி. ஏன் இப்படி எங்களை சந்தேகப்பட்டுப் பேசுகிறாய்?’ என்று கூறியிருக்கிறார் கதிரேசன்.

அதை ஏற்க மறுத்த ஞானமூர்த்தி, `இனிமேல் என் மனைவியிடம் நீ பேசக் கூடாது’ என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார். ஆனால் அதன்பிற்கு ஞானமூர்த்தி வீட்டில் இல்லாத நேரங்களில் அடிக்கடி பிரியாவை சந்தித்து வந்திருக்கிறார் கதிரேசன். அது ஞானமூர்த்திக்கு தெரிய வந்ததும், கதிரேசனை தீர்த்துக்கட்ட வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறார்.
அதை தன்னுடையை நண்பர்கள் கோகுல் மற்றும் ஞானவேலிடம் கூற, அவர்களும் கதிரேசனை கொலை செய்வதற்கு ஒப்புக் கொண்டிருக்கின்றனர். அதன் பிறகு கதிரேசனை எப்படி கொலை செய்வது என்று பல திட்டங்களைப் போட்டு அதன் சாதக பாதகங்களை மூவரும் அலசியிருக்கிறார்கள்.
இறுதியாக சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அழைத்து கொலை செய்வது என்று முடிவெடுத்திருக்கிறார்கள். அதன்படி மே மாதம் 23-ம் தேதி மாலை கதிரேசனுக்குப் போன் செய்த ஞானவேல், சாமதானப் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கிறார்.
அதன்படி வழுதாவூர் பகுதியிலுள்ள சிவன் கோயிலுக்கு அருகிலிருக்கும் இடத்திற்கு சென்றார் கதிரேசன். அங்கு ஞானமூர்த்தி, கோகுல், ஞானவேல் மூவரும் காத்திருந்தனர். அப்போது, `நீ ஞானமூர்த்தி மனைவிகிட்ட நீ ஏன் பேசுற ?
அது அவனுக்குப் பிடிக்கலைன்னு சொல்லியும் நீ ஏன் பேசுற?’ என்று கோகுலும், ஞானவேலும் கதிரேசனிடம் கேட்டிருக்கின்றனர். அதற்கு, `இவன் தப்பா நினைக்கிறான் என்பதற்காக நான் பேசாமல் இருக்க முடியுமா ? முதலில் இவன் ஏன் தப்பா நினைக்கிறான் ?

இவன் மனைவி என் தங்கச்சி மாதிரி’ என்று கூறியிருக்கிறார் கதிரேசன். அப்போது ஆத்திரமடைந்த ஞானமூர்த்தி, `நீ உயிரோட இருந்தா பல குடும்பத்தை சீரழிச்சிடுவ…’ என்று கூறியவாறே, கதிரேசனை தாக்கினார்.
அதில் நிலைகுலைந்து கீழே விழுந்த கதிரேசனின் கைகளை, நண்பர்கள் கோகுல், ஞானவேல் உதவியுடன் பின்புறமாக பிளாஸ்டிக் சாக்கால் கட்டினார் ஞானமூர்த்தி. அதையடுத்து தயாராக வைத்திருந்த அரிவாள்களால், கதிரேசனின் பின் கழுத்தை குறி வைத்து வெட்டி மூவரும் வெட்டியிருக்கிறார்கள்.
அதில் துடிதுடித்து அங்கேயே உயிரிழந்திருக்கிறார் கதிரேசன். அவர் துடித்து அடங்கும்வரை காத்திருந்த மூவரும், அதன்பிறகு மூச்சு வருகிறதா என்று பார்த்து அவர் உயிரிழந்ததை உறுதி செய்திருக்கிறார்கள். அதன்பிறகு சாவகாசமாக அங்கிருந்து சென்றிருக்கிறார்கள்” என்றனர்.

















