`அதற்கு நான் பதில் சொல்ல முடியாது; பேரவைத் தலைவர் என்ற முறையில்...' - சபாநாயகர் ...
TV Updates: ஆட்சி மாறியதால் ஆர்ட்டிஸ்டுகள் மாற்றமா? டு `கருப்பு-வை வெறுப்புல பார்க்கல ஆனா.!' ஆனந்தி
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் 'கருப்பு' திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
படத்தில் த்ரிஷா, நட்டி, ஸ்வாசிகா என முக்கிய நட்சத்திரங்கள் பலரும் நடித்திருக்கிறார்கள். முன்னதாக இந்தப் படத்தில் தானும் ஒரு சின்ன கேரக்டரில் நடித்திருந்ததாகவும், ஆனால் அந்தக் காட்சிகள் எடிட்டிங்கில் கட் ஆகி விட்டதாகவும் நம்மிடம் வருத்தப் பட்டிருந்தார் சின்னத்திரை நடிகை ஆனந்தி. இது தொடர்பாக அவர் நம்மிடம் பேசிய போது.
'காளி வெங்கட்டும் நானும் நடிச்சிருந்தோம். அவருக்கு ஜோடியா நடிச்சிருந்தேன். ஆனா கொஞ்ச நாள் முன்னாடி படத் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு சாரை ஒரு நிகழ்ச்சியில சந்திச்சேன். அப்ப அவர்கிட்ட பேசினப்ப, படத்துல நிறைய காட்சிகள் எடிட்ல போயிடுச்சு. நீங்க பண்ணின காட்சிகள்கூட வரும்னு சொல்ல முடியாது'ன்னு சொன்னார்.
சினிமாவுல இது சகஜமானதுதான். பெரிய நடிகர்களுடைய படங்களில் இது போன்ற சம்பவங்கள் தவிர்க்க முடியாது. நேர்மையாக சம்பந்தப்பட்டவர்கள்கிட்ட கூப்பிட்டுச் சொல்லிடுறாங்களே, அதுவே பெரிய விஷயம். சிலர் சொல்லவே மாட்டாங்க. நாம நடிச்சுட்டு படத்துல இருக்கோமா இல்லையாங்கிறதை முதல் நாள் தியேட்டர் போய் ஒரு தவிப்போட பார்க்க வேண்டிய நிலைமையெல்லாம் இங்க நிறைய பேருக்கு வந்திருக்கு' எனப் பேசியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது படத்தில் சில நிமிடங்கள் ஆனந்தி வந்து போகும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது குறித்து அவரிடம் கேட்டோம்.
'எனக்குமே சிலர் போன் பண்ணிச் சொன்னாங்க. ஆனா இன்னும் படம் பார்க்கல. நான் நடிச்ச காட்சிகள் இருக்காதுங்கிற வெறுப்புலதான் படத்துல நடிச்சதையே மறந்துட்டு லீவுக்கு சொந்த ஊர் போயிட்டேன். ஆனா நாலு பேர் பார்த்து அடையாளம் கண்டுபிடிக்கிற அளவுக்கு படத்துல நான் பதிவாகியிருக்கேன்னு நினைக்கிறப்ப கொஞ்சம் சந்தோஷமா இருக்கு. படக்குழுவினருக்கு நன்றி' என்கிறார் இவர்.
ஆட்சி மாற்றத்தால் 'இவருக்குப் பதில் இவரா? திக் திக் மனநிலையில் டிவி ஆர்ட்டிஸ்டுகள்
நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின் முடிவுகள் சின்னத்திரை வட்டாரத்திலும் ஒருவிதமான சலசலப்பை உருவாக்கியுள்ளதாகத் தெரியவருகிறது.
பெயர் குறிப்பிட விரும்பாத சீனியர் ஆர்ட்டிஸ்ட் ஒருவர் இது தொடர்பாகப் பேசிய போது,
'சின்னத்திரை ஏரியாவில் இதற்கு முன் எப்போதும் அரசியல் புகுந்ததில்லை. டிவி நடிகர் சங்க செயலாளராக இருந்த போஸ் வெங்கட் முதலான சிலர் சில கட்சிகளில் இருந்தாலும் தொழில் என வரும் போது அரசியலை அனுமதிப்பதில்லை. எனவே எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இவர்களுக்கு எந்தப் பிரச்னையும் வந்ததில்லை.
ஆனால் இந்த தேர்தலுக்கு முன் டிவி நடிகர் நடிகைகள் பலரும் தங்களை ஆர்வமுடன் தவெகவில் இணைத்துக் கொண்டது நடந்தது. இப்படி இணைந்தவர்கள் தங்களுடைய சமூக வலைதளப் பக்கங்கள் வழியே பிரசாரமும் செய்தனர். இன்றைய தேதியில் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட டிவி நட்சத்திரங்கள் தங்களை பகிரங்கமாக தவெகவில் இணைத்துக் கொண்டதாகத் தெரிய வருகிறது.

இந்த இடத்தில்தான் இப்போது சிக்கல் எனச் சொல்லப் படுகிறது. திமுகவைக் கடுமையாகத் தாக்கிப் பேசியவர்கள் தங்கள் சேனலில் யாராவது நடித்து வருகிறார்களா என லிஸ்ட் கேட்டதாம் முன்பு ஆண்ட கட்சியுடன் நெருக்கமான சேனல்.
தற்போது தவெக ஆதரவாளராக இருப்பவரும் அந்த சேனலில் நீண்டகாலமாக நடித்து வந்தவருமான நடிகர் அருண் இது தொடர்பாக வெளிப்படையாகவே பேசியிருக்கும் சூழலில் மற்றவர்கள் பேசத் தயக்கம் காட்டி வருகின்றனர்.
அரசியல் நிலைப்பாட்டைக் காரணம் காட்டி தாங்கள் நடித்து வரும் தொடர்களில் இருந்து தங்களைத் தூக்கி விடுவார்களோ என்கிற அச்சம் இவர்களிடம் நிலவுகிறது.
அதேபோல் பாஜக ஆதரவாளரான அந்த சீனியர் நடிகருமே அந்த சேனலில் தான் நடித்து வரும் தொடரில் தனக்கான காட்சிகள் குறைக்கபட்டு விட்டதாகச் சொல்கிறார்.
















