`அதற்கு நான் பதில் சொல்ல முடியாது; பேரவைத் தலைவர் என்ற முறையில்...' - சபாநாயகர் ...
`தேர்தலுக்கு முன்பே திமுக அதிமுக கூட்டணி; அனிதா மாதிரியானவங்க'- ஸ்டாலினுக்கு நிர்வாகி பகிரங்க கடிதம்
'திமுக அதிமுக கூட்டணி'
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவு வெளிவந்த நாள் முதல் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பாக விவாதிக்கப்படும் விவகாரம் இதுதான்.
தவெக தலைமையிலான அரசு அமைவதைத் தடுக்க இப்படியொரு முயற்சி எடுக்கப்பட்டதாகப் பேசப்பட்டது.
திமுக - அதிமுக தலைமைகள் இது தொடர்பாக விரிவான விளக்கம் எதையும் தராத நிலையில், இன்னமும்கூட விவாதங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன.
இந்த நிலையில், ``இதிலென்னங்க ஆச்சர்யம், ஏற்கெனவே பல மாவட்டங்களில் திமுக அதிமுக கூட்டணி இருக்கத்தானே செய்யுது. எங்க மாவட்டத்தை எடுத்துக்கோங்க, மாவட்டச் செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணனும் அதிமுக-வின் சண்முகநாதனும் பிசினஸ் பார்ட்னர்ஸ். நடந்து முடிந்த தேர்தல்ல ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் ஜெயிக்க அவ்வளவு பாடுபட்டாங்க. அதுல அனிதா ஜெயிச்சிட்டார். பாவம் சண்முகநாதன் தவெக வேட்பாளர்கிட்ட தோத்துட்டார். ஆனா ரெண்டு பேரும் கூட்டு சேர்ந்து தேர்தல் வேலை பார்த்தது நிஜம். இவங்க நட்பு இப்படியே போனா அது திமுக-வுக்கு நல்லதில்லை'னுதான் இப்ப 'அனிதாவை மாத்தணும்'னு தலைமைக்கு கடிதம் எழுதியிருக்கேன்" என்கிறார், திமுக-வின் தலைமைப் பொதுக்குழு உறூப்பினரும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவருமான காவல்காடு எஸ்.சொர்ணகுமார்.

அவரிடம் பேசினோம்.
''மத்த மாவட்டங்கள் எப்படியோ ஆனா தூத்துக்குடியில அனிதா - சண்முகநாதன் நட்பு எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்தான். ரெண்டு பேரும் கல்குவாரி பிசினஸ் பண்றாங்க. ரெண்டு பேருக்கும் வரவு செலவு பாக்குறது ஒரே ஆள்தான். அதனால பொதுவெளியில எதிரெதிர் கட்சியா காட்டிக் கிட்டாலும் நிஜத்துல அடிச்சுக்கவே மாட்டாங்க. ஒருத்தருக்கொருத்தர் உதவிகரமாகத்தான் இருப்பாங்க.
இந்த தேர்தல்ல அனிதா நின்ன திருச்செந்தூரில் அதிமுக கூட்டணி பாஜக-வை எப்படி நிறுத்துச்சு? சண்முகநாதனின் வேலைதான் அது. அதேபோல சண்முகநாதன் நின்ன திருவைகுண்டத்தை திமுக காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியது. ரெண்டு கட்சியிலயும் சீட் ஒதுக்கீடு முதலான முக்கிய விஷயங்கள்ல இவங்க ரெண்டு பேர் கைதான் ஓங்கியிருக்கும்னு சொல்லத் தேவையில்லை.
தவிர, நாங்க விசாரிச்ச வரை இந்த முறை தவெக-வுக்கு ஓட்டு இருக்குங்கிறதை முன்கூட்டியே கணிச்ச சன்முகநாதன், அனிதாகிட்ட அதுபத்தி சொல்ல, அதனாலேயே சில கோடிகளை ஒதுக்கி தன்னுடைய ஆதரவாளர் சிலர்கிட்ட, `சண்முகநாதன் ஜெயிக்க என்ன செய்ய முடியுமே செய்யுங்க'னு வாய்மொழி உத்தரவே போட்டிருக்கார் அனிதா. அதையும் தாண்டி சண்முகநாதன் தோத்துட்டது வேற விஷயம்.

இப்ப எதுக்கு எங்க கட்சித் தலைமைக்கு நான் இந்த விஷயத்தைக் கொண்டு போறேன்னா, இனியும் பொறுக்க முடியாதுனுதான். தலைவரே உட்கட்சி விவகாரங்களில் இது மாதிரியான ஓட்டைகளைச் சுட்டிக்காட்டுங்கனு சொல்லியிருக்காரே. தமிழ்நாட்டு அரசியல்ல இதுவரை இல்லாத திருப்பமா திமுக அதிமுக தாண்டி புதிதா ஒரு கட்சி ஒரே தேர்தல்ல ஆட்சியைப் பிடிச்சிருக்கு. இந்தச் சூழல்ல அனிதா ராதாகிருஷ்ணன் மாதிரியான ஆட்கள் மாவட்டச் செயலாளரா தொடர்வது திமுக-வின் எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்கிடும். நான் என்னுடைய தந்தை... அவருடைய தந்தைனு மூணு தலைமுறையா திமுக-வுல இருக்கோம். கட்சி இந்த மாதிரி சரிவை நோக்கிப் போறதை எப்படி பார்த்திட்டு சும்மாவா இருக்க முடியும்?
அதனால சொல்ல வேண்டியதைச் சொல்லிட்டேன். இனி மத்ததை கட்சித் தலைமைதான் பார்த்துக்கணும். இந்த கடிதம் அனுப்புனதால என்னுடைய பதவிக்கு ஏதாவது பிரச்னை வந்தாலும் பரவாயில்ல. எனக்கு கட்சிதான் முக்கியம்" என்கிறார் இவர்.












