Parasakthi : "என் வாழ்க்கையில நானும் சுயமரியாதைய திரும்ப பெறுவதற்கு போராடுனேன்!"...
"அரசு ஊழியர்களை கிரிமினல் போல நடத்துவதா?" - ஸ்டாலினுக்கு வானதி சீனிவாசன் கண்டனம்
கோவையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “பாரத் மாதா கி ஜெ என்றால் பாரத அன்னையை வணங்குவோம் என்று அர்த்தம். இதில் மதவெறி இல்லை. பாரத் மாதா கி ஜெ என நாட்டிற்காகப் போராடிய லட்சக்கணக்கான தொண்டர்களை அமைச்சர் சேகர்பாபு கொச்சைப்படுத்துகிறார்.

நாட்டை தாயாக வணங்குவது நமது நாட்டின் பாரம்பர்யம். பாரத் மாதா கி ஜெ பாஜக, ஆர்எஸ்எஸ் கோஷமல்ல. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் கோஷமும் அதுதான். இதற்காக காங்கிரஸ் கட்சியை திமுக கண்டிக்குமா? சேகர் பாபுவின் குறுகிய எண்ணமும், பிரிவினைவாத நோக்கமும் வார்த்தையாக வெளிப்பட்டுள்ளது.
முதலமைச்சர் தன் பொறுப்பை மத்திய அரசு மற்றும் பெற்றோர்கள் மீது போட்டுத் தப்பிக்கப் பார்க்கிறார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. இளைஞர்கள் மிக மோசமான பாதைக்குச் செல்வதற்கு அரசும் ஒரு காரணம். தன் தோல்வி வெளியே தெரிந்துவிடும் என்பதால் முதலமைச்சர் மத்திய அரசு மீது பழி போடுகிறார்.
இதற்கு அரசின் தோல்விதான் காரணம். இதற்காக முதலமைச்சர் முழுப் பொறுப்பேற்க வேண்டும். டாஸ்மாக் போதை எல்லாம் போதை இல்லையா? டாஸ்மாக்கில் டார்கெட் வைத்து விற்பனை செய்வது போதையை ஊக்குவிப்பது இல்லையா?
தமிழ்நாடு தொடர்ச்சியாகப் போராட்டக் களமாக மாறி வருகிறது. ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, அரசு ஊழியர்களுக்கு அளித்த வாக்குறுதி என்ன ஆனது என்று கேட்டு அவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். தமிழ்நாடு அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அரசு ஊழியர்களை கிரிமினல் குற்றவாளிகளைப் போல கையாள்கிறார்கள்.

சாதாரண மக்கள், அரசு மீது கோபத்தில் உள்ளார்கள். அரசு ஊழியர்களுக்கு அதைவிட அதிக கோபம் உள்ளது. கோவை செம்மொழிப் பூங்காவை இன்னும் பார்க்கவில்லை. அதில் மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்" என்றார்.


















