TAPS: `இது ஓய்வூதியத் திட்டமல்ல, சிறு சேமிப்புத் திட்டம்'- ஒரு தரப்பு அரசு ஊழியர...
OP Sindoor: "நான்தான் நிறுத்தினேன்" - ட்ரம்ப்புடன் மோதும் சீனா; பாகிஸ்தானுக்கு ப்ளஸ்; இந்தியாவுக்கு?
இவ்வளவு நாள், 'நான்தான் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்' என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திரும்பத் திரு.....ம்ம்ம்ம்...பபப கூறிக்கொண்டிருந்தார்.
இப்போது இந்தப் போட்டியில் சீனாவும் களமிறங்கியுள்ளது.

சீனா பேச்சு
சமீபத்தில் பெய்ஜிங்கில், சர்வதேச நிலைமை மற்றும் சீனாவின் வெளியுறவுக் கொள்கைகள் குறித்த கருத்தரங்கு நடந்தது. அதில் பேசிய சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி, "வடக்கு மியான்மர் பிரச்னை, ஈரான் அணுசக்தி பிரச்னை, இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதல், பாலஸ்தீன் - இஸ்ரேல் போர், கம்போடியா - தாய்லாந்து போர் ஆகியவற்றில் மத்தியஸ்தம் செய்தோம்" என்று பேசியுள்ளார்.
முன்பு, ட்ரம்ப் கூறியதையும் சரி... இப்போது சீனா கூறியுள்ளதையும் சரி... இந்தியா திட்டவட்டமாக மறுத்தது... மறுக்கிறது.
ஆனால், இந்தியாவின் நடவடிக்கைக்கு முற்றிலும் மாறாக பாகிஸ்தான் செய்கிறது.
பாகிஸ்தான் செய்யும் முரண்
'நான்தான் போரை நிறுத்தினேன்' என்று முன்பு ட்ரம்ப் கூறியபோது, பாகிஸ்தான் அதை ஆதரித்தது. ட்ரம்பிற்கு ஆதரவு மட்டும் போதாது என்று பாகிஸ்தான் நினைத்ததோ என்னவோ, அவரை அமைதிக்கான நோபல் பரிசுக்கு வேறு பரிந்துரைத்தது.
சீனா விஷயத்திலும் அதே பேட்டர்னை ஃபாலோ செய்கிறது பாகிஸ்தான். பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் தாஹிர் அந்த்ராபி, "மே 6 - 10-ம் தேதிகளில் சீனா, பாகிஸ்தான் தலைமைகளிடம் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தது. அவர்கள் இந்தியத் தலைமைகளுடனும் பேசிக்கொண்டிருந்தார்கள்" என்று பேசியுள்ளார்.
ஆனால், ஆபரேஷன் சிந்தூரைப் பொறுத்தவரை, இந்தியாவின் நிலைப்பாடு, "இந்தியா - பாகிஸ்தான் விஷயத்தில் எந்த நாட்டின் தலையீட்டையும் இந்தியா அனுமதிக்கவில்லை. பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவிடம் பேசியது. இதையடுத்து ஆபரேஷன் சிந்தூர் நிறுத்தப்பட்டது" என்பதாகும்.
ஏன் ஒவ்வொரு நாடும் பெருமையைத் தேடுகின்றன?
இந்தியா வளர்ந்து வரும் நாடு. பொருளாதாரத்திலும் வலுவாக இருந்து வருகிறது. இந்தியாவின் வளர்ச்சியை உலக நாடுகள் மிகவும் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.
அப்படியான நாட்டில்... அப்படியான நாட்டிற்கு இன்னொரு நாட்டுடன் சண்டை மூளும்போது, தாங்கள் நிறுத்தினோம் என்று உலகத் தலைவர்கள் பேசுவது உலக அளவில் ஒரு கவனத்தைப் பெறும். அவர்கள் நாட்டு மக்களுக்குமே அந்தத் தலைமைகள் மீது ஒருவித நல்ல எண்ணம் ஏற்படும்.
ட்ரம்பின் குறிக்கோள்
ட்ரம்பிற்கு 'நோபல் பரிசு' மீது மிக ஆசை. 'அந்த நாட்டின் போரை நிறுத்தினேன்... இந்த நாட்டின் போரை நிறுத்தினேன்' என்று கூறும்போது, 'இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்' என்பதைச் சேர்க்கும்போது, அவரது கூற்று இன்னும் வலுவாகும்.
சீனாவின் ஆதாயம்
மேலே கூறியதுபோல்தான், இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன் என்று சீனா கூறும்போது, அந்த நாடு தனிக் கவனம் பெறுகிறது. ஏற்கெனவே ட்ரம்ப் இதைக் கூறி வரும் நிலையில், சீனாவிற்கு இன்னும் கூடுதல் கவனம் கிடைக்கும்.
பாகிஸ்தானுக்கு ப்ளஸ்
'இந்தியா - பாகிஸ்தான் போரை நான்தான் நிறுத்தினேன்' என்று யார் கூறினாலும், இந்தியா அதை முற்றிலும் தவிர்த்து வருகிறது. இதனால், இந்தியா மீது அந்தந்த நாடுகளுக்கு அதிருப்தி ஏற்படும்.
ஆனால், அதே கூற்றை பாகிஸ்தான் ஏற்றுக்கொள்ளும்போது, அந்த நாடுகளுக்கு பாகிஸ்தான் மீது ஒரு நல்ல எண்ணம் ஏற்படும். இதற்குக் கைமாறாக பாகிஸ்தானுக்குப் பல நன்மைகள் ஏற்படும்.
இதற்கு பாகிஸ்தான் - அமெரிக்கா இடையே ஏற்பட்டுள்ள கிரிப்டோ கரன்சி, கனிம வளங்கள் ஒப்பந்தமே சரியான சாட்சி.
அமெரிக்கா, சீனா மிக வலுவான நாடுகள் மற்றும் பொருளாதாரங்கள். அவர்களுக்கு இணக்கமாக பாகிஸ்தான் செல்லும்போது, பெரிய பெரிய பலன்கள் ஏற்படும்.
இந்தியாவுக்கு தான் சிக்கல்
இந்தியா தனது இறையாண்மையில் மிகக் கவனம் செலுத்தும் நாடு. எந்த நாடும் தங்களது உள்நாட்டு விவகாரங்களில் தலையிடக் கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருக்கும்.
இந்தியா - பாகிஸ்தான் மோதல்போக்கில் பிற நாடுகள் வந்து சமாதானம் பேசியன என்று இந்திய அரசு ஒத்துக்கொண்டாலோ அல்ல... இருந்தாலோ... தெரிந்தாலோ இந்திய அரசு பெரும் சிக்கலைச் சந்திக்கும்.
இதனால்தான், இந்தியா இந்த விஷயத்தை மிகக் கவனமாகக் கையாண்டு வருகிறது.
இந்தப் பேச்சுகள் மீண்டும் மீண்டும் எழுவதைத் தடுக்க, இந்தியா கட்டாயம் ஒரு நல்ல நடவடிக்கையை எடுக்க வேண்டும்.


















