தேனி: அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 74 லட்சம் மோசடி; பிஆர்ஓ மீது 3 பிரிவ...
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சிறுமி குறித்து ஆபாச பதிவு; பாஜக நிர்வாகி போக்சோவில் கைது!
திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரம் தொடர்ந்து விவதிக்கப்பட்டு வருகிறது. அது குறித்து அரசியல் தலைவர்கள் கருத்துகள் தெரிவித்து வரும் நிலையில், பலரும் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்ப்பட்டணம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது சம்பந்தமாக சமூக வலைதளத்தில் ஒரு பதிவு போட்டார். அந்தப் பதிவை விமர்சித்து பைங்குளம் பகுதியைச் சேர்ந்த மற்றொருவர் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் தேங்காய்ப்பட்டணம் பகுதியைச் சேர்ந்த நபரின் சமூக வலைதளத்தில் இருந்து அவரின் 16 வயது மகளின் புகைப்படத்தை மார்த்தாண்டத்தைச் சேர்ந்த பா.ஜ.க பொருளாதாரப் பிரிவு மாவட்ட துணைத் தலைவர் சுரேஷ் என்பவர் எடுத்துள்ளார். அந்தச் சிறுமியின் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றம் செய்து ஆபாசமாகச் சில கருத்துகளையும் பதிவேற்றம் செய்துள்ளார்.

தன் மகள் குறித்த அந்தப் பதிவை பார்த்து அதிர்ச்சியடைந்த தேங்காய்ப்பட்டணத்தைச் சேர்ந்த நபர், இது குறித்து நாகர்கோவில் சைபர் க்ரைம் பிரிவில் புகார் அளித்தார். அது குறித்து விசாரித்த சைபர் க்ரைம் போலீஸார், பதிவிட்டவர் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த பா.ஜ.க பொருளாதாரப் பிரிவு துணைத் தலைவர் சுரேஷ்குமார் என்பது தெரியவந்தது. சிறாருக்கு எதிரான விவகாரம் என்பதால், நடவடிக்கைக்காக குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குப் பரிந்துரை செய்தனர்.

இது குறித்து குளச்சல் அனைத்து மகளிர் போலீஸார் விசாரணை நடத்தி போக்சோ பிரிவில் வழக்கு பதிவுசெய்தனர். சிறுமியின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டதுடன், தரக்குறைவாகவும், ஆபாசமாகவும் கருத்து பதிவிட்ட மார்த்தாண்டம் சாங்கையைச் சேர்ந்த சுரேஷ்குமார் (46) மீது வழக்கு பதிவுசெய்த போலீஸார், அவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இது குறித்து குளச்சல் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தனலட்சுமி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.



















