Jana Nayagan release ஆவதில் சிக்கல், நீதிமன்றத்தில் இன்று நடந்தது என்ன? | PMK | ...
திருப்பரங்குன்றம் : ``இரண்டு காரணங்களால் இந்த தீர்ப்பு செல்லாது" - வழக்கறிஞர் வாஞ்சிநாதன்
திருப்பரங்குன்றம் மலைத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் எனக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவு திருப்பரங்குன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நீதிபதியின் இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்திருந்தது. அந்த வழக்கு இன்று மதுரை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள், ``திருப்பரங்குன்றம் மலையிலுள்ள தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் தமிழக அரசின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்த விவகாரத்தில் தனி நீதிபதி உத்தரவு செல்லும். எனவே, திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தூணில் தீபம் ஏற்றலாம்" எனக் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த வழக்கறிஞர் வஞ்சிநாதன், ``தீர்ப்பின் முழுமையான நகல் இப்போதுவரை வரவில்லை. முதற்கட்டமாக நீதிமன்றத்தில் சொல்லப்பட்ட விஷயங்களிலிருந்து எனது முதற்கட்ட கருத்தை மட்டும் பகிர்கிறேன்.
முதலாவது:
இன்று நீதிபதிகள் வாசித்த தீர்ப்பின்படி கவனித்தால்கூட, இந்த தீர்ப்பு செல்லத்தக்கதல்ல. சட்டப்படியான தீர்ப்பும் அல்ல. ஏற்கனவே உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் இரண்டு முறை வழங்கிய தீர்ப்பை, மீண்டும் இரண்டு நீதிபதிகள் பரிசீலிக்க முடியுமா என்றால் முடியவே முடியாது.
இந்த வழக்கில் 100 சதவிகிதம் முன்தீர்ப்பு தடை என்பது பொருந்தும். தர்காவில் ஆடு,கோழி வெட்டக்கூடாது என அனுமன் சேனா உள்ளிட்ட சில இந்து அமைப்புகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள்.
இந்த வழக்கு நீதிபதிகள் நிசாபானு, ஸ்ரீமதி ஆகியோர் அடங்கிய பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கில் நீதிபதி நிசாபான, அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்தார். நீதிபதி ஸ்ரீமதி, ' தர்காவில் ஆடு, கோழி வெட்டும் பழக்கம் அங்கு பலகாலமாக இருக்கிறது என்றால், சிவில் நீதிமன்றத்தை அணுகி அந்த பழக்கத்தை உறுதி செய்ய வேண்டும்" என உத்தரவிட்டார்.

இரண்டு நீதிபதிகளுக்கிடையே முரண்பட்ட கருத்து இருந்ததால், மூன்றாவது நீதிபதியான விஜயகுமார் அவர்கள் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அவர், `172.2 ஏக்கர் திருப்பரங்குன்ற மாலை மொத்தமும் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால், தொல்லியல் துறை அனுமதியோடு தான் அங்கு எந்த நிகழ்வையும் நிகழ்த்த முடியும். எனவே சிவில் நீதிமன்றத்தை நாடுங்கள்' என உத்தவிட்டார். மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வின் தீர்ப்பில், இரண்டு நீதிபதிகள் சொன்ன தீர்ப்பு, இந்த இரண்டு நீதிபதிகளை கட்டுப்படுத்தும். நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதனும் கட்டுப்பட்டவர்.
தர்காவின் பழக்க வழக்கத்தை சிவில் நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டியப் பொறுப்பு தர்கா தரப்புக்கு இருக்கிறது என்றால், அந்த மூன்று நீதிபதிகள் தீர்ப்பின்படி தர்க்கா பக்கத்தில் இருக்கக்கூடிய தீபத்தூண் அல்லது சர்வே தூண் அல்லது வெறும் கிரானைட் தூண் என்று சொல்லக்கூடிய அந்த தூணில் கார்த்திகை தீபம் ஏற்றும் வழக்கம் இருந்தது என்பதை ராம ராமரவிகுமார் போன்ற இந்த வழக்கை தொடர்ந்தவர்கள் நிரூபிக்க வேண்டியது அவர்கள் பொறுப்பு. மத விவகாரத்தில் எல்லா மதத்துக்காரர்களுக்குமான உரிமையை அரசியல் சாசனம் வழங்குகிறது.
இரண்டாவது:
இந்த கார்த்திகை தீப பிரச்னையில 5 தீர்ப்புகள் இருக்கிறது. அதில் இரண்டு டிவிஷன் பெஞ்ச் தீர்ப்பு. 1923-ல் மதுரை மூன்றாவது சார்பு நீதிமன்ற நீதிபதி ராமஐயரும் இந்த பிரச்னைக்கு தீர்ப்பளித்திருக்கிறார். அதை எதிர்த்து அன்று உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், அன்றைய ப்ரிவியூ கவுன்சில் இறுதியாக இந்த வழக்கை தீர்ப்பளித்து தீர்த்து வைத்தது. அந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு இன்னைக்கும் சட்டப்படி செல்லும். அந்த தீர்ப்பை ராமரவிகுமார் உள்ளிட்ட அந்த கும்பலும் மறுக்கவில்லை.
அந்த தீர்ப்பில்,`` 1862, 1912 என இரண்டுமுறை மலை உச்சியில் தர்கா அருகே இருக்கக்கூடிய இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றக்கூடிய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அந்த முயற்சி அன்றைய அரசால் முறியடிக்கப்பட்டது. தர்கா அருகே இருக்கும் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றக்கூடிய வழக்கம் கிடையாது." என அன்றைய உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, அந்த தீர்ப்புக்கு முரணாக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. எனவே இது செல்லாது." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.


















