49-வது புத்தகக் காட்சி: `எழுத்துக்களைப் படிக்க படிக்க எண்ணங்கள் மலரும்..!' - முத...
கேரளா: நீதிமன்ற ஆதாரத்தை அழித்த வழக்கில் 3 ஆண்டுத் தண்டனை; திருவனந்தபுரம் எம்எல்ஏ-வின் பதவி பறிப்பு
கேரள மாநிலம் திருவனந்தபுரம் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருப்பவர் ஆண்டனி ராஜூ. ஜனாதிபத்திய கேரளா காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவரான இவர் 2021 முதல் இரண்டரை ஆண்டுகள் கேரள போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார். வழக்கறிஞரான ஆண்டனி ராஜூ முன்பு வழக்கறிஞர் பணி செய்துவந்தார்.
1990-ம் ஆண்டு ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரூ ஸால்வதோர் என்பவர் விமானம் மூலம் கேரளா வந்தபோது, திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வைத்து அவரைப் பரிசோதித்தபோது உள்ளாடையில் மறைத்து வைத்து 2 பாக்கெட் போதைப்பொருட்கள் கடத்தி வந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த வழக்கு திருவனந்தபுரம் செஷன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது. அப்போது, ஆண்ட்ரூ ஸால்வதோர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞருக்கு ஜூனியர் வழக்கறிஞராகப் பணிபுரிந்த ஆண்டனி ராஜூ, கோர்ட்டில் உதவியாளராகப் பணிபுரிந்த ஜோஸ் என்பவரின் உதவியுடன் கோர்ட் கஸ்டடியில் இருந்த உள்ளாடையை வெளியே எடுத்துவந்தார்.
பின்னர், அதை வெட்டி சிறிய அளவில் தைத்து மறுபடியும் கோர்ட் கஸ்டடியில் வைத்துவிட்டார். அந்த வழக்கில் உள்ளாடையின் அளவில் வித்தியாசம் இருந்ததாகக் கூறி ஆண்ட்ரூ ஸால்வதோர் விடுவிக்கப்பட்டார்.
பின்னர் மற்றொரு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆண்ட்ரூ ஸால்வதோர், அவருடன் சிறையில் இருந்த சக கைதியிடம் கோர்ட் கஸ்டடியில் இருந்த உள்ளாடையை வெட்டி சிறிதாக்கி தண்டனையில் இருந்து தப்பித்த விவரத்தைத் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து இந்த விவகாரம் வெளிப்பட்டது.

இந்தச் சம்பவம் குறித்து விசாரணை அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில் 1994-ம் ஆண்டு வழக்குப் பதியப்பட்டது.
குற்றம் செய்தவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட உள்ளாடையில் அளவை மாற்றி ஆதாரங்களை அழித்ததாக கோர்ட் ஊழியர் ஜோஸ் மற்றும் ஆண்டனி ராஜூ ஆகியோர் மீது 1994-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நெடுமங்காடு ஜூடீசியல் ஃபர்ஸ்ட் கிளாஸ் கோர்ட்டில் நடந்து வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நெடுமங்காடு ஃபர்ஸ்ட் கிளாஸ் கோர்ட் ஆதாரங்களை அழித்ததாக முன்னாள் அமைச்சர் ஆண்டனி ராஜூ மற்றும் ஜோஸ் ஆகியோருக்கு தலா 3 ஆண்டுச் சிறைத்தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து கடந்த சில நாட்களுக்கு முன் தீர்ப்பளித்தது.

எம்.பி, எம்.எல்.ஏ உள்ளிட்ட மக்கள் பிரதிநிதியாக இருப்பவர்கள் 2 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை பெற்றால் அவர்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என மக்கள் பிரதிநிதிகளுக்காக 2013-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் அளித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
மேலும், தண்டனைக் காலம் முடிவடைந்த தேதியில் இருந்து ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடக்கூடாது எனவும் அந்தச் சட்டம் கூறுகிறது. அதன்படி ஆண்டனி ராஜூ-வை எம்.எல்.ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் தற்போது ஜாமினில் வெளியே உள்ள ஆண்டனி ராஜூ தரப்பு மேல்முறையீடு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதற்கிடையே ஆண்டனி ராஜூ-வை பார் கவுன்சிலில் இருந்து நீக்கம் செய்யும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
கிரிமினல் வழக்கில் தண்டனை பெற்று ஒரு எம்.எல்.ஏ தகுதிநீக்கம் செய்யப்படுவது கேரளாவில் முதன்முறை ஆகும்.



















