ஶ்ரீதர் வேம்பு விவாகரத்து வழக்கு: 1.7 பில்லியன் டாலர் பாண்ட் இழப்பீடு வழங்க வேண்...
Bharat Taxi: ஓலா, உபர்-க்குப் போட்டியாக அரசாங்கத்தின் டிராவல் ஆப்! சென்னைக்கு எப்போ வருது?
டாக்ஸி சேவையைப் பொறுத்தவரை உலகளவில் உபர்தான் சீனியர். ஆனால், இந்தியாவில் 2010-ல் ஓலா வந்ததைத் தொடர்ந்து, 2013-ல்தான் உபர் வந்தது. அப்புறம் ரேபிடோ. இப்போது Red Taxi பிரபலம். இப்படி டிராவல் ஆப் டாக்ஸி சேவைகளுக்குப் பஞ்சமே இல்லை. இவை எல்லாமே தனியார் ஆப்கள்.
இப்போது மத்திய அரசாங்கமே ஒரு டிராவல் ஆப்பைத் தொடங்கி, அதை நடைமுறையும் படுத்திவிட்டது. அதன் பெயர்தான் Bharat Taxi. முதன் முதலில் இதை டெல்லியில்தான் ஓட்டம் பார்த்திருக்கிறார்கள்.

போன வாரம், மோட்டார் விகடன் சார்பாக ஒரு கார் டெஸ்ட் டிரைவுக்காக டெல்லி வரை சென்றபோது, சும்மா பாரத் டாக்ஸியை ஆப்பில் இன்ஸ்டால் செய்து என் மீடியா நண்பர்களுடன் முயற்சித்தும் பார்த்தோம். ஒர்க்அவுட் ஆகும்போல் தெரிகிறது. காரணம், இது கமிஷன் அடிப்படையில் இயங்கும் ரைடு ஹெய்லிங் சர்வீஸ் இல்லை. பயணத்துக்காக நாம் கொடுக்கும் பணம் முழுதும் டிரைவருக்கே சொந்தம் என்பதால், டிரைவர்கள் உற்சாகமாகவே இருக்கிறார்கள். வழக்கமான ஆப்கள் மாதிரி டிரைவர் மற்றும் வாகன ட்ராக்கிங் என எல்லா தொழில்நுட்பங்களும் இதில் உண்டு.
இப்போது வரை சுமார் 51,000 டிரைவர்கள், இந்த பாரத் டாக்ஸியில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளார்களாம். தலைநகரத்தில் மட்டும் சுமார் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளர்கள் இந்த ஆப்பை இன்ஸ்டால் செய்து பயனடைந்து வருகிறார்களாம். தினசரி 40,000 புக்கிங் வரையும் போகிறதாம். இந்த பாரத் டாக்ஸியை இயக்குவது, மத்திய கூட்டுறவு அமைச்சகம் (Ministry of Cooperation) தலைமையில் இயங்கும், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட Sahkar Taxi CoOperative Ltd எனும் அமைப்பு.

முதன் முதலில் இதை டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில்தான் இயக்கி, சோதனை செய்திருக்கிறார்கள். இதை மத்திய அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்திருக்கிறார். இந்த கோ-ஆப்பரேட்டிவ் அமைப்பு, டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (DMRC) மற்றும் டெல்லி ட்ரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் (DTC) என இரண்டுடனும் பார்ட்னர்ஷிப் வைத்துச் செயல்படுவதால், டெல்லி கம்யூட்டர்கள் எளிதில் மெட்ரோ டிக்கெட் எடுப்பது, பஸ் டிக்கெட் எடுப்பது போன்றவற்றுக்கும் இந்த ஆப் பயன்படுகிறதாம். இந்த ஆப் கூகுள் ப்ளே ஸ்டோரில் 9-வது இடத்திலும், ஆப்பிள் ஆப் ஸ்டோரில் 13-வது இடத்திலும் உள்ளதாகச் சொல்கிறார்கள்.

டெல்லியில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்த மாதங்களில் மும்பை, பெங்களூரு - அப்படியே சென்னைக்கும் பாரத் டாக்ஸி வரப்போகிறதாம். வரட்டும்; ஓலா, உபர் மாதிரி வாடிக்கையாளர்களிடம் எக்ஸ்ட்ரா காசு கேட்காமல் இருந்தால் ஓகேதான்!



















