'பராசக்திக்கு U/A சான்றிதழ்!' - திட்டமிட்டப்படி நாளை ரிலீஸ்!
பாமக : `நான்முனையிலும் முட்டுக்கட்டை' - ராமதாஸ் முன் இருக்கும் வாய்ப்புகள் என்னென்ன?
தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தலுக்கான வேலைகளை அனைத்துக் கட்சிகளும் பரபரப்பாக திட்டமிட்டு வருகின்றனர். இந்த தேர்தலில் எல்லாக் கட்சிகளுக்கும் ஒரு அடைக்கல இடம் கிடைக்கும் என்றச் சூழலில் தனித்து விடப்பட்டிருக்கிறார் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் என்ற செய்தி அரசியல் வட்டத்தில் கவனம் பெற்றிருக்கிறது. 2016-ம் ஆண்டின் சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க-வுடன் People's Welfare Front (PWF) என்றக் கூட்டணியில் பங்கேற்றது.
தேர்தல் முடிவில் 5.3 சதவிகித வாக்குகள் பெற்ற பா.ம.க ஒரு தொகுதியிலும் வெற்றிப்பெறவில்லை. 2021-ம் ஆண்டு சட்டம்ன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியில் இடம்பெற்று 23 தொகுதிகளில் போட்டியிட்டு, 5 இடங்களை மட்டுமே வென்றது.

2026 தேர்தலிலும் அதிமுக கூட்டணியில் பா.ம.க கூட்டணி அமைக்கும் என எதிர்பாக்கப்பட்ட நிலையில்தான் பா.ம.க-வுக்குள் உறவுச் சிக்கல் வெடித்தது. பா.ம.க நிறுவனர் ராமதாஸுக்கும் அவரின் மகன் அன்புமணிக்கும் இடையே பிரச்னை வெடித்தது.
இருவரும் தன் ஆதரவளார்களை தனித்தனியே திரட்டி பொதுக்கூட்டம், பொதுக்குழு என நடத்திக்கொண்டார்கள். ராமதாஸ் ஒருபடி மேலேச் சென்று அன்புமணி என் மகனே அல்ல என்றளவு விரிசல் வீரியமானது.
இதற்கிடையில், இருவரும் பா.ம.க-வை சொந்தம் கொண்டாடும்போது கட்சி யாருக்கானது என்பதில் வந்து நின்றது. இதற்கிடையே பா.ம.க தலைவராக அன்புமணியை அங்கீகரித்து கடிதம் அனுப்பியது தேர்தல் ஆணையம்.
இன்னொருபக்கம் பா.ம.க-வின் தேர்தல் சின்னமான மாம்பழம் சின்னத்தை இரு தரப்புக்கும் ஒதுக்க முடியாது என டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது. அதனால், டெல்லி நீதிமன்ற, ``(அப்பா - மகன்) உங்கள் இருவருக்குள்ளும் இருக்கும் பிரச்னையை சிவில் நீதிமன்றத்தில் முறையிட்டு தீர்த்துக்கொள்ளுங்கள்" எனக் கூறியது.
அதனால் தற்போது பா.ம.க-வின் தேர்தல் சின்னத்துக்கும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இதற்கிடையில், ராமதாஸ் நடத்திய பொதுக்குழுவில் அன்புமணியை தலைவர் பதவியிலிந்து நீக்கிவிட்டதாக, அதிகாரப்பூர்வ கடிதத்தை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியிருக்கிறார்.

அதே நேரம், அன்புமணி நேற்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்து என்.டி.ஏ கூட்டணியில் பா.ம.க இணைவதாக அறிவித்திருக்கிறார். அன்புமணி பா.ம.க-வுக்கு 17 முதல் 23 தொகுதிகள் மற்றும் ஒரு நாடாளுமன்றத் தொகுதி ஒதுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்த நிலையில், ``17.12.2025 முதல் மருத்துவர் அய்யாவே தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு செயற்குழு மற்றும் பொதுக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியபடி அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியுடன் தேர்தல் கூட்டணி என்று அன்புமணியுடனோ அல்லது வேறு எவரிடமோ எந்த அரசியல் கட்சியும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த இயலாது.
அன்புமணி பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக தேர்தல் கூட்டணி பேசியதாக செய்தி வெளியாகி உள்ளது. அந்த தகவல் நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல். அப்படி ஒரு கூட்டணி பேச்சு நடந்திருந்தால் அது சட்ட விரோதம்." எனக் காட்டமாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
ஒரு பக்கம் கட்சியை பலப்படுத்த வேண்டும், இன்னொருபக்கம் பா.ம.க-வின் மாம்பழச் சின்னத்துக்கான சட்ட சிக்கல்களை எதிர்க்கொள்ள வேண்டும், இது தவிர தேர்தலுக்கான கூட்டணியை உருவாக்க வேண்டும் என்ற முக்கோணச் சிக்கலில் சிக்கியிருக்கிறார் ராமதாஸ்.

இந்த நிலையில், இன்னும் ராமதாஸ் சந்திக்கவிருக்கும் சிக்கல்கள் என்னென்ன? என்பது குறித்து அரசியல் ஆய்வாளர்கள் சிலரிடம் பேசினோம். அவர், ``அன்புமணி பா.ம.க அதிமுக பக்கம் சேர்ந்துவிட்டதால் ராமதாஸுக்கு அதிமுக இப்போது உரிய இடமாக இருக்காது. அதனால்தான், கூட்டணி குறித்த அறிவிப்பு வந்த உடனே, 'அது சட்டவிரோதம்' என அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
ஒருவேளை அதிமுக-வுடன் கூட்டணி வைக்கும் எண்ணம் அவருக்கு இருந்திருந்தால் கூட அதில், தீ வைத்திருக்கிறார் அன்புமணி. அதனால், ராமதாஸுக்கு த.வெ.க, தி.மு.க என இரண்டு விருப்பத் தேர்வுகள் இருக்கின்றன.
ஒருவேளை ராமதாஸ் த.வெ.க-வை தேர்வு செய்தால் அவருக்கான மரியாதை, அனுபவத்துக்கான ஒழுங்கு என எல்லாவற்றுக்கும் த.வெ.க இறங்கி வரவேண்டும் என எதிர்பார்ப்பார். அது கிடைக்குமா என்றக் கேள்விக்கு பதில் கிடைக்கும் வரை த.வெ.க கூட்டணி என்பது சாத்தியமில்லாத ஒன்று.
இன்னொருபக்கம் இருப்பது தி.மு.க. கடந்த மூன்று தேர்தல்களிலும் பா.ம.க இல்லாமல் தேர்தலை சந்தித்த கட்சி திமுக. அதில் 2021-ல் ஆட்சியையும் கைப்பற்றியிருக்கிறது. எனவே, பா.ம.க இப்போது கூட்டணிக் கதவை தட்டுவது கௌரவமாக இருக்காது.
ஒருவேளை ராமதாஸின் பா.ம.க திமுக-வுடன் பேச்சுவார்த்தை நடத்தினால், அது தி.மு.க-வுக்கு சிக்கலாம முடியும். ஏற்கெனவே ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு எனக் கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணிக் கட்சிகளால் விழி பிதுங்கி இருக்கும் தி.மு.க, பா.ம.க-வுக்கு இடம் ஒதுக்க முடியாமல் திணறும்.
இன்னும் சிலக் கட்சிகள் தி.மு.க கூட்டணிக்கு வருவதற்கான சூழல் நிலவுகிறது. அது தவிர தி.மு.க கூட்டணியில் வி.சி.க இருக்கிறது. ராமதாஸ் வருகையை வி.சி.க எப்படி எதிர்கொள்ளும் என்றக் கேள்வியும் இருக்கிறது. இத்தகைய சூழலில் கூட்டணி அமைக்கும் விவகாரம் ராமதாஸுக்கு கொஞ்சம் சிரமமான காரியம்தான்.
இதுமட்டுமில்லாமல், ஒரு கட்சிக்காக அப்பா மகன் என இருவரும் போட்டிப்போட்டுக்கொண்டிருந்த, இந்த தேர்தல்தான் யாருக்கு பலம் அதிகம் என்ற தீர்மானத்தை மக்களுக்கு கொடுக்கும். எனவே, பலம் என்ன என்பதைத் தெரியாமல் கூட்டணியில் எப்படி தொகுதிகளை ஒதுக்க முடியும்? என்றக் கேள்வி எழுவது யதார்த்தம்.
சரி... அ.தி.மு.க-விலே ஐக்கியமாகிவிடலாம் என ராமதாஸ் யோசிப்பதற்கு முன்பே, அன்புமணி அதிமுகவில் இரண்டறக் கலந்துவிட்டார். சமீபத்தில் நடந்த பொதுக்குழுவில் பேசிய ராமதாஸ், ``அன்புமணி ஆர்.எஸ்.எஸ்-ஸின் அடிமை" எனப் பேசியிருந்தார். அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து நீக்கி, ``அன்புமணிக்கும் பா.ம.க-வுக்கும் சம்பந்தமில்லை" என பகிரங்கமாக அறிவித்தார்.

ஒருகட்டத்தில் "அன்புமணி என் மகனே அல்ல" என்றெல்லாம் பேசியிருக்கிறார். எனவே, இவ்வளவு நடந்தப்பிறகும் ராமதாஸ் அன்புமணியுடன் கூட்டணிக்காக இணைவதற்கு வாய்ப்பில்லை. மேலும், ராமதாஸ் பேசிய வார்த்தைகள், அவர் எடுத்த முடிவுகள் மூலம் அவர்தான் உண்மையான பா.ம.க என நம்புகிறார் என்பதை அறிய முடிகிறது.
இதுதவிர நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் "எப்போதும் தனித்துதான் போட்டியிடுவேன்" என்ற கொள்கையில் இப்போதுவரை உறுதியாக இருக்கிறார்.
எனவே, இந்தத் தேர்தல் தி.மு.க கூட்டணி, அ.தி.மு.க கூட்டணி, த.வெ.க, நாம் தமிழர் என நான்முனைப் போட்டியில் ராமதாஸுக்கு நான்கு திசையிலும் கதவுகள் மூடப்பட்டிருக்கிறது. அடுத்து ராமதாஸ் அவரின் அனுபவத்திலிருந்து அவர் எடுக்கப்போகும் முடிவுதான் அவரையும், அவர் தலைமையிலான பா.ம.க-வையும் காப்பாற்றும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

















