Bigg Boss Tamil 9: கடைசி வாரத்தில் வெளியேறிய வைல்டு கார்டு போட்டியாளர்!
திண்டுக்கல்: ஜாமீனில் வந்த 21 நாள்களில் கணவன் - மனைவி வெட்டி படுகொலை; பின்னனி என்ன?
திண்டுக்கல் யாகப்பன்பட்டியைச் சேர்ந்தவர் ஜேசுராஜ் (வயது 41). மீன் வியாபாரி. இவர் நேற்று கொசவபட்டியில் புதிதாக மீன் கடை வைப்பதற்காக இடம் பார்த்துவிட்டு அவரது மோட்டார் சைக்கிளில் நத்தத்திலிருந்து திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது ஆர்.எம்.டி.சி காலனி அருகே வந்தபோது திடீரென பின்னால் வந்த கார் ஒன்று ஜேசுராஜ் மீது மோதியது.
இதில் நிலை தடுமாறி ஜேசுராஜ் கீழே விழுந்தபோது காரில் இருந்து இறங்கிய மர்ம நபர்கள் திடீரென அவரை கத்திகளால் தாக்கினர். இதனால் உயிருக்குப் பயந்து சாலையில் ஓடினார். கொலை வெறி கும்பல் அவரை விரட்டிச் சென்று வாளால் வெட்டி தலையைச் சிதைத்தனர். இதனால் உயிருக்குப் போராடிய நிலையில் ஜேசுராஜ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகத் துடிதுடித்து உயிரிழந்தார்.
இதையடுத்து கொலைவெறி அடங்காத கும்பல் யாகப்பன்பட்டியில் உள்ள அவரது இரண்டாவது மனைவி தீபிகாவையும் வீட்டிலிருந்து வெளியே அழைத்து வெட்டி படுகொலை செய்தனர். இதை தடுக்க சென்ற அவரது மகனுக்கும், உறவினர் மகளுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. சரிந்து விழுந்த தீபிகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 2 பேரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு எஸ்.பி. பிரதீப், டி.எஸ்.பி சங்கர், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் வந்து தீவிர விசாரணை நடத்தினர்.
பழிக்குப் பழி கொலையா?
இது குறித்து போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ரியல் எஸ்டேட் அதிபரும் திமுக பிரமுகருமான மாயாண்டி ஜோசப் என்பவரும் ஜேசுராஜூம் உறவினர்களாக இருந்துள்ளனர். ஊரில் உள்ள மாதா கோவில் திருவிழாவை ஜேசுராஜ் தலைமை தாங்கி நடத்தி வந்துள்ளார். அப்போது கோவில் கணக்கு வழக்கில் முறைகேடுகள் நடந்து உள்ளதாகக் கூறி தலைமை பதவியில் இருந்து ஜேசுராஜை நீக்கியுள்ளனர்.

தலைமைப் பதவி பறிபோனதற்கு மாயாண்டி ஜோசப்தான் காரணம் என்று நினைத்த ஜேசுராஜ், அவருடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2024 மே மாதம் 23 ஆம் தேதி அன்று மாயாண்டி டாஸ்மார்க் கடையிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் மதுபான பாட்டில்களை ஏற்றி வந்து கொண்டிருந்த பொழுது ஜேசுராஜ், தன்னுடைய கூட்டாளிகள் நான்கு பேருடன் சென்று மாயாண்டியைக் கொலை செய்துள்ளார்.
இதில் ஜேசுராஜ் முதல் குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ஜேசுராஜிவின் இரண்டாவது மனைவி தீபிகா மதுரை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்து கடந்த 19.12.25 அன்று ஜேசுராஜிவைப் பிணையில் எடுக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த மாயாண்டி ஜோசப்பின் உறவினர்கள், ஜேசுராஜின் நடவடிக்கைகளைக் கண்காணித்து அவரை வெட்டி படுகொலை செய்துள்ளனர்.

மேலும் வழக்கிற்கு உதவியாக இருந்த இரண்டாவது மனைவி தீபிகாவையும் அவரது வீட்டிற்கு வெளியே வைத்து வெட்டி படுகொலை செய்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஜெயிலில் இருந்து வெளியே வந்த 21 நாளில் கணவன் மற்றும் மனைவியை வெட்டி படுகொலை செய்த சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.














