Bigg Boss Tamil 9: கடைசி வாரத்தில் வெளியேறிய வைல்டு கார்டு போட்டியாளர்!
`இது கடவுள் கொடுத்த பொறுப்பு' - யாசகம் பெற்று குளிரிலிருந்து ஏழைகளை பாதுகாக்கும் யாசகர் ராஜு
வடமாநிலங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. காஷ்மீரில் பனிப்பொழிவு இருக்கிறது. இதனால் மக்கள் மாலை நேரத்திலேயே வீட்டிற்குள் சென்று முடங்கிவிடுகின்றனர். காலை 10 மணிக்கு பிறகுதான் வெளியில் வருகின்றனர். வீடு இல்லாத ஏழைகள் இந்த குளிரிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள கடுமையாக போராடி வருகின்றனர். பஞ்சாப் மாநிலத்தில் அது போன்று கஷ்டப்படும் ஏழைகளுக்கு யாசகம் பெற்று வாழ்பவர் உதவி செய்து வருகிறார்.
அங்குள்ள பதன்கோட் என்ற இடத்தில் யாசகம் பெற்று வாழ்பவர் ராஜு. இவர் தனது பகுதியில் வீடு இல்லாமல் தெருக்களில் வாழும் ஏழைகளை கண்டறிந்து அவர்களுக்கு இலவசமாக போர்வை வழங்கி வருகிறார். பொதுமக்கள் ஒவ்வொருவரிடமும் தலா ரூ.10 வாங்கி அதில் கிடைத்த பணத்தை கொண்டு 500 போர்வை வாங்கி தேவைப்படுபவர்களுக்கு இலவசமாக கொடுத்து உதவி இருக்கிறார்.

இது குறித்து ராஜு கூறுகையில், ''தேவைப்படுபவர்களுக்கு உதவும் பொறுப்பை கடவுள் எனக்கு கொடுத்து இருக்கிறார்.
பொதுமக்கள் கொடுக்கும் சிறிய தொகையை கொண்டு இந்த போர்வையை வாங்கி கொடுக்கிறேன். கடவுள் தொடர்ந்து காரியங்களை நிகழ்த்துகிறார். நானும் என் வேலையைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறேன். தற்போது வசிப்பதற்கு இடமில்லாமல் இருக்கிறேன். எனவே அரசு எனக்கு நிரந்தர வீடு வழங்கி உதவி செய்யவேண்டும்''என்று குறிப்பிட்டார். ராஜுவின் முயற்சிகளைப் பாராட்டிய உள்ளூர்வாசிகள், சமுதாயம் அவரிடமிருந்து பாடம் கற்றுக்கொண்டு, பின்தங்கிய மக்களுக்கு உதவ முன்வர வேண்டும் என்று கூறியுள்ளனர்.
ராஜுவின் செயல் சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாகி இருக்கிறது. ராஜு சமூக வலைத்தளத்திற்கு புதிது கிடையாது. கொரோனா காலத்திலும் தேவைப்படுபவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். அவரது முயற்சியை பிரதமர் நரேந்திர மோடி கூட தனது மன்கிபாத் நிகழ்ச்சியில் குறிப்பிட்டு ராஜுவை பாராட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.


















