Bigg Boss Tamil 9: கடைசி வாரத்தில் வெளியேறிய வைல்டு கார்டு போட்டியாளர்!
BB Tamil 9 Day 96: பணப்பெட்டியை எடுத்த கானா வினோத்! அரோரா, விக்ரம், சபரி தூண்டினார்களா?
வினோத்தின் டைமிங் கிண்டல் காரணமாக அவருக்கு ரசிகர்கள் அதிகம் உருவாகியிருக்கிறார்கள். கூடுதலாக, அடிமட்டத்திலிருந்து வருபவர் வெற்றியடைய வேண்டும் என்கிற சென்டிமென்ட் எல்லோருக்குமே இருக்கும். எனவே ‘டைட்டில் வின்னர்’ வரிசையில் வினோத் அண்ணாவும் இருந்தார்.
இப்படியொரு சூழலில் பணத்தை எடுத்துக் கொண்டு அவர் வெளியேறியது சரியான முடிவா? பொறுத்திருந்தால் கோப்பையோடு ஐம்பது லட்சம் ரூபாய் கிடைத்திருக்கும் (பெட்டிப் பணத்தை கழித்துக் கொண்டு) சாத்தியம் இருந்ததே என்று பலருக்கும் தோன்றலாம்.
ஆனால் பிக் பாஸ் என்பது கோக்குமாக்கான திருப்பங்களைக் கொண்டது. எது வேண்டுமானாலும் நிகழலாம். அப்போது ஏமாந்து வெறுங்கையால் செல்வதை விடவும் இந்த முடிவு ஒருவகையில் வினோத்திற்கு நல்லதுதான்.

அன்றாட வாழ்க்கையிலேயே ஒரு பெரிய முடிவை எடுப்பதற்குள் நாம் பல்வேறு வகையில் தத்தளித்து விடுவோம். குழம்புவோம். பிக் பாஸ் போன்ற மைண்ட் கேம் தலைவிரித்து ஆடும் இடத்தில் குழப்பத்திற்கு சொல்லவே வேண்டாம். அதுவும் ‘பணம்’ என்கிற சமாச்சாரம் எவரையும் தடுமாற வைக்கும்.
எதுவாக இருந்தாலும் இது வினோத் எடுத்த முடிவு. அதை மனமார ஏற்று அவரை வாழ்த்துவதே சிறந்த முடிவு. இந்த முடிவிற்கு அவரை தூண்டி விட்டார்களா? திசை திருப்பினார்களா? வினோத் பணம் எடுத்த போது விக்ரம், அரோரா சர்காஸமாக சிரித்தார்களா,... ‘யப்பா.. நிம்மதி… ஒருத்தன் கிளம்பிட்டான்’ என்று மகிழ்ந்தார்களா? என்று ஆராய்வதெல்லாம் அநாவசியமானது.
இருக்கும் ஐந்து பேரில் டைட்டிலுக்கு யார் பொருத்தம்? - ஒரு அலசல்
‘எனக்கு இங்கு கிடைக்கும் பணம்தான் முக்கியம்’ என்று வெளிப்படையாகவே சொல்லிக் கொண்டிருந்தார் அரோரா. ஏறத்தாழ பணத்தை எடுக்கும் முடிவில்தான் இருந்தார் போல. ஆனால் அவரை தடுத்தது, டிக்கெட் டூ பினாலே வென்றதுதான். அப்படியொரு வெற்றியை எட்டி விட்டு, இடையில் திசை மாறுவது புத்திசாலித்தனமல்ல. என்றாலும் வினோத்தின் அறிவிப்பிற்குப் பின்பு, பணப்பெட்டியை அவர் ஏக்கத்துடன் பார்ப்பது போல பிக் பாஸ் ஒரு கோணத்தைக் காட்டியது. (Frame பாருங்கஜி மொமெண்ட்!)
இப்போது ஐந்து பேருக்குள்தான் போட்டி. இதில் சான்ட்ராவை இணைக்கவே முடியாது. ஒரு பழைய ஜோக் இருக்கிறது. தங்களின் ஆண் குழந்தைக்கு பெயர் வைப்பது தொடர்பாக ஒரு தம்பதியருக்குள் சண்டை.

‘என் அப்பாவின் பெயரைத்தான் வைக்க வேண்டும்’ என்று கணவன் சொல்ல, ‘இல்லை. என் அப்பாவின் பெயர்தான்’ என்று முரண்டு பிடிக்கிறார் மனைவி. அந்த வழியாக வந்த ஒரு பெரியவர் பஞ்சாயத்து செய்கிறேன் என்கிற பெயரில், தன்னுடைய அப்பாவின் பெயரையும் நுழைத்து விடுகிறார். சான்ட்ரா ஃபைனலுக்கு வந்த கதை இதுதான்.
ஆக மீதமிருப்பவர்கள் நால்வர். இதில் அதிக பொருத்தமானவராக விக்ரம் இருந்தார். பல நேரங்களில் ஆட்டத்தின் சூத்ரதாரியாக இருந்ததோடு, மற்றவர்களை சகித்துக் கொள்ளும் பொறுமைசாலியாகவும் இருந்தார். ஆனால் அவரது சமீபத்திய செயற்பாடுகள் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தி வைத்திருக்கின்றன. வியானா வேறு வந்து பயங்கரமாக குழப்பிக் கொண்டிருக்கிறார்.
சபரியா, விக்ரமா, அரோராவா - யாருக்கு கோப்பை?
அடுத்தது சபரி. ‘அடடே.. இந்த ஆசாமி கடைசி வரைக்கும் இருந்து கோப்பை வெல்வாரோ?’ என்கிற எண்ணத்தை முதல் வாரத்திலேயே ஏற்படுத்தினார். ஆனால் பிறகு ஆளைக் காணவில்லை. வினோத் மாதிரி இவர் அடிக்கும் டைமிங் கமெண்ட்டுகள் கலகல. பொறுமைசாலி. அதிகமாக சண்டைக்குப் போனதில்லை. மாறாக நிறைய பஞ்சாயத்து செய்திருக்கிறார். கூடுதலாக தனது வெற்றி வாய்ப்பை விட்டு விட்டு சான்ட்ராவிற்கு இவர் உதவியது மிகவும் நல்ல பெயரை வாங்கித் தந்திருக்கிறது. இவர் டைட்டில் அடித்தாலும் ஓகேதான்.
அடுத்தவர் அரோரா. தாமரை இலை தண்ணீர் மாதிரி இந்த ஆட்டத்தில் ஒட்டாமலேயே இருந்தார். துஷார், கம்ருதீன் என்று ரொமான்ஸ், நட்புகளில் மற்றும் பாரு சண்டையில் மட்டுமே இவரது பொழுது கழிந்தது. இது அவருக்கே நன்றாகத் தெரிந்தது. அதை ஒப்புக் கொள்ளவும் செய்தார். ஆனால் ஒரு கட்டத்தில் விழித்துக் கொண்டார். திறமையாக பேசி ‘ஆடு மேய்க்கிற பையனுக்கு இம்பூட்டு அறிவா?’ என்கிற அளவிற்கு வியக்க வைத்தார். மற்றவர்களை சகித்துக் கொள்வதில் பொறுமைசாலி.

‘புலம்பினா பணம்’ டாஸ்க்கில் இவர் வேண்டுமென்றே எதையாவது சொல்லி நடிக்கவில்லை. ‘இந்த வீட்ல சந்தோஷமாத்தான் இருந்தேன்’ எனறு நேர்மையாகச் சொன்னார். ‘பாரு, கம்ருதீன் கிட்ட கூட நல்லது இருக்கலாம்’ என்று சொன்ன தருணம் அற்புதமானது. பொறாமையும் வன்மமும் நிறைந்திருக்கும் பிக் பாஸ் வீட்டில் விதிவிலக்காக ஒரு தூய ஆன்மாவாக இருக்கும் அரோரா டைட்டில் அடித்தால் கூட பொருத்தமானதுதான். சோஷியல் மீடியா மூலம் கேள்விப்பட்டிருந்த இவரது இமேஜ், பிக் பாஸ் வீட்டில் இவரது நடவடிக்கைகளைப் பார்த்த பின்னர் பலருக்கு மாறியிருக்கலாம்.
கடைசி நேர டிவிஸ்ட்டை தருவாரா திவ்யா?
கடைசியாக திவ்யா. வைல்ட் கார்ட் என்ட்ரியில் நுழைந்தவர் கூட டைட்டில் அடிக்க முடியும் என்பதற்கான உதாரணம் அர்ச்சனா. திவ்யாவும் அந்த வரிசையில் வெற்றி பெறுவாரா? ஆரம்பத்தில் சான்ட்ராவுடன் இணைந்து இவர் செய்த அழிச்சாட்டியங்கள் வெறுப்பை சம்பாதித்து தந்தன. பிறகு அங்கிருந்து விலகி தனியாக ஆடினார். யாருக்கு ஒரு பிரச்னை என்றாலும், குறிப்பாக பெண்கள் அவமதிக்கப்படும் போதெல்லாம் துணிச்சலாக குரல் தந்தார்.
எதிர் தரப்பை அனுமதிக்காமல் மூச்சு விடாமல் பேசித் தள்ளுவதும், எளிதில் கோபம் கொள்வதும் இவரது பலவீனம். ஆனால் காற்று இப்போதெல்லாம் திவ்யா பக்கம் அடிக்கிறது. ‘இவர் கூட டைட்டில் அடித்தால் ஓகேதான்’ என்கிற மாதிரி பார்வையாளர்களின் சில சதவீதம் கருதுவதைப் பார்க்க முடிகிறது.

ஒருவேளை வினோத் ஆட்டத்தில் நீடித்திருந்தால் அவரது மதிப்பீடு என்னவாக இருக்கும்? தனது நகைச்சுவைக்காகவும் பாட்டுத் திறமைக்காகவும் பிரத்யேக ரசிகர்களை சம்பாதித்திருந்தார் வினோத். இவரது டைமிங் கமெண்ட்டுகளை தொகுத்தாலே சுவாரசியமாக அமையும். பணம் எடுத்த பிறகு அது சரியா தவறா என்கிற தடுமாற்றத்தில் அழுத போது கூட, கடைசியில் ‘இந்த நோட்டு செல்லுமா பிக் பாஸ்?’ என்று கேட்கும் அளவிற்கு குறும்புத்தனம் கொண்டவர்.
ஆனால் வினோத்தின் பலவீனம் என்னவென்றால் முன்கோபமும் ஒரண்டையும் நட்பிற்காக தவறுக்கு முட்டு கொடுப்பதும்தான். விசேவின் ஆட்சேபத்திற்குப் பிறகு தன்னை மாற்றிக் கொள்ள முயன்றாலும் முன்கோபம் போகவில்லை. அவ்வப்போது திவாகரை ஒரண்டை இழுத்து உருவக்கேலி செய்வது பெரிய பலவீனம். வினோத் டைட்டில் அடிப்பதற்கான தடைகளாக இவை இருந்தன. எனவே பணப்பெட்டியை அவர் எடுத்தது நல்ல முடிவுதான்.
திவாகருக்கு ஏன் இத்தனை பொறாமை? - வீட்டார் கண்டிப்பு
96-ம் நாளின் நிகழ்வுகள். ‘மனிதன் என்பவன் தெய்வமாகலாம்’ என்கிற பாடலை கிச்சன் ஏரியாவில் வினோத் ரசித்துப் பாடிக் கொண்டிருந்தார். கெமி சமையல் செய்து கொண்டே ரசித்துக் கொண்டிருந்தார். ஆனால் திவாகருக்கு அந்தக் காட்சி பிடிக்கவில்லை. ஏதாவது செய்து கவனத்தை தன் பக்கம் ஈர்க்க நினைத்ததோடு, ‘அது மொக்கை பாட்டு’ என்று வேறு சொல்லி விட கெமிக்கு சரியான கோபம் வந்தது.
‘கண்ணதாசன் எழுதிய பாட்டு மொக்கைன்னு சொல்லலாமா?’ என்று சபரி கேட்க ‘அந்தப் பாட்டு எனக்குத் தெரியாது’ என்றார் திவாகர். (யூத்தாமாம்!). “நான் individuality-ஆ இருக்கேன். நீ சினிமா டியுனை வெச்சுதான் பிழைப்பு ஓட்டறே..” என்று வன்மத்தைக் கக்க ஆரம்பித்தார் திவாகர்.

இந்த வசனத்தை திவாகர் கண்ணாடியைப் பார்த்துதான் சொல்லிக் கொள்ள வேண்டும். வினோத் திரைப்பட மெட்டுக்களைப் பயன்படுத்தினாலும் சொந்தமாக வரிகள் எழுதுகிறார். சமயங்களில் சொந்தமாக மெட்டு அமைக்கிறார். ஆனால் திவாகர் செய்வது என்ன? சில திரைப்படங்களின் துண்டுக்காட்சிகளை காப்பிடியத்து பல நூற்றாண்டுகளாக அபத்தமாக நடித்துக் கொண்டிருக்கிறார். அவை எரிச்சலூட்டும் வகையில்தான் இருக்கின்றன.
காமிரா திடீரென்று அப்சராவைக் காட்டியது. ‘ஓ.. இவரும் இந்த வீட்டில்தான் இருக்கிறார்’ என்கிற நினைவே அப்போதுதான் வந்தது. முன்னரும் அப்படித்தான். “எனக்கு சூப்பர் ஸ்டாருன்னு டைட்டில் போட்டாங்க” என்று திவாகர் சீரியஸாக சொல்ல மற்றவர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.
சான்ட்ரா கூட இனி உறவே கிடையாது - திவ்யா திட்டவட்ட அறிவிப்பு
மார்னிங் ஆக்டிவிட்டி. ‘வெளியே சென்ற பிறகு இவருடன் தொடர்பில் இருப்பேன், இவருடன் நிச்சயமாக இருக்க மாட்டேன்’ என்று வழக்கம் போல் சிண்டு முடிக்கும் டாஸ்க். ‘திவ்யாவுடன்’ இருக்க மாட்டேன் என்று திட்டவட்டமாக அறிவித்தார் விக்ரம். (அத்தனை புண்பட்டிருக்கிறார் போல!). அடுத்து வந்த திவாகர், வினோத் பெயரைச் சொன்னவுடன் ‘நாங்க இதை எதிர்பார்த்தோம்’ என்பது மாதிரி வீடு சிரித்தது. பதிலுக்கு திவாகரின் பெயரைச் சொன்னார் வினோத்.
ஆபத்து சமயத்தில் தனக்கு உதவிய சபரியை அண்ணனாக பார்ப்பதாக சென்டியுடன் சொன்ன சான்ட்ரா, வியானாவுடன் தொடர்பு இருக்காது என்றார்.

பிறகு வந்த திவ்யா ‘சான்ட்ராவுடன் இனி ஒட்டும் உறவும் இல்லை. முதுகில் குத்தியவர்’ என்று கடுமையான புகார் வைத்தார். (பிரஜினுடன் இணைத்து தன்னை சான்ட்ரா சந்தேகப்பட்டது தொடர்பாக திவ்யாவின் கோபம் நியாயமே!). ‘விக்ரம் கிட்ட கூட நான் பேச வாய்ப்பிருக்கு. சான்ட்ரா கூட நோ’ என்றார் திவ்யா.
பணப்பெட்டி டாஸ்க். ‘புலம்பினா பணம்’ என்கிற விசித்திரமான டாஸ்க். ஃபைனலிஸ்ட் அனைவரும் பிக் பாஸ் வீடு தொடர்பான நிகழ்வுகளை வைத்து புலம்ப வேண்டும். புலம்பல் நன்றாக இருந்தால் பணம் கிடைக்கும். இல்லையென்றால் பாவக்காய் ஜூஸ்.
போட்டியாளர்களைத் தூண்டி விடும் பிக் பாஸ் -விக்ரம் வாக்குமூலம்
பிக் பாஸ் பகுதியைத் தாண்டி சொந்த விஷயத்திற்குள் போட்டியாளர் செல்லும் போதெல்லாம் பாவக்காய் ஜூஸ் வந்தது. Standup comedian என்பதால் விக்ரம் இலகுவாக புலம்பினார். கனி பக்கம் வந்த போது ஜூஸ் வந்ததால் சட்டென்று திசை மாற்றினார்.
விக்ரம் பேசும் போது ஒரு முக்கியமான விஷயம் அம்பலமானது. தன் போக்கில் நல்லவனாக ஆடிக் கொண்டிருந்த விக்ரமை பிக் பாஸ் அழைத்து ‘உங்க கிரே ஏரியாவும் வரணும்’ என்று நெருக்கடி தந்திருக்கிறார். விக்ரம் சிக்கலில் வார இறுதி பஞ்சாயத்தில் மாட்டிக் கொண்ட போது கைகழுவியிருக்கிறார். பிக் பாஸ் ஃபார்மட்டின் ஒரு சூட்சுமம் இந்த வாக்குமூலத்தின் வழியாக கசிந்தது.
அடுத்து வந்த அரோரா ‘புலம்பறதுக்கு என்ன இருக்கு. நான் சந்தோஷமாத்தான் இருந்தேன்’ என்று உண்மை சொல்லி அதிக ஜூஸ்களை திணறத் திணற குடித்தார். சான்ட்ராவிற்கு தனது கணவர், குழந்தைகளை விட்டால் வேறு எதுவுமே உலகம் கிடையாது போல. மூச்சு விடாமல் புலம்பி சம்பாதித்தார்.

“என் கேரக்டரையே டாஸ்க்கா வெச்சிருக்கீங்களே. வெளில நிறைய புலம்பியிருக்கேன். இந்த வீட்ல திவாகரை வெச்சிக்கிட்டு நான் படற பாடு இருக்கே. ஜேம்ஸ் கேமரூன், கிறிஸ்டோபர் நோலன்லாம் இவரைத் தேடறதா சீன் போடறார். எதுக்கு தெரியாம நாலைஞ்சு முறை ஜெயிலுக்கு போனேன். ராஜாவா ஏத்தி உடனே கீழே தள்ளி விட்டாங்க” என்று புலம்பி 90000 சம்பாதித்தார் வினோத்.
அடுத்து வந்த சபரி “எதுக்கு அடிக்கறாங்கன்னே தெரியலைய்யா.. சும்மா உக்காந்து இருக்கேன்றாங்க” என்று பணத்தோடு டிப்ஸூம் வாங்கிச் சென்றார். இந்த டாஸ்க்கில் பாகற்காய் ஜூஸ் குடிக்காத ஒரே போட்டியாளர் திவ்யா மட்டும்தான்.
பணப்பெட்டியை சடாரென்று தூக்கிய வினோத்
அனைவரும் இந்த டாஸ்க்கில் நிறைய சம்பாதித்துக் கொடுத்து விட்ட பிறகு ‘பெட்டியை எடுப்பதில்’ ஒரு நிழல் போராட்டம் நடந்தது. பணப்பெட்டி அருகே பாவனையாக கையை அரோரா எடுத்துச் செல்ல “வேண்டாம். விளையாட்டுக்கு கூட செய்யாத’ என்று தடுத்தார் சான்ட்ரா.
அதே போல் விளையாடிய வினோத், சட்டென்று பெட்டியைத் தூக்கிக் கொண்டு தன் பெயரை அறிவிக்க அனைவருக்குமே அதிர்ச்சி. குறிப்பாக வெளியில் இருந்து திரும்பியவர்கள், வினோத்திற்கு கிடைக்கும் வரவேற்பை அறிந்திருப்பார்கள். ‘டைட்டில் வின்னராக வரக்கூடியவர்’ இந்த முடிவிற்கு வந்து விட்டாரே என்று அதிர்ச்சியடைந்தாலும் பிறகு சமாளித்துக் கொண்டு வாழ்த்து கூறினார்கள்.

தான் எடுத்து முடிவு சரியா, தப்பா என்கிற தடுமாற்றம் வினோத்திற்கு நிறையவே இருந்தது. ‘எனக்கு இது போதும்..’ என்று ஒவ்வொருவரிடமும் சமாதானம் கூறி அழுது தீர்த்தார். பிக் பாஸ் பேசிய பிறகுதான் அவர் முகத்தில் சிரிப்பு வந்தது.
வினோத் பணத்தை எடுத்த பிறகு அரோரா சிரிச்சாங்க. விக்ரம் சிரிச்சாரு.. சபரி முகத்தில் நிம்மதி.. என்று ஆளாளுக்கு வீட்டில் வம்பு பேசினார்கள். ஒரு தற்செயலான எக்ஸ்பிரஷனை வைத்துக் கொண்டு பெரிய தீர்ப்பை எழுதி விட முடியாது. “நான் சிரிச்சனா.. என்னய்யா கொடுமை இது?” என்று கசப்பாக சிரித்தார் விக்ரம். “நானே பதினெட்டு லட்சம் போச்சேன்னு கவலைல்ல இருக்கேன்” என்றார் அரோரா.
வினோத் பணம் எடுத்தது சரியான முடிவா? அவர் டைட்டில் அடிக்க வாய்ப்புண்டா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

















